
* காலையில் எழுந்தவுடன் வலது உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்பது ஏன்?
கே.மீனாட்சி, மதுரை
வலது உள்ளங்கையை மட்டுமல்ல. இரு கைளையும் சேர்த்து விரித்து வைத்து பார்க்க வேண்டும்.
''கராக்ரே வஸதே லக்ஷ்மீ
கரமத்யே சரஸ்வதி
கரமூலேது கௌரீஸ்யாத்
ப்ரபாதே கரதர்சனம்''
என்பது அதற்கான ஸ்லோகம். அதாவது கைகளின் நுனியில் மகாலட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், அடிபாகத்தில் பார்வதிதேவியும் வீற்றிருக்கிறார்கள். அவர்களைப் பக்தியுடன் வழிபட்டு கைகளைப் பார்ப்பதால், நாள் முழுவதும் கல்வி, செல்வம், மனதைரியம் குறைவின்றி சிறப்பாக அமையும்.
** தல விருட்சங்களை கோயிலில் வழிபடுவது போல வீட்டிலும் வளர்த்து வணங்கலாமா?
லலிதா மணி, ஆலந்தூர்
துளசி மாடத்தை வழிபடுவது தான் வழக்கத்தில் உள்ளதே. அது போல வில்வம், வேம்பு போன்ற தெய்வீக மரங்களையும் வீட்டில் வளர்த்து விளக்கேற்றி வழிபடுவதால் நன்மை உண்டாகும். மரம் வளர்ப்பதால் எதிர்கால தலைமுறையும் பயன்பெறும். வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்.
* சமஸ்கிருத ஸ்லோகங்களை பொருள் புரியாமல் படித்து வருகிறேன். இதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்குமா?
வி. கன்னிகா, லாஸ்பேட்டை
சமஸ்கிருத ஸ்லோகம் பொருள் புரிந்து தான் படிக்க வேண்டும் என்பதில்லை. மந்திரம் என்ற சொல்லுக்கு 'மனதார உச்சரித்தாலே காப்பாற்றக்கூடியது' என்று பொருள். படிப்பதால் மட்டுமல்ல! கேட்டாலே எதிர்பார்த்த பலன் கிடைத்து விடும். இந்த விபரங்களை மார்க்கண்டேய புராணம் என்ற நூல் விரிவாக விளக்கியுள்ளது.
* வீட்டிற்கு பாம்பு வராமல் இருக்க பரிகாரம் ஏதும் இருக்கிறதா?
ஜி. சக்தி, திருப்பூர்
வீட்டைச் சுற்றியுள்ள இடங்களைத் தூய்மையாக வைத்திருப்பது தான் சரியான பரிகாரம். ஆஸ்திகர் என்ற முனிவர், ஜனமேஜயன் என்ற அரசன் செய்த சர்ப்ப யாகத்தை நிறுத்தி பாம்புகளைக் காத்ததாக தேவீ பாகவதம் என்னும் நூல் கூறுகிறது. இதற்கு நன்றி தெரிவிக்க, ஆஸ்திக முனிவரை பாம்புகள் வணங்கின. இந்த முனிவரை நினைத்து வணங்கினால் பாம்பு தொந்தரவு இருக்காது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
* புனித தீர்த்தங்களில் சில்லரை காசுகளை வீசி எறிவது சரிதானா?
எஸ்.நிஷா, மதுரை
இதனால் என்ன புண்ணியம் என்று யோசித்துப் பாருங்கள். உண்டியலில் போட்டால் தர்ம காரியங்களுக்குப் பயன்படும். ஏழைக்கு அளித்தால் புண்ணியமாவது கிடைக்கும். தண்ணீருக்குள் காசை வீசச்சொல்லி எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை.