
*வயதில் சிறியவர்களும் காசிக்குச் செல்லலாமா?
சி. குரு ஸ்ரீநிவாசன், புதுச்சேரி
காசி மிகப் பெரிய சிவத்தலம். விசாலாட்சி, கால பைரவர், டுண்டி விநாயகர், தண்டபாணி என எல்லா தெய்வங்களும் அருள்பாலிக்கும் அற்புதத்தலம். வடக்கு நோக்கிப் பாயும் கங்கை நதிக்கரையில் அமைந்திருப்பது இன்னும் சிறப்பு. பெரியவர்கள் செல்லும்போது, அவசியம் குழந்தைகளையும் அழைத்துச் செல்வது அவசியம். காசியைத் தரிசிப்பதுடன் தொல்பொருள் அருங்காட்சியகம், அரண்மனை என அங்கு காண வேண்டிய இடங்கள் ஏராளம். பயணத்தில் கஷ்டம் இருந்ததால், அந்தக் காலத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்வது இயலாததாக இருந்தது. தற்போது ரயில், விமானம் என எல்லா வசதிகளும் இருப்பதால் ஏதாவது சாக்கு போக்கு சொல்ல வேண்டாம்.
* தன்வந்திரி ஹோமம் செய்வதால் உண்டாகும் நன்மை என்ன?
பி. மாணிக்கவாசகம், சாலிகிராமம்
தன்வந்திரி மகாவிஷ்ணுவின் அம்சம். கையில் சங்கு, சக்கரம், அமுத கலசம், அட்டைப்பூச்சி ஏந்தி அருள்பவர். எவ்வளவு கடும் நோயாக இருந்தாலும், குணப்படுத்தி அருள்பவர். மூலிகைகள் கொண்டு தன்வந்திரி மகா மந்திரத் தால் ஹோமம் செய்ய, நோய்நொடி நீங்குவதோடு ஆயுளும் அதிகரிக்கும்.
** கொடி மரத்தில் விழுந்து வணங்கும்போது எந்த திசை நோக்கி விழ வேண்டும்?
கே.எஸ். புனிதவதி, கோவை
கோயில் எந்த திசை நோக்கி இருந்தாலும், நாம் வடக்கு நோக்கியே நமஸ்காரம் செய்ய வேண்டும். புனிதமான விஷயங்களில் நல்ல வார்த்தைகளையே உபயோகிக்கலாமே? இனி கேள்வி கேட்கும் போது எந்த திசை நோக்கி வணங்க வேண்டும் என கேளுங்கள். விழ வேண்டும் போன்றவை வேண்டாமே.
பைரவர் யாருடைய அம்சம்? அவருக்குரிய மலரும், நைவேத்யமும் என்ன?
கே. நடராஜன், மதுரை
பைரவர், வீரபத்திரர், க்ஷேத்ர பாலர் ஆகிய மூவரும் சிவபெருமானுடைய அம்சம் தான். தீய அரக்கர்களை அழித்தபோது பைரவராகவும், தட்சனின் யாகத்தை அழித்தபோது வீரபத்திரராகவும், திருத்தலங்களைக் காக்கும் நிலையில் க்ஷேத்ர பாலராகவும்
போற்றப்படுகிறார். புராண அடிப்படையில் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. வில்வம், செம்பருத்தி, தவிர்த்த மற்ற மலர்களை பைரவருக்கு பயன்படுத்தலாம். சம்பா சாதம், உளுத்தம்பருப்பு கலந்த தயிர்சாதம், அப்பம், மிளகுவடை
ஆகியவை இவருக்குரிய நைவேத்யம்.
கோயில்களில் உயிர்களைப் பலியிடும் வழக்கம் இல்லாதபோது, பலிபீடம் அமைப்பது ஏன்?
வி. பரமசிவம், சென்னை
'பலி' என்றால் உயிர்ப்பலி என்று அர்த்தம் கொள்வது கூடாது. இந்த சொல்லுக்கு 'வழிபாடு' என்ற பொருளும் உண்டு. ஒவ்வொரு கால பூஜை முடிவிலும், விடுபட்ட எல்லா தெய்வங்களுக்கும் நைவேத்யம் அளிக்கும் விதத்தில், பலிபீடத்தில் சாதம் வைத்து நிவேதிப்பார்கள். பலிபீடத்தை வழிபடும் போது, நம்மிடமுள்ள குற்றங்குறைகளை பலியிடுவதாக எண்ணி வணங்க வேண்டும்.