
** பகீரதப் பிரயத்தனம் என்று சொல்கிறார்களே. அதன் பொருள் என்ன?
சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்
முன்னொரு காலத்தில் ஒரு அரசன் இருந்தான். அவன் எல்லா ஜீவராசிகளையும் துன்புறுத்துவதில் மகிழ்ந்தான். அவனும், அவன் சந்ததியினரும் இறந்த பின், ஆவிகளாக அலைந்து துன்புற்றனர். இந்த வம்சத்தில் வந்த பகீரதன் என்பவன், தன் முன்னோர் நிலையறிந்து அவர்களை கரையேற்றும் வழி கூறுமாறு ஒரு முனிவரை வேண்டினான். ஆகாயத்தில் பாயும் கங்கையை பூமிக்கு வரவழைத்து அதைக் கொண்டு பிதுர்கடன் செய்தால் துன்பம் நீங்கும் என வழி காட்டினார் அவர். இது சாதாரண விஷயமா! வலதுகால் கட்டை விரலை மட்டும் பூமியில் ஊன்றி கடும் தவம் செய்தான். தவசக்தியால் கங்கை பூமிக்கு வந்தது. இதனால் தான், விடாமுயற்சியை 'பகீரத பிரயத்தனம்' என குறிப்பிடுகிறோம்.
* கடவுளுக்கு காலம் நேரம் பார்க்க வேண்டுமா?
கி.சண்முக சுந்தரம், திருப்பூர்
காலநேரம் பார்க்காமலும், காலம் தாழ்த்தாமலும் நினைத்தவுடன் வணங்க வேண்டும் என திருக்கோடிக்காவல் தேவாரத்தில் திருஞானசம்பந்தர் பாடி அருளியுள்ளார்.
''இன்று நன்று நாளை நன்று என்று நின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழக்கையைப் போக விட்டுப் போதுமின்
மின் தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்
கொன்றை துன்று சோதியான் கோடிக்காவுச் சேர்மினே''
இறைவனை வணங்குவதற்கு நாள், நட்சத்திரம் பார்க்காமல் உடனே சென்று வணங்கி மகிழுங்கள் என்பது பாடலின் உட்பொருள்.
வடநாட்டுக் கோயில்களும், தென்னாட்டுக் கோயில்களும் அமைப்பில் முற்றிலும் மாறுபட்டு இருப்பது ஏன்?
அ.ப. ஜெயபால், சிதம்பரம்
பாரத தேசத்தை நாகரம், வேஸரம், திராவிடம் என முன்று பகுதிகளாகப் பிரிக்கிறது சிற்ப சாஸ்திரம். வடநாட்டுக் கோயில் அமைப்பிற்கு நாகரம் என்று பெயர். இதில் சிற்ப சுதை வேலைகள் இருப்பதில்லை. மத்திய இந்திய பகுதியான மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு வேஸரம் என்று பெயர். இதன் அமைப்பு நாகர விமானம் போன்று இருந்தாலும், சிற்ப சுதை வேலைப்பாடுகள் தென்னாட்டு அமைப்பை ஒத்திருக்கும். தென்னிந்திய கோயில்களுக்கு திராவிடம் என்று பெயர். கண் கவர் விமானங்களும், கோபுரங்களும், கலைச் சிற்பங்களும் இதில் அடங்கும். அந்தந்த பகுதியைச் சேர்ந்த சிற்ப சாத்திர வல்லுநர்களால் எழுதப்பட்ட நூல்களின் அடிப்படையில் இந்த நடைமுறை காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
* எல்லா விலங்கும் கடவுளின் படைப்பே, இதில் பசுவிற்கு மட்டும் முக்கியத்துவம் ஏன்?
வெ.காந்திமதிநாதன், கிண்டி
இயல்பான குணத்திலேயே, பசு மற்ற விலங்குகளிடம் இருந்து வேறுபடுகிறது. சாதுவான பசு, தன் ரத்தத்தை பிறருக்குப் பாலாகத் தருகிறது. எருமையும் பால் தருகிறது என்றாலும், அதில் கொழுப்பு அதிகம் இருப்பதால் எளிதில் ஜீரணம் ஆகாது. அதனால் தான், பிறந்த குழந்தைக்கு கூட தாய்ப்பாலுக்கு இணையாக பசும்பாலைத் தருகிறார்கள். கோமாதா என போற்றப்படும் பசு அசுத்தமான இடத்தில் வாசம் செய்யாது. தெய்வாம்சம் கொண்ட அதன் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் இருப்பதால் கோபூஜை செய்கிறோம்.