ADDED : ஜூலை 07, 2015 12:43 PM

நேர்முகத்தேர்வு வரை போய்விட்டேன்... கடைசி நேரத்தில் எப்படியோ வேலை வாய்ப்பு தவறி விட்டது... மாப்பிள்ளை வீட்டார் என் பெண்ணையே மணம் முடிப்பதாக வாக்குறுதி அளித்து சென்ற பிறகு திடீரென மாறி விட்டார்கள். இப்படி சந்தர்ப்பங்கள் தவறிப் போகுமானால், சீர்காழி சிவனை நினைத்து பாட வேண்டிய பதிகம் இது. தந்தை உடல்நலத்துடன் விளங்கவும், மனநலம் சீர்பெறவும், புண்ணியம் செய்தும் பலன் பெற முடியவில்லையே என்று தவிப்பவர்களும் இதைப் படிக்கலாம்.
ஓர்உரு ஆயினை; மான்ஆங் காரத்து
ஈர்இயல்பாய் ஒரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்து அளித்து அழிப்ப, மும்மூர்த்திகள் ஆயினை;
இருவரோடு ஒருவன் ஆகி நின்றனை.
ஓர் ஆல் நீழல், ஒண்கழல் இரண்டும்
முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை; நாட்டம் மூன்றாகக் கோட்டினை
இருநதி அவரமோடு ஒருமதி சூடினை;
ஒருதாள் ஈர்அயில் மூவிலைச் சூலம்
நாற்கால் மான் மறி,ஐந்தலை அரவம்
ஏந்தினை; காய்ந்த நால்வாய் மும்மதத்து
இருகோட்டு ஒருகரி ஈடு அழித்து உரித்தனை
ஒருதனு இருகால் வளைய வாங்கி,
முப்புரத்தோடு நானிலம் அஞ்ச,
கொன்று தலத்து உற அவுணரை அறுத்தனை
ஐம்புலன் நாலாம் அந்தக்கரணம்,
முக்குணம், இருவளி, ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை; ஒருங்கிய மனத்தோடு
இருபிறப்பு ஓர்ந்து, முப்பொழுது குறை முடித்து
நான்மறை ஓதி, ஐவகை வேள்வி
அமைத்து, ஆறங்கம் முதல் எழுத்து ஓதி,
வரன்முறை பயின்ற, எழுவான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை;
அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை;
இகலி அமைந்து உணர்புகலி அமர்ந்தனை;
பொங்கு நாற்கடல் சூழ்வெங்குரு விளங்கினை;
பாணி மூவுலகும் புதைய, மேல் மிதந்த
தோணிபுரத்து உறைந்தனை; தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை;
வரபுரம் ஒன்று உணர் சிரபுரத்து உறைந்தனை;
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல்கெடுத்து அருளினை; புறவம் புரிந்தனை;
முந்நீர்த் துயின்றோன், நான்முகன் அறியாப்
பண்பொடு நின்றனை சண்பை அமர்ந்தனை;
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை;
எச்சன் ஏழ்இசையோன் கொச்சையை மெச்சினை;
ஆறுபதமும், ஐந்து அமர் கல்வியும்,
மறைமுதல் நான்கும்
மூன்று காலமும், தோன்ற நின்றனை;
இருமையின் ஒருமையும், ஒருமையின் பெருமையும்
மறுஇலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை,
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்;
அனைய தன்மையை ஆதலின், நின்னை
நினைய வல்லவர் இல்லை, நீள் நிலத்தே.