** படைத்தவன் பார்த்துக் கொள்வான் என்று சொல்லும் போது பரிகாரம் செய்வது ஏன்?
பிரபு கருணாகரன், பொள்ளாச்சி
மனிதனுடைய மனமே எல்லாவற்றிற்கும் காரணம். ஜோதிட ரீதியாக ஒருவருக்கு நேரம் சரியில்லை என்று தெரிந்து விட்டால் மனம் படாத பாடு படும். அவர் மனம் அமைதி பெற பரிகாரம் செய்வது ஒன்றே வழி. அவரிடம், 'படைத்தவன் பார்த்துக் கொள்வான்' என்ற வேதாந்த பேச்சு எடுபடுவதில்லை. இயல்பாகவே,'எல்லாம் கடவுளுக்குத் தெரியும்' என்ற பக்குவ எண்ணம் படைத்தவர்கள் ஜோதிடம் பக்கமே வருவதில்லை. பக்குவப்பட்டவர்களுக்கே இந்த நிலை பொருந்தும்.
* வாஸ்து பார்ப்பதை சாஸ்திரம் அனுமதிக்கிறதா? அது அந்த காலத்தில் பின்பற்றப்பட்டதா?
வி.சேதுராமன், தேவகோட்டை
சாஸ்திரங்களில் வாஸ்து பார்ப்பதும் ஒன்று. கோயிலை மையமாக வைத்து ராஜாவின் அரண்மனை, குடிமக்கள் வாழும் இடம், வீட்டின் அமைப்பு எல்லாமே வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டன. ஆனால், மரபில் இருந்து முரண்பட்டு, நன்றாக கட்டப்பட்ட வீட்டை இடிக்கச் சொல்வது, வியாபார ரீதியாக வாஸ்து சாஸ்திரத்தை வளைக்க முயல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது கூடாது.
* மூன்று தெருக்கள் சந்திக்கும் இடத்தில் 'வாஸ்து கணபதி' வழிபாடு செய்தால் நல்லது என்கிறார்களே! உண்மையா?
பாலாசரவணன், சென்னை
இப்படிப்பட்ட இடத்தில் வீடு கட்ட நேர்ந்தால் விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபடுவது காலம் காலமாக உள்ள ஒன்று தான். ஆனால், அவருக்கு 'வாஸ்து கணபதி' என்று புதிய பெயரிட்டு விட்டார்களே என்று தான் வருத்தமாக உள்ளது.
அந்தக் காலம் போல, இந்தக் காலத்திலும் சித்தர்கள் மலையில் வாழ்கிறார்களா! இல்லையா?
ஏ.எஸ்.எம்.ராஜா, பழைய வண்ணாரப்பேட்டை
நிறைய வாழ்கிறார்கள். மலைகளில் மட்டுமில்லாமல் நிலத்திலும் வாழ்கின்றனர். நாம் அடையாளம் கண்டு கொள்ளாத வகையில் வாழ்கிறார்கள். காரணம், இந்தக் கால மனிதர்களின் வாழ்க்கைத் தரம் குறைந்து விட்டதே காரணம். சித்தர் எனத் தெரிந்து கொண்டு, சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள தொடங்கி விடுவார்கள். சொல்லப் போனால், அவரை வைத்து வியாபாரம் ஆரம்பித்து விடுவார்கள். பழநியில் 'சாக்கடை சித்தர்' என்று ஒருவர் இருக்கிறார். அவர் யாருடைய ஆதரவையும் ஏற்காமல் அங்கேயே வசித்து வருகிறார். நேபாளத்தில் இமயமலை சிகரத்தில் அந்தரத்தில் மிதக்கும் சித்தர் ஒருவர் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவரைக் கண்டுபிடிக்கவே பலநாட்கள் ஆனதாம்.
சுபநிகழ்ச்சியின் போது மாவிலைத் தோரணம் கட்டுவதன் நோக்கம் என்ன?
ரா. திரிபுர சுந்தரி, திருக்கோவிலூர்
சுபநிகழ்ச்சிகளுக்குச் செல்லும் நாம் பலவிதமான பொருட்களினால் அலங்கரித்துக் கொண்டு புறப்படுகிறோம். அதுபோல, சுபவிஷயம் நடக்கும் இடத்தையும் மங்கல பொருட்களினால் அலங்கரிப்பது அவசியம். அதில் வாழைமரம், மாவிலைத் தோரணம், கூந்தல் தோரணம் போன்றவை இதில் அடங்கும்.