
* திறந்த வெளியில் 50, 60 அடி உயரத்திற்கு சிலை வைக்கிறார்களே. சிலை வழிபாட்டுக்குரியவை தானா?
மல்லிகா அன்பழகன், சென்னை
எவ்வளவு அடி உயரத்தில் வேண்டுமானாலும் சிலை வைக்கட்டும். திறந்த வெளியில் இருப்பது தான் உங்கள் கேள்விக்கு இடமளிக்கிறது. திருச்சி உறையூர் வெக்காளிஅம்மன், நாமக்கல் ஆஞ்சநேயர் போன்ற தெய்வச் சிலைகள் திறந்த வெளியில் உள்ளனவே என்று கேட்கிறார்கள். அவை பழமையானவை. திறந்த வெளியில் இருப்பதற்கு அந்தந்தக் கோயிலுக்கென்று சில புராண வரலாறுகள் இருக்கின்றன. எனவே, இத்தலங்களை உதாரணமாகக் கொண்டு புதிதாக திறந்த வெளி சிலைகளை அமைப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. இதற்கு மேல் இப்படிச் செய்பவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
* காகம் தலையில் கொத்திச் சென்று விட்டது. பரிகாரம் சொல்லுங்கள்.
எஸ்.சாந்தி, கடலூர்
காகம் தலையில் கொத்தி விட்டால் உடனே ஸ்நானம் (தலைக்கு குளித்து) செய்து விட வேண்டும். கோயிலுக்குச் சென்று விநாயகருக்குத் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.
கோயில்களில் நடக்கும் ஆறுகால பூஜையைத் தரிசிப்பதால் சிறப்பு பலனேதும் உண்டா?
தி.ஈஸ்வர மூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர்
தேவையில்லாத உலக விஷயங்களில் ஈடுபட்டும், அளவுக்கு அதிகமான ஆசைகளை வளர்த்துக் கொண்டு துன்பப்படுவதும் போன்றவை இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அதிக நேரத்தை கோயில்களில் செலவிடுவது ஒன்று தான் வழி. வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் கோயிலுக்குச் சென்று பூஜைகளில் கலந்து கொண்டு மனம் ஒன்றி தரிசித்து வாருங்கள். மகிழ்ச்சியாக வாழ்பவர்களில் உங்களுக்கு இணை யாரும் இருக்க முடியாது. இதை விட வேறு சிறப்பான பலன் கிடையாது.
* அபிஷேகம் செய்த பாலினைக் கண் தலையில் வைத்துக் கொள்வது ஏன்?
வி.ராமசாமி, மடத்துக்குளம்
சுவாமி பிரசாதம் எதுவாக இருந்தாலும் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும். பொதுவாக இறைவனின் திருவடிகளையும், பெரியவர்களின் திருவடிகளையும் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொள்வது இப்படித்தான். அதாவது அவற்றிற்கு கொடுக்கும் உயர்ந்த மரியாதைக்குரிய செயலாகக் கருதப்படுகிறது. தலையில் வைத்துக் கொண்டால் அதன் சக்தி உடல் முழுவதும் பரவி நோய் நொடிகள் நீங்கி நீண்ட ஆயுள் உண்டாகும்.
தீர்க்காயுள், ஆயுள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
ஜெ.திருமலா தேவி, சென்னை
ஆயுள் என்பது பொதுவான சொல். உயிருடன் இருக்கும் ஆயுட்காலத்தைக் குறிப்பது. தீர்க்காயுள் என்றால் இடையில் அகால மரணம் ஏற்படாமல் நூறு வயதைத் தாண்டி வாழ்வது. இதற்காக வேண்டி பலர் யாகங்கள் கூட செய்து கொள்வார்கள்.