
* கடவுளில் அதிக திருநாமம் பெற்ற சுவாமி விநாயகரா, முருகனா, சிவனா யார்?
ர. உமாராணி,திருவல்லிக்கேணி
கடவுளின் பெயரைத் 'திருநாமம்' என்று குறிப்பிடுவர். எல்லா பெயர்களும் அவருக்கு உரியதே. உருவமற்ற அவர் சர்வ வியாபியாக எங்கும் நிறைந்திருக்கிறார். 'ஓர் ஊரும் ஒரு பெயரும் இல்லாத இறைவனுக்கு ஆயிரம் திருநாமம் சொல்லி தெள்ளேனம் கொட்டோமோ?' என்கிறார் திருநாவுக்கரசர். விநாயகர், முருகன், சிவன், விஷ்ணு, அம்பாள் என எல்லா தெய்வத்திற்கும்
'சகஸ்ர நாமம்' என ஆயிரம் பெயர்களால் அர்ச்சிக்கும் வழக்கம் இருக்கிறது.
* கோயிலில் கோ பூஜை, கஜ பூஜை நடத்துவது ஏன்?
என்.ஜெயன், திருப்பூர்
கோயில் நடை திறந்ததும் காலையில் சந்நிதி முன்பு பசுவுக்கு கோபூஜையும், யானைக்கு கஜபூஜையும் நடத்துவர். பசுவின் பின்புறத்திலும், யானையின் நெற்றிப்பகுதியிலும் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். ஒவ்வொரு நாளும் சுபம் நிறைந்ததாக அமைய வேண்டும் என இதன் மூலம் சுவாமியிடம் வேண்டிக் கொள்கிறோம். இந்த பூஜைகளைத் தரிசித்தால் வீட்டில் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம்.
** துன்பத்தை ஏற்க முடியாமல் மனம் சஞ்சலப்படுகிறது. எப்படி தேற்றுவது?
கூ.முத்துலட்சுமி, திருவாடானை
இன்பம் என்றால் மகிழ்வதும், துன்பம் என்றால் வருந்துவதும் மனதின் இயல்பு. கவலைப்படுவதால் துன்பம் தீவிரமடையுமே ஒழிய தீர்வுக்கு வழி கிடைக்காது. 'உங்களுக்கும் கீழே உள்ளவர் கோடி' என்ற உண்மையை உணருங்கள். கணவர் இல்லாமலும், சிறுவயதில் குழந்தைகளைப் பறி கொடுத்தவர்களாகவும் எத்தனையோ பேர் தன்னம்பிக்கையோடு பூமியில் வாழ்கிறார்கள். தன்னம்பிக்கை மிக்கவர்களிடம் பேசுங்கள். நல்ல நூல்களைப் படியுங்கள். திங்கட்கிழமை அல்லது பவுர்ணமியன்று நவக்கிரக மண்டபத்திலுள்ள சந்திரனை வணங்குங்கள். ஏதோ ஒரு மலைக்கோயிலுக்கு கிரிவலம் போய் வாருங்கள். மனபலம் அதிகரிக்கும்.
* சாப்பிடும் போது விளக்கு அணைந்தால் தொடர்ந்து சாப்பிடலாமா?
கே.வனிதா, கள்ளக்குறிச்சி
கூடாது. அணைந்தால் மீண்டும் விளக்கை ஏற்றிய பின்னரே, சாப்பிட வேண்டும். இருட்டில் சாப்பிடக்கூடாது என்கிறது சாஸ்திரம். மின் விளக்குகள் வந்த பின்னும் கூட, இரவுச் சாப்பாட்டின் போது விளக்கேற்றும் வழக்கம் இருந்ததாகப் பெரியவர்கள் சொல்வார்கள்.
* நிர்மால்யம் என்பதன் பொருள் என்ன?
ஜெ.தங்கமீனாள், மதுரை
சுவாமிக்கு படைத்த பொருள் அனைத்திற்கும் 'நிர்மால்யம்' என்று பெயர். சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் கோமுகி வழியாக வெளியேறும். அதை 'நிர்மால்ய தீர்த்தம்' என்பர்.