
* அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது ஏன்?
பொன்விழி, அன்னூர்
அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும். இதற்காக விரதம் இருந்து மாவிளக்கு தயாரிப்பர். பச்சரிசியை ஊற வைத்து, இடித்து மாவாக்கி அதில் ஏலம், சுக்கு, வெல்லம் சேர்த்து, அகல் விளக்கு போல வடித்து, நெய் சேர்த்து தீபமேற்றி அம்மன் சந்நிதியில் வைப்பர். அம்மனுக்கு பொங்கலிடும் போது மாவிளக்கும் ஏற்ற வேண்டும் என்பது வழக்கம். இந்த வழிபாடு மிகவும் பழமையானது.
* * கணவன் மனைவி ஒற்றுமைக்கு பரிகாரம் சொல்லுங்கள்.
கே.மீனா, மதுரை
சிவபார்வதி இருவரும் சரிபாதி இணைந்த அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு தம்பதி ஒற்றுமைக்கு சிறந்த பரிகாரம். வெள்ளிக்கிழமையில் விரதமிருந்து அம்மன் சந்நிதியில் விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ளுங்கள். விரைவில் பலன் உண்டாகும்.
ராஜகாளியம்மனுக்கு செவ்வரளி மாலை வைக்கலாமா?
ஆ.சந்திரன், கன்னிவாடி
காளியம்மனுக்கு சிவப்பு நிற மலர்கள் சாத்துவது சிறப்பு. செவ்வரளி மாலை சூட்டி வழிபடுவதால் செவ்வாய் தோஷம் அகலும்.
பார்வதி என்று தேவியைக் குறிப்பிடுவது ஏன்?
கே. வரதராஜன், புதுச்சேரி
மலைக்கு அதிபதியாகிய பர்வதராஜனின் மகளாகப் பிறந்ததால் அம்பிகைக்கு 'பார்வதி' என்று பெயர் உண்டு. மலைமகள் என்றும் சொல்வர்.
துர்க்கை வழிபாட்டுக்குரிய நாட்கள் எவை?
எல். சூரியபிரபா, திருப்பூர்
எல்லா நாட்களுமே வழிபாட்டுக்கு உரியவை தான். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஏற்றவை. அதிலும் ராகுகாலம் துர்க்கைக்கு மிகவும் உகந்தது.
அபிராமி அந்தாதியின் சிறப்பைச் சொல்லுங்கள்.
சி. கயல்விழி, காஞ்சிபுரம்
லலிதா சகஸ்ரநாமம், தேவி பாகவதம், சவுந்தர்யலஹரி போன்ற மந்திர நூல்களை அறிந்தவர் அபிராமி பட்டர். அவற்றின் சாரத்தை எல்லாம் ஒன்றாக்கி தமிழில் அபிராமி அந்தாதியைப் பட்டர் பாடிஉள்ளார். அதனால், அம்பிகையை இஷ்ட தெய்வமாகக் கொண்டிருப்பவர்களுக்கு அபிராமி அந்தாதி ஒரு வரப்பிரசாதம்.
* வெள்ளிக்கிழமையில் பூஜையறையில் சொல்வதற்கு எளிய பாடல் ஏதும் இருக்கிறதா?
லலிதா சுப்பிரமணியம், ஆலந்தூர்
வீட்டில் விளக்கேற்றி விட்டு அபிராமி பட்டர் பாடிய அபிராமி அந்தாதியை மனம் உருகிப் பாடுங்கள். காப்புச் செய்யுளில் விநாயகரை வணங்கி விட்டு, அதிலுள்ள பாடல்களில் உங்களுக்குப் பிடித்தமான எளிய பாடல்களைப் பாடுங்கள். பின்வரும் இந்த ஒரு பாடல் மட்டும் கூட போதுமானது.
''தனந்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே''