
**குடியிருக்கும் வீட்டின் ராசியைப் பொறுத்து தான் வாழ்க்கை என்கிறார்களே உண்மையா?
ஜி. இளங்கோவன், திண்டுக்கல்
இப்படியும் வைத்துக் கொள்ளலாம். நாம் குடியிருக்கும் வீட்டை ராசியானதாகவும் செய்து கொள்ளலாம். அதாவது காலை, மாலையில் விளக்கேற்றி வைப்பது, இறைவழிபாடு செய்வது, பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் இயன்றவரை உதவுவது போன்ற நற்செயல்களைச் செய்து வந்தாலே போதும். எல்லா வீடும் ராசியான வீடாகவே இருக்கும்.
* மகான்கள் பலர் நம் நாட்டில் தோன்றியும் கூட, இன்னமும் நாத்திகம் இருப்பது ஏன்?
கே.மேனகா, திண்டிவனம்
தோன்றிய மகான்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பவர்கள் ஆத்திகர்கள். ஆன்மிகம் கூறும் வழியைக் கடைபிடித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்ற அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் மறுப்பவர்கள் நாத்திகர்கள். ஒரு விதத்தில் இவர்களும் நல்லது தான் செய்திருக்கிறார்கள். ஏனெனில், இவர்களை நல்வழிப்படுத்த தானே மகான்களே தோன்றியுள்ளனர். மேலுக்கு நாத்திகராகவும், உள்ளுக்குள் ஆத்திகராகவும் அரசியல் நடத்துபவர்களைக் கண்டு கலங்கத் தேவையில்லை.
* இயற்கை சீற்றம், தீவிரவாதம் போன்ற தீமைகள் நீங்க கூட்டு வழிபாடு செய்வது பலன் அளிக்குமா?
எஸ்.மைதிலி, காட்டுக்கூடலூர்
மிகவும் சக்தி வாய்ந்து கூட்டுப்பிரார்த்தனை. இயற்கை சீற்றம், தீவிரவாதம் மட்டுமில்லாமல் நோயாளிகளுக்காக, ஏழைகளுக்காக இதனை மேற்கொள்வதால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.
* திருநீறு அணிவதன் மகத்துவத்தைச் சொல்லுங்கள்.
பா.கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை
திருநீறுக்கு விபூதி என்ற பெயர் உண்டு. விபூதி என்றால் ஐஸ்வர்யம். எனவே, இது வீட்டில் இருந்தாலே சுபிட்சம் தான். திருநீறு அணிவதால் பாவம், நோய்நொடி தீர்ந்து நீண்ட ஆயுள் உண்டாகும். திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப்பதிகத்தை முமுமையாகப் படிப்பவர்கள் விபூதியின் மகிமை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
* கோயிலுக்கு நன்கொடை அளிப்பது பற்றி சொல்லுங்கள்.
ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்
கோயிலின் வளர்ச்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை விளம்பரப்படுத்த வேண்டும். நன்கொடையாளர்களின் பெயர்களைப் பார்ப்பவர்கள், தங்கள் பெயரும் இதில் இடம்பெறட்டுமே என விரும்பி தாமாகவே நன்கொடை அளிக்க முன்வருவர். இது கோயில் திருப்பணிக்கு நன்மையாக அமையும்.