
* கோடை காலத்தில் கோயில் திருவிழா அதிகமாக நடக்கிறதே ஏன்?
ஆர். முத்துராஜா, வடுகபட்டி
சூரியனின் வடதிசைப் பயணத்தைக் குறிக்கும் தை முதல் ஆனி வரை உத்ராயண புண்ணிய காலம் இருக்கும். தேவர்களின் பகல் பொழுதாக கருதப்படும் இந்தக் காலத்தில் கோயில் விழாக்கள் நடத்துவது சிறப்பு. தை, மாசியில் அறுவடை முடிந்ததும், கோடை காலமான பங்குனி, சித்திரையில் விவசாயிகளுக்கு ஓய்வுகாலமாக இருப்பதாலும், விழா நடத்த ஏதுவாக அமைந்தது.
* தென்னாடுடைய சிவனே போற்றி என்றால் சிவன் தென்னகத்திற்கு மட்டும் சொந்தமா என்ன?
என்.ஸ்ரீதர், பெங்களூரு
'தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!' என்றே திருவாசகம் சொல்கிறது. சிவன் எல்லா நாட்டுக்கும் பொதுவானவர் என்றாலும், பாண்டியநாட்டில் சிவன் நடத்திய திருவிளையாடல் களைச் சிறப்பிக்கும் விதத்தில் தென்னாடுடைய சிவன் என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார். கயிலைத் தாண்டகத்தில் திருநாவுக்கரசர், 'காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி' என்று போற்றுகிறார். எங்கும் நிறைந்தவர் சிவன் என்று சைவ சமயம் கூறுகிறது.
* சந்திராஷ்டம நாளில் சுப விஷயத்தை தவிர்க்க முடியாவிட்டால், நல்ல நேரம் பார்த்து நடத்தலாமா?
சி. சசிகலா, சென்னை
எந்த நாளாக இருந்தாலும், சுபவிஷயத்திற்கு நல்லநேரம் பார்ப்பது அவசியம். சந்திராஷ்டம நாளில் தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டும், குலதெய்வத்தை வணங்கி, தாயின் ஆசி பெற்று நடத்தலாம்.
* விளக்குத் திரியை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டுமா? விளக்கை தினமும் துலக்க வேண்டுமா?
ஆர். செந்தமிழ், நரசிம்மநாயக்கன் பாளையம்
வாரம் ஒருமுறை திங்கள் அல்லது வியாழனில் துலக்குங்கள். அப்போது பழைய திரியை மாற்றி புது திரியிட்டு விளக்கேற்றுங்கள்.
** தாயின் படத்தை வணங்கிய பிறகே தெய்வ வழிபாடு செய்கிறேன். இது சரிதானா?
டி.கே. காத்தவராயன், செங்கல்பட்டு
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பது உண்மை தானே. அன்பின் பெருமையை கூறும் விதத்தில் சிவனுக்கு 'தாயுமானவர்' என்று பெயர் உண்டு. 'வாத்சல்யம்' என்னும் தாயுள்ளம் கொண்டவன் என்பதால் திருமாலை 'பக்த வத்சலன்' என்கிறார்கள். தாயை வணங்கினால், எல்லா தெய்வங்களையும் வணங்கியதற்கு சமம்.
* நதிகள் கடலில் கலப்பதால், அதில் நீராடுவது புண்ணியம் என்கிறார்களே. எல்லாக் கடலும் ஒன்று தானா?
ஜி.குப்புசுவாமி, வடபழநி
ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை, கன்னியாகுமரி, திருச்செந்தூர் போன்றவை கோயில் தலங்கள். அங்குள்ள கடலில் நீராடுவதே சிறப்பு.