
* சுவாமி தரிசனம் செய்து விட்டு நேரமின்மை காரணமாக பிரசாதம் வாங்காமல் வந்து விட்டால் தெய்வ குற்றமாகுமா?
சங்கர்ஜி, வடபழநி
அப்படியென்ன நேரம் இல்லாத அவசரமோ தெரியவில்லை. தெய்வ குற்றம் என்று நினைக்கத் தோன்றுமாறு ஒரு செயலைச் செய்யாமல் இருப்பது தான் மன நிம்மதிக்கு நல்லது. என்ன செய்வது? பிறரைக் கொண்டு வரச் சொல்லியாவது பிரசாதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.
* ஸ்ரீராமஜெயம் போன்ற மந்திரங்களை தினமும் 108,1008 என்ற எண்ணிக்கையில் தான் எழுத
வேண்டுமா?
க.நாகலட்சுமி, கோவை
108,1008 என்ற எண்ணிக்கை வரிசைகள் ஜபம் செய்வதற்குத் தான் பொருந்தும். எழுதுவதற்குக் கிடையாது. எவ்வளவு வேண்டுமானா<லும் எழுதலாம்.
மூன்றாம் பிறையைத் தரிசிப்பதன் நோக்கம் என்ன?
உமா அரசு, திருப்பத்தூர்
நீண்ட ஆயுள் கிடைக்கவும், நோயற்ற வாழ்வு பெறவும் மூன்றாம்பிறையைத் தரிசிக்க வேண்டும். ஒருவர் தன் வாழ்வில், மூன்று வயது முதல் எண்பது வயது வரை தரிசித்து வந்தால் ஆயிரம் முறை தரிசித்து விடலாம். அப்போது சதாபிஷேகம் செய்து கொள்ளலாம். 'ஆயிரம் பிறை கண்ட அண்ணல்' எனக் குறிப்பிடுவதற்கு இதுவே காரணம்.
பூமி பூஜையின் போது எந்தக் கடவுளுக்கு வழிபாடு செய்ய வேண்டும்?
வி.கோபால கிருஷ்ணன், சென்னை
முதலில் வாஸ்து சாந்தி என்ற பூஜையின் மூலம் வாஸ்து புருஷனை திருப்தி செய்ய வேண்டும். பூசணிக்காய் வெட்டுவது இதற்காகத் தான். பிறகு மஞ்சள் பிள்ளையார் பூஜை செய்து, செங்கற்களில் நவக்கிரகங்களைப் பூஜிக்க வேண்டும். பின் பூமாதேவியை வழிபட்டு, கட்டிடம் கட்டும் முகூர்த்தம் செய்ய வேண்டும்.
** தர்மசங்கடம் என்பதன் பொருள் என்ன?
மு.தேவராஜ், கடலூர்
நம்மால் செய்யக் கூடியதை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு தடுப்பதே தர்மசங்கடம். சங்கடம் என்றால் 'கஷ்டம்'. பசி ஏற்படும் போது சாப்பாடு கிடைக்காவிட்டால் கஷ்டம். சாப்பாடு இருந்தும் உண்ண வேண்டிய நேரத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வந்து பேசிக் கொண்டு இருந்தால் ஏற்படுவது தர்மசங்கடம். நல்லவர்களாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, அவர்களுடன் இருக்கும் குணம் தர்மசங்கடம் என்று ராஜாஜி குறிப்பிடுவது இங்கு நினைவு கூரத்தக்கது.
மாங்கல்யச் சரடு தானம் செய்வதால் உண்டாகும் நன்மை என்ன?
வி. அபிராமி, சென்னை
இதை தானம் என்று சொல்லக்கூடாது. சுமங்கலிப் பெண்கள் வீட்டுக்கு வந்தால், வழியனுப்பும்போது வைத்துக் கொடுக்கும் பொருள் தான் இது. தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறவும், லட்சுமி கடாட்சம் கிடைக்கவும் இதைச் செய்வது வழக்கில் உள்ளது.