
எஸ்.சிவக்குமார், முருங்கை, செங்கல்பட்டு.
*திருச்சிற்றம்பலம் என்றால்....
சிதம்பரம் கோயிலில் நடராஜர் நடனமாடும் இடம் 'திருச்சிற்றம்பலம்'. ஞான வடிவும், ஆகாய மயமும் ஆன பொற்சபை என்பது இதன் பொருள்.
சித் - அறிவு,
அம்பலம் - ஆகாயம்.
பி.சிந்துஜா, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி.
*தாய் வழி, தந்தை வழி குலதெய்வங்களில் முதலிடம் யாருக்கு?
தந்தை வழி குலதெய்வத்திற்கே முதலிடம். அதனால்தான் குழந்தைகளுக்கு முதல் முடிக்காணிக்கையை அங்கு செலுத்துகிறோம்.
எம்.கேசவன், பாலகிருஷ்ணாபுரம், திண்டுக்கல்.
*பக்தனுக்காக தர்ப்பணம் செய்யும் பெருமாள் எங்குள்ளார்?
செங்கல்பட்டு அருகே நென்மேலி கிராமத்தில் 'சிரார்த்த ஸம்ரட்சண நாராயணர்' இருக்கிறார். இது செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில் 5 கி.மீ., துாரத்தில் உள்ளது.
எம்.வசந்தா, அன்னுார், கோயம்புத்துார்.
*எந்த தெய்வத்திற்கு மொச்சை உகந்தது?
சுக்கிரனுக்குரிய தானியம் வெண்மொச்சை. இதையே அம்பாளுக்கும் படைக்கலாம்.
எல்.கருப்பையா, தொட்டப்பநாயக்கனுார், மதுரை.
*அபிஷேகம் செய்த பாலை வீட்டிற்கு எடுத்து வரலாமா?
எடுத்து வரலாம். அதை காய்ச்சாமல் பிரசாதமாக மட்டுமே குடிக்கலாம்.
பி.லட்சுமி, வாஸ்காஸ், டில்லி.
*குபேரலட்சுமி யாகம் வீட்டில் நடத்தலாமா?
குபேரனைப் போல செல்வம் வேண்டுவோர், குபேரலட்சுமி யாகத்தை வீட்டில் நடத்தலாம்.
வி.கலா, தண்டையார்பேட்டை, சென்னை.
*பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பதன் பொருள்...
எளிமையின் வடிவமே பிள்ளையார். மஞ்சள், சந்தனம், பசுஞ்சாணம் என எதிலும் அவரை பிடித்து வைத்து பூஜிக்கலாம்.
ஆர்.பிரசாத், சேமக்கோட்டை, பண்ருட்டி.
*பணபலம், குணநலம் எது முக்கியம்?
பணம் இன்று வரும்; நாளை போகும். நல்ல குணம் என்றும் மாறாது. குணநலம் தான் முக்கியம்.
எம்.ராஜேஷ், சன்னபட்னா, பெங்களூரு.
*அஸ்வமேத யாகம் என்றால் என்ன?
பேரரசரை சக்கரவர்த்தி என அழைப்பர். இவர் நடத்துவது அசுவமேத யாகம். மற்ற நாடுகளுக்கு மன்னரின் பிரதிநிதியாக குதிரையை அனுப்புவர். அதை யாராவது சிறை பிடித்தால் அவருடன் போரிட்டு வெற்றி பெற்றால் தான் யாகத்தை நடத்துவர். குதிரையை(அஸ்வம்) முன்னிட்டு இப்பெயர் வந்தது.
ஆர்.பாலவிநாயகம், மூலக்கரைப்பட்டி, திருநெல்வேலி.
*ஆறு, குளம், கடலுக்கு பூஜை செய்வது சரிதானா?
மிகவும் சரி. நாம் செய்யும் பூஜையை தெய்வம், முன்னோர்கள் ஏற்பது போலவே தெய்வீக சக்தி நிறைந்த ஆறு, குளம், கடல்களும் பூஜையை ஏற்று நம்மை காக்கும்.