
* காசி சென்று வந்தால் ராமேஸ்வரம் செல்வதும கட்டாயமா?
ப.கு.ராமநாதன், சிதம்பரம்
தேசமக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற உயர்ந்த தத்துவமே காசி- ராமேஸ்வர யாத்திரை. நாம் இங்கிருந்து காசிக்குச் சென்று கங்கையில் நீராடி, விஸ்வநாதரை தரிசித்து அங்கிருந்து கங்கைநீரைக் கொண்டு வந்து ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். வடநாட்டில் உள்ளவர்கள் ராமேஸ்வரம் வந்து, புனிதநீராடி ராமநாதரை தரிசித்து இங்குள்ள கடல் தீர்த்தத்தால் விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இதன் மூலம் யாத்திரை முழுமை பெறுவதோடு, தெய்வத்தின் திருவருளும், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.
** மயானத்தை ருத்ரபூமி என்கிறார்களே ஏன்?
ஜி.ரகுநாதன், சென்னை
தேவாரத்தில், 'காடுடைய சுடலைப் பொடி பூசி' என்று பாடுகிறார் திருஞானசம்பந்தர். மயானச் சாம்பலைப் பூசிக் கொள்பவர் சிவபெருமான். படைத்தலை பிரம்மாவும், காத்தலை விஷ்ணுவும், அழித்தலை ருத்ரனும் செய்கின்றனர். ஒருவருடைய ஆயுள்காலம் முடிந்ததும், எமன் உயிரைப் பறிக்கிறான். இது ருத்ரனின் கட்டளைப்படியே நடக்கிறது. எனவே, தான் நீண்ட ஆயுள் பெற வேண்டி ருத்ராபிஷேகம், மிருத்யுஞ்ஜய ருத்ரஹோமம் போன்றவற்றை செய்கிறோம். உயிர் பிரிந்த உடல்கள் எரிக்கப்பட்ட பிறகும், உயிர்கள் மீதுள்ள கருணையாலும், அவை நல்வினை பெறுவதற்காகவும், சிவன் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொள்கிறார். உலக நன்மைக்காக மயானத்தில் ருத்ரதாண்டவம் ஆடுகிறார். இதனை மாணிக்கவாசகரும் திருவாசகத்தில், 'நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே' என குறிப்பிடுகிறார்.
* பயணத்தின் போது கோபுரத்தைப் பார்த்து வழிபாடு செய்வது சரிதானா?
ஓம் தனபாலசந்திரன், உசிலம்பட்டி
வழிபடுவதற்காகவே உயர்ந்த கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. கோபுரத்தை தெய்வமாகக் கருதி வணங்க வேண்டும். பாடல் பெற்ற அல்லது மங்களாசாசனம் பெற்ற திருக்கோயிலாக இருந்து, அதற்குரிய பாசுரம் தெரிந்திருந்தால், கோபுரத்தை தரிசித்தவாறே மனதிற்குள் பாராயணம் செய்வது நல்லது.
நாம் பின்பற்றும் சாஸ்திர சம்பிரதாயங்கள் காலத்தின் வேகத்திற்குத் தாக்கு பிடிக்குமா?
கே. ஜகந்நாதன், கோவை
சாஸ்திர சம்பிரதாயங்கள் எப்போது தோன்றின என்று அறுதியிட முடியாத பழமையானவை. என்றும் நிலையான கடவுளைப் போல என்றைக்கும் அவை இருக்கும். மாணிக்கவாசகர் திருவெம்பாவையில், 'முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே! பின்னைப் புதுமைக்கும் பெயர்த்தும் அப்பெற்றியனே!' என அருளியுள்ளார். பழமையில் இருந்து வந்தது தான் புதுமை. புறாவின் காலில் ஓலை கட்டி தூது அனுப்பியதன் வளர்ச்சி கடிதம், இமெயில் என காலப்போக்கில் பரிணாமம் பெற்றது. இன்னும் காலத்தின் வேகத்தில் எத்தனை புதுமை ஏற்பட்டாலும், சாஸ்திர சம்பிரதாயங்கள் ஈடு கொடுத்துக் கொண்டு நமக்கு உறுதுணை செய்யும் என்பதை புரிந்து கொண்டு நம்பிக்கை யுடன் அடுத்த தலைமுறையை நெறிப்படுத்துவோம்.