
* நான் ஒரு அர்ச்சகர். திருநீறை தண்ணீரில் குழைத்து இடக்கூடாது என்று என்னிடம் சிலர் கூறுகிறார்கள். விளக்கம் தேவை.
ஆர்.சுயம்பு, திருவேற்காடு
காலை குளித்த பிறகும், மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் விபூதியைத் தண்ணீரில் குழைத்துத்தான் இட்டுக் கொள்ள வேண்டும். மற்ற நேரங்களிலும், கோயிலில் பிரசாதமாக விபூதி தரும்போதும் குழைக்காமல் இட்டுக் கொள்ளலாம். அர்ச்சகர்களுக்கும் மற்றவர்களுக்கும் இது பொருந்தும். அர்ச்சகர்களுக்கென தனிச்சட்டம் எதுவும் சாஸ்திர நூல்களில் இல்லை.
* சில குடும்பங்களில் பரம்பரையாக சுமங்கலி பிரார்த்தனை செய்யும் வழக்கம் இல்லை. இப்பொழுது யாராவது சுமங்கலியாக இறந்துவிட்டால் அவருக்காகச் செய்யலாமா?
ஏ.ஆர்.மீனாட்சி, ராமநாதபுரம்
வழக்கில் இல்லாததால் யோசிக்க வேண்டாம். இப்பொழுது சுமங்கலியாக இறந்த வரை உத்தேசித்தாவது சுமங்கலிப் பிரார்த்தனை செய்யத் துவங் கலாம். எல்லா மங்களங்களையும் தரவல்லது.
** 'சும்மா இருப்பதே சுகம்' 'விழி எழு உழை' என்னும் மாறுபாடான வாசகங்கள் உள்ளனவே. இதன் பொருளை எப்படி எடுத்துக் கொள்வது?
ஆ.கிருஷ்ணன், மடிப்பாக்கம்.
நமக்கு எது சவுகர்யம்? சும்மாவே இருந்து விடலாமா? நாலு பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். காரசாரமான விவாதம் ஏற்படுகிறது. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் சண்டை போடுகிறார்கள். நாம் எது சொன்னாலும் அவர்கள் காதில் ஏறாத சூழலில், நாம் சும்மா இருப்பதே சுகம். நமக்குத் தெரிந்தவர் தவறான பாதையில் சென்று திடீர் பணக்காரராகி வசதி வாய்ப்புகளுடன் ஜொலிக்கிறார். நம்மையும் அவரது பாதையில் செல்ல அழைக்கிறார். நாம் யோசிக்க வேண்டும். எப்படியும் ஒரு நாள் அவர் அகப்படுவார். வசதிகளும் பறந்துவிடும். சமுதாயத்திலும் தலை நிமிர முடியாது. எனவே நமக்கு அது வேண்டாம் என்று ஒதுங்கி சும்மா இருப்பதே சுகம். இது போன்ற சந்தர்ப்பங்களுக்காகச் சொல்லப்பட்ட வார்த்தையை சோம்பேறித்தனத்திற்கு உபயோகித்துக் கொள்ளக் கூடாது. விழி- எழு- உழை என்ற பாதையில் சென்றால் உண்மையான மகிழ்ச்சி என்றும் நம் வாழ் வில் நிலைக்கும்.
* வழிபாட்டிற்கு காலை, மாலை இரண்டு வேளையில் எது சிறந்தது?
வி.காந்திமதி, பெரம்பூர்
ஏதாவது ஒரு வேளையைக் கூறிவிட்டால் மற்றைய நேரங்களில் ஜாலியாகப் பொழுது போக்கலாமா? தெய்வ வழிபாட்டிற்கு நேரம் காலமே கிடையாது. ''நற்றவா உன்னை நான் மறக்கிணும் சொல்லும் நா நமசிவாயவே'' என்கிறார் சுந்தரர். மனத்தளவில் மறந்திருந்தாலும், நமது நாக்கு இறைவனுடைய திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். ''நான் நடப்பது உனது ஆலயத்தை வலம் வருதலாகவும், உண்பது உனக்கு யாகம் செய்வதாகவும் ஆகட்டும்'' என்கிறார் ஆதிசங்கரர். வழிபாடு என்பது பூஜை செய்வது மட்டும் கிடையாது. எப்பொழுதும் தெய்வ சிந்தனையுடன் இருப்பதும் தான். காலை மாலை இருவேளையும் வழிபாடு செய்ய வேண்டும். எப்பொழுதும் இறைவனை மனதில் சிந்தித்தும், நாவினால் அவர் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டும் இருக்க வேண்டும்.
* சிவபெருமானுக்கும் நந்திக்கும் குறுக்கே செல்லக்கூடாது என்பது உண்மையா?
ஆர்.கவிதா, வாலாஜாபாத்
உண்மை தான். அது மட்டுமில்லை. தம்பதிகளுக்குக் குறுக்கேயும், குருசிஷ்யன், பெற்றோர் குழந்தைகள் ஆகியோருக்கு குறுக்கேயும் செல்லக்கூடாது. பசுவும் கன்றும் சேர்ந்து நின்றால் அவற்றின் குறுக்கேயும் செல்லக்கூடாது.

