
** மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது உண்மை தானா?
அ.பத்திரி பிரசாத், காரைக்குடி
முற்பிறவிகளில் செய்த பாவ, புண்ணியத்திற்கு ஏற்ப உயிர் மறுபிறவி அடைகிறது. இந்த அடிப்படையில், புண்ணியம் அதிகம் செய்ததால் நாம் மனிதர்களாகப் பிறந்திருக்கிறோம். எனவே மனைவி மட்டுமல்ல...நமது தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், பிள்ளைகள் என
எல்லாருமே கடவுள் அளித்த வரம் தான்.
* தற்போது வரும் விபூதி கலப்படமாக இருக்கிறதே... இதற்கு மாற்று வழி என்ன?
ஆர்.குமாரமூர்த்தி, திருத்தங்கல்
நாமே விபூதி தயாரிக்கலாம். தொண்டுள்ளத்துடன் பல சிவனடியார்கள் இதனைச் செய்தும் வருகிறார்கள். தற்போது சிலர் பெரிய அளவில் கோசாலை நடத்தி பஞ்சகவ்யம், விபூதி முதலியன தயாரிக்கிறார்கள். பசு மாடுகளை பால் கறப்பதற்கு மட்டும் பயன்படுத்தி விட்டு
அடிமாடாக விற்று பாவத்தை சுமக்காமல், அவை உயிரோடு இருக்கும் காலம் வரை சாணத்தைப் பயன்படுத்தி விபூதி தயாரிக்கலாம்.
* பொதுவாக தெய்வங்கள் கிழக்கு நோக்கியிருக்க, தட்சிணாமூர்த்தி தெற்கிலும் துர்க்கை வடக்கிலும் இருப்பது ஏன்?
எஸ்.குருராஜன், விழுப்புரம்
தட்சிணாமூர்த்தி ஞான வடிவமானவர். வேதம் முதலிய ஞான நூல்களை உபதேசிப்பவர். உபதேச குருவாக சிவன் வீற்றிருக்கும் நிலையே தட்சிணாமூர்த்தி. தட்சிணம் என்றால் தெற்கு. உபதேசிக்கும் போது தென்முகக் கடவுளாக காட்சியளிக்கிறார். துர்க்கை தீய சக்திகளைப் போரிட்டு அழித்ததால் கோபவடிவில் வீற்றிருக்கிறாள். உக்ர தெய்வங்கள் வடக்கு நோக்கி இருக்க வேண்டும். இந்த நியதி சுவாமியின் கருவறையைச் சுற்றி உள்ள கோஷ்டங்களுக்கான பொதுவிதி. துர்க்கை, காளி, மாரி போன்ற தெய்வங்கள் தனி கோவில்களில் பிரதிஷ்டை செய்யும் போது மட்டும் கிழக்கு நோக்கி வைக்கலாம் என்கிறது சாஸ்திரம்.
* சஷ்டி விரதத்தன்று உப்பில்லாமல் சாப்பிடுவது ஏன்?
லலிதா, சென்னை
விரதம் என்றாலே உடலை வருத்தி கடவுள் மீது பக்தி செலுத்துவது தான். உப்பில்லாமல், சோறு இல்லாமல் பட்டினி இருப்பதே விரதம். இதன் மூலம், ஒவ்வொரு விநாடியும் உடலும், மனமும் விழிப்புடன் இருக்கும். அதாவது சுவாமியின் நினைவிலேயே இருப்பது, சுவாமியின் அருகிலேயே வாசம் செய்வது போன்ற உணர்வு ஏற்படும். இதனால் எந்த நோக்கத்திற்காக விரதம் இருக்கிறோமோ அது எளிதில் கைகூடும்.
* கோவில் பிரகாரத்தை எத்தனை முறை வலம் வர வேண்டும்?
அ. ரூபினா, நெய்வேலி
மூன்று முறை பிரகாரத்தை வலம் வந்து கொடி மரத்தடியில் ஐந்து முறை வணங்க வேண்டும்.
* கருவறையில் திரையிட்டிருக்கும் போது விளக்கேற்றி வழிபடலாமா?
ஆர்.சேதுராமன், திருவள்ளூர்
கருவறையில் திரையிட்டிருக்கும் சமயத்தில் வலம் வருதல், நமஸ்காரம் செய்தல் போன்றவை செய்யக் கூடாது. விளக்கேற்றி விட்டு காத்திருக்கலாம். திரை நீக்கிய பின்னர் தரிசிக்கலாம்.