
* கர்ப்பவதியான பெண்கள் தெய்வீக நூல்களைப் படிப்பதால் குழந்தைகளுக்கு நன்மை உண்டாகுமா?
எஸ். கீர்த்திகா, திருத்தணி
கண்டிப்பாக கிடைக்கும். பிறக்கும் குழந்தை புத்தி கூர்மையுடன் பிறக்கும். பிரகலாதன் கர்ப்பத்தில் இருக்கும் போது, அவனது தாய் பாகவதம் கேட்டதால் விஷ்ணு பக்தனாகப் பிறந்து நாட்டை அரசாட்சி செய்தான். நல்லதைப் படித்தால் நல்ல குழந்தை பிறக்கும். கொடுமையான தொலைக்காட்சி தொடர்களை கர்ப்பிணிகள் பார்க்கவே கூடாது.
* பக்தி இருப்பவர்களுக்கு கஷ்டம் அதிகமாக இருக்கிறதே.... பரிகாரம் என்ன?
எஸ். சியாமினி, புதுச்சேரி
'கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே' என்கிறது தேவாரம்.
திருநாவுக்கரசரை கல்லுடன் சேர்த்துக் கட்டி, மகேந்திர பல்லவன் கடலில் வீசிய போதும் 'சிவனே எனக்குத் துணை' என்று சரணடைந்தார். பக்தி ஆழமாக இருந்தால், துன்பக் கடலும் கடைக்கால் அளவே என்பதை அருளாளர்களின் வாழ்க்கை உணர்த்துகிறது. இதை மனதில் கொண்டு நம் வாழ்வை நடத்த வேண்டும்.
** என் பக்கம் நியாயம் இருந்தும் குற்றச்சாட்டுக்கு ஆளாகிறேன். கடவுள் இருந்தும் ஏன் இந்த நிலை...!
எஸ்.வேல் அரவிந்த், குளத்தூர்
நேர்மையான வழியில் நடப்போருக்கு கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்கும். பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை. தினமும் 'லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே' என்னும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து வாருங்கள். குற்றச்சாட்டில் இருந்து விரைவில் விடுபட்டு நிம்மதி காண்பீர்கள்.
* மனவளர்ச்சி இல்லாதவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது உண்மையா?
டி.சாந்தி, மதுரை
உண்மை தான். மனதைப் பொறுத்தே பாவ, புண்ணியம் மனிதனுக்கு உண்டாகிறது. மனவளர்ச்சி இல்லாதவர்களுக்கு இது பொருந்தாது என்பதால், மறுபிறவி இல்லாமல் போவது உண்மையே.
* வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவதால் தீய சக்தி வருவது தடுக்கப்படுவது உண்மையா?
எம். ரங்கநாதன், கடலூர்
மாவிலைக்கு தீய சக்தியைத் தடுப்பதோடு, தெய்வீக சக்தியை வரவழைக்கும் தன்மை உண்டு. இதனால் தான் பூஜைக்கு கலசம் வைக்கும் போது மாவிலை வைத்து தேங்காய் வைக்கிறார்கள். இது விஷ்ணு அம்சம் பொருந்தியது. மாவிலை தோரணம் கட்டும் வீட்டில் தெய்வ அருள் நிறைந்திருக்கும். அங்கு மகாலட்சுமி நிலைத்திருப்பாள்.
* கோவில், ஆலயம் என்பதன் பொருள் என்ன?
சிவமணி ஹரிஹரன், கோவை
கோ+இல் என்பது கோவில். 'கோ' என்பது அரசன். 'இல்' என்பது வீடு. உலகின் அரசனான கடவுளின் வீடு. ஆன்மா லயிக்கும் இடம் ஆலயம். அதாவது உயிர்கள் இறை பக்தியில் ஒன்றியிருக்கும் இடம்.