வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்
வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்
ADDED : செப் 03, 2010 02:05 PM

* கிரகண காலத்தில் கட்டாயம் குளிக்கத்தான் வேண்டுமா? ஏ.புவனேஸ்வரி, சென்னை
சூரியன் அல்லது சந்திரன் மீது பூமியின் நிழல் படர்ந்து மறைக்கப்படுவதை கிரகணம் என்கிறோம். சூரிய, சந்திர ஒளி இல்லையேல் பகல், இரவு என்னும் காலங்கள் இல்லை. மழை பெய்யாது. பயிர்கள் விளையாது. பூமி மற்றும் அதில் வாழும் உயிர்கள், அவற்றின் உணவுப் பொருட்கள் எல்லாமே சூரிய சந்திர ஒளிக்கதிர்களினால் அன்றாடம் தமக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்கின்றன. இப்படி இறையருளால் இயற்கையாக நமக்குக் கிடைக்கும் சூரிய சந்திரர்களின் இயல்பான ஒளி மறைக்கப்பட்டு குறிப்பிட்ட நாழிகை அவற்றின் கிரகண கால ஒளி, பூமி மற்றும் அதில் உள்ள எல்லாவற்றின் மீதும் படுகிறது. இதனால் "மஹா ஸ்பரிசம்' என்னும் தோஷம் (தீண்டல்) ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இன்றைய விஞ்ஞானிகளும் கிரகணத்தினால் சில மாறுபாடுகள் ஏற்படுவதையும் நேரடியாகக் கண்களால் பார்க்கக் கூடாது என்றும் கூறுகின்றனர். எனவே இந்த தோஷம் நீங்குவதற்காக கிரகணம் விட்ட பிறகு தலைக்கு குளித்து, விபூதி குங்குமம் இட்டுக் கொண்டு இறைவழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும்.
*என் மகனுக்கு விரைவில் திருமணம் கைகூட ஏதாவது நல்வழி கூறுங்கள்? பெயர் வெளியிட விரும்பாத வாசகி, கோவை.
நல்ல விஷயம் தானே! இதில், உங்கள் பெயரை வெளியிட என்ன தயக்கம். வெளியிட்டிருந்தால் பெண் வைத்திருப்பவர்கள் இதன் மூலம் உங்களைத் தொடர்பு கொண்டிருப்பார்களே! அருள்மிகு கோணியம்மனுக்கு நெய் விளக்கேற்றி மகன் பெயருக்கு சீக்கிரம் திருமணம் கைகூட அர்ச்சனை செய்யுங்கள். திருமணம் முடிந்த பிறகு தம்பதியாக அழைத்து வந்து மஞ்சள் புடவை சாத்தி அர்ச்சனை செய்து வழிபடுவதாக வேண்டிக் கொள்ளுங்கள். அப்புறம் என்ன? உங்கள் வீட்டில் மங்கள வாத்தியம் தான்.
** பிறப்பின் ரகசியம் என்ன... விளக்கம் வேண்டும்.ஏ.லதா, மதுரை.
நமக்குப் பல பிறவிகள் உண்டு என்று நம்பினால் தான், நான் கூறும் ரகசியம் உங்களுக்குப் புரியும். கடந்த பிறவியில் நாம் செய்திருக்கும் செயல்களுக்கான பலனை அனுபவிப்பதற்காக மீண்டும் இப்போது பிறந்திருக்கிறோம். நல்லது நிறைய செய்திருந்தால் இப்பிறவியில் நன்றாக வாழ்வோம். தீயன செய்திருந்தால் துன்பத்துடன் வாழ்வோம். இப்பிறவியில் நிறைய நல்லது செய்வோம். தர்மங்கள் செய்வோம். இப்பிறவியில் கிடைக்காத இன்பங்களை அடுத்த பிறவியிலாவது அடைவோம்.
* சுவாமிக்குப் புழுங்கல் அரிசி சாதம் நைவேத்யம் செய்யலாமா? ஏ.ஜெயஸ்ரீ, நெய்வேலி.
அரிசியை ஒரு முறை வேக வைத்துவிட்டால் அதை உடனே நிவேதனம் செய்து விட வேண்டும். நெல்லை ஒரு முறை வேக வைத்து காய்ந்த பிறகு அரிசியாக்கிவிட்டால் பழைய சோறுக்குச் சமம் தானே? எனவே புழுங்கல் அரிசி நிவேதனத்திற்கு உகந்ததல்ல. பச்சரிசியே சிறந்தது. பிள்ளையார் சதுர்த்தியன்று இட்லி நிவேதனம் செய்வார்கள். இதற்குக் கூட புழுங்கல் அரிசியை உபயோகிக்காமல் பச்சை அரிசியிலேயே செய்வார்கள்.
* நெற்றியில் அணியும் திருமண் பெருமாளின் பாதம் என்கின்றனர். பெருமாளும் திருமண் அணிகிறாரே, ஏன்? -கே.ராஜூ, மதுரை
நம் நிலை வேறு, பெருமாளின் நிலை வேறு. நாம் அணியும் பொழுது பெருமாளின் திருவடிகளே நம் நெற்றியில் பதிவதாக பக்தியோடு எண்ணி அணிய வேண்டும். வைணவத்தின் உயர்ந்த சின்னமாகிய திருமண்ணை பெருமாள் அணிவது நமக்கு மங்களத்தைச் செய்வதற்காக.
* கோமாதா பூஜையை எந்தக்கிழமையில் செய்வது நல்லது? டி.ஹேமலதா, சின்னக்காஞ்சிபுரம்.
தினமும் செய்வது மிக மிக விசேஷமானது. "யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை' என்று திருமந்திரம் என்னும் நூல் கூறுகிறது. எல்லோராலும் தினமும் எளிமையாகச் செய்யக் கூடிய உயர்ந்த தர்மம் பசுமாட்டிற்கு புல் கொடுத்து வழிபடுவது என்பது இதன் பொருள். தினமும் செய்ய இயலாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது செய்யலாம்.