தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!


ADDED : செப் 29, 2015 10:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2015 10:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கோவிலுக்கு எதிரில் குடிஇருந்தால் 'கோவில் குத்து' என்று சொல்கிறார்களே. இது பற்றி சொல்லுங்கள்.

ஆர்.வத்சலா, நல்லாத்தூர்

பெரிய கோவில்களில் நான்கு திசைகளிலும் கோபுரம் அமைந்திருக்கும். ஆலய நிர்மாண இலக்கணப்படி வாசல்களின் எதிர்ப்புறம் சன்னிதி தெருவாக இருக்க, அதன் இரு புறமும் வீடுகள் அமைந்திருக்கும். சன்னிதியின் எதிர்ப்புறத்தில் வீடு கட்டுவது கூடாது. இதைப் போலவே கோபுரத்தின் இருபுறமும் வீடு கட்டக் கூடாது. இதற்குக் காரணம் தெய்வத்தின் நேர் பார்வை படும் இடங்களில் குடியிருக்கக் கூடாது என்பதால் தான். இதையே 'கோவில் குத்து' என்பர்.



* மணமான பெண்கள் காலில் மெட்டியணிவது கட்டாயமா....

சிவமணி ஹரிஹரன், கோவை.

திருமணம் என்பது புனிதமான மங்களச் சடங்கு. ஒரு பெண்ணின் மறுபிறவி என்றும், ஒரு ஆணுடன் இணைந்து குடும்ப வாழ்க்கை என்னும் புனிதப் பயணத்தைத் துவங்கும் நாள் என்றும் இந்து தர்மம் கூறுகிறது. உச்சித் திலகம், திருமாங்கல்யம், மெட்டி ஆகியவை பெண்ணின் கற்பு நெறியை உணர்த்தும் மங்களச் சின்னங்கள். இது எதற்கு அது எதற்கு என எல்லாவற்றையும் கேட்டு ஒவ்வொன்றிற்கும் அவரவர்களுக்கு தோன்றும் விதமாக கதை சொல்வதால் பயனில்லை. சாஸ்திரம் வகுத்ததை பெரியோர் வழக்கத்தில் கொண்டு வந்துள்ளனர்.

* சில பெரியவர்கள் கடவுளிடம் 'என்னை சீக்கிரம் அழைத்துக் கொள்' என்று வேண்டுவது சரிதானா?

எம்.ரவிச்சந்திரன், புதுச்சேரி

இரண்டு விதமாக பதில் கூறலாம். ஒன்று மனப் பக்குவத்தால் கேட்பது. பல பிறவிகளில் ஆண்டு அனுபவித்ததால் ஏற்பட்ட நிறைவால் 'இறைவா போதும் என்னை அழைத்துக் கொள்' என வேண்டுவது. திருநாவுக்கரசர் போன்ற அருளாளர் வாழ்வில் இதுவே நிகழ்ந்தது. இரண்டாவது மனம் பாதிக்கப்பட்டு வெறுப்பில் கேட்பது. பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், உறவினர்களின் புறக்கணிப்பு, வறுமை, கடன் என பல பிரச்னைகளால் மனதில் வெறுப்பு ஏற்படும். கேட்டதுமே யாரையும் கடவுள் யாரையும் அழைத்துக் கொள்வதில்லை. யாரை எப்போது அழைக்க வேண்டும் என்பது அவருக்குத் தான் தெரியும்.

* தர்மம் தலை காக்கும் என்பது கலி காலத்திற்கு பொருந்துமா?

எஸ்.லதா, போரூர்

எந்தக் காலத்திற்கும் இது பொருந்தும். தர்மம் என்றில்லாமல் சத்தியம், நேர்மை, அடக்கம், ஒழுக்கம் ஆகிய எல்லா நற்பண்புகளுக்கும் இந்த உண்மை பொருந்தும். பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக இல்லாமல், மனதார தர்மம் செய்து பாருங்கள். பலன் தெரியும்.



* சிவனுக்கு எத்தனை பிரதோஷத்திற்கு விரதம் இருக்க வேண்டும்?

ம.சரஸ்வதி, சென்னை

ஆயுள் முழுவதும் மேற்கொள்ள வேண்டும். திருமண வரம், குழந்தைப் பேறு, வியாபார வளர்ச்சி என ஏதாவது பலன் கருதி விரதம் இருப்பவர்கள் விருப்பம் நிறைவேறும் வரை மேற்கொண்டால் போதும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us