
** திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் கட்டாயம் பார்க்க வேண்டுமா?
அ.கிருஷ்ணசாமி, திருப்பூர்
உறவுமுறையில் பெரியவர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்திற்கு ஜாதகம் பார்ப்பது வழக்கில் இல்லை. பெரியவர்களின் மனமார்ந்த ஆசி கிடைப்பதால் தோஷங்கள் நீங்கி விடும். முன்பின் அறிமுகமில்லாத குடும்பத்தில் சம்பந்தம் செய்து கொள்ளும் போது ஜாதகப் பொருத்தம் பார்த்து செய்வது நல்லது. மணமகன், மணமகள் இவர்களது குணங்கள் மற்றும் எதிர்கால வாழ்க்கை நிலை பற்றி அறிந்து சேர்த்து வைக்கலாம். பொருத்தம் பார்க்க வேண்டாம் என்றால் சுவாமியிடம் பூக்கட்டி வைத்து உத்தரவு கேட்டு திருமணம் செய்யலாம். பெற்றோர், பெரியவர்களின் அறிவுரை திருமண விஷயத்தில் மிக முக்கியமானது.
ராமாயணம், மகாபாரதம் இரண்டையும் படித்தாலே வாழ்க்கைத் தத்துவம் புரிந்துவிடும் என்கிறார்களே! ஏன்?
ஏ.மோகனசுவாமி, கொளத்தூர்
மனித வாழ்வின் அடிப்படையே தர்மம் தான். இதை உணர்த்துவதே இந்த காவியங்களின் நோக்கம். பெண்ணாசையால் விளைந்தது ராமாயணம், மண்ணாசையால் எழுந்தது பாரதம். இந்த இரு ஆசை தான் மனிதனை பாடாய்ப்படுத்துகிறது. இதை விடுத்து, தர்மவழியில் மனிதன் நெறிபிறழாமல் நடக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இறைவன் ராமனாகவும், கண்ணனாகவும் பூமியில் அவதரித்தார்.
கோயிலில் பூஜை நடக்கும்போது பிரகாரம் சுற்றி வரலாமா?
எஸ்.ராமசுப்பிரமணியன், குரோம்பேட்டை
அபிஷேகம், நைவேத்யம் போன்றவை நடைபெறும்போதும், திரையிட்டிருக்கும்போதும், தீபாராதனை நடக்கும்போதும் பிரகாரவலம் வராமல் சந்நிதியில் அமர்ந்திருக்க வேண்டும். பூஜை முடிந்த பின்னரே வலம் வரவேண்டும்.
* ஆண்கள் மருதாணி வைக்கலாமா?
கல்யாணராமன், கொடுங்கையூர்
பண்டைய காலந்தொட்டு செம்பஞ்சுக் குழம்பு மற்றும் மருதாணியால் பெண்கள் அலங்கரித்துக் கொள்வதாக தமிழ் மற்றும் வடமொழிக் காப்பியங்கள் கூறுகின்றன. ஆண்கள் மருதாணி இட்டுக்கொள்ளக்கூடாது என்று எதுவும் இல்லை.
சங்கடஹர சதுர்த்தி விரதத்தை எந்த மாதத்திலிருந்து துவங்க வேண்டும்?
ஜெ.பத்மாவதி, புதுச்சேரி
எந்த மாதத்திலும் துவங்கலாம். பொதுவாக ஆவணி மாத மகா சங்கடஹர சதுர்த்தியில் துவங்குவது விசேஷம்.
* சப்தமாதர் வழிபாட்டின் முக்கியத்துவத்தைக் கூறுங்கள்
வா.சுப்பிரமணியன், மதுரை
மகிஷாசுரன் போன்ற அரக்கர்களை துர்க்கை சம்ஹாரம் செய்தபோது உடனிருந்தவர்கள் சப்தமாதர்கள். இவர்களை வழிபட்டால் எதிரித்தொல்லை நீங்கும். மனதில் பயம் அகலும். எல்லா நன்மைகளும் கிடைக்கும்.