பெண்களே! பூஜையறையை அலங்கரிக்க விளக்குகள், பிற பொருட்களை வாங்க வேண்டுமென நினைக்கிறோம். ஷாப்பிங் கிளம்பும் முன் உங்களுக்கு ஒரு 'ஐடியா' இருக்கட்டுமே என்பதற்காக இந்த ஸ்பெஷல் பகுதியைத் தந்துள்ளோம். முதலில், பூம்புகார் நிலையங்களில் உள்ள விளக்குகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா!
* வியாபாரிகளுக்கான டேபிள் தீபம்
வியாபார நிறுவனங்களில் விளக்கேற்ற விரும்புபவர்கள், ஐந்து முகமுள்ள டேபிள் தீபம் வாங்கலாம். உயரம் மிகவும் குறைவாக உள்ள இத்தீபத்தை, கடையிலுள்ள மேஜை மீது வைத்துக் கொண்டு ஏற்றலாம். இவ்விளக்கை ஏற்றும் இடத்தில் வியாபாரம் செழிப்பதோடு கண்திருஷ்டி நீங்கும் என்பது நம்பிக்கை. இதில் இருவகை தீபங்கள் உள்ளன. அன்னபறவையுடன் சிறு டிசைன் செய்யப்பட்ட விளக்கின் விலை ரூ.510. டிசைன் இல்லாத சாதாரண மாடல் தீபம் விலை ரூ.440.
* தூண்டாமலே எரியும் விளக்கு
விளக்கேற்றி விட்டு பக்கத்து கடைக்குப் போய்விட்டு வருவோமே என கிளம்பிப் போய்விட்டால், எண்ணெய் இருக்கிறதா,
திரியைத் தூண்டாமல் விளக்கு அணைந்திருக்குமோ, விளக்கு தானாக அணையக்கூடாதே என்று தவிப்பவர்களுக்கு தீர்வு தரும் தீபமே, தூண்டாமணிவிளக்கு. இதை தலைகீழாக கவிழ்த்து எண்ணெய் விட வேண்டும். உச்சியில் அன்னப்பறவை இருக்கிறது. இவ்விளக்கினுள் செல்லும் காற்றின் அளவுக்கேற்ப எண்ணெய் கீழே வரும். அதன்
மூலம் திரி தொடர்ந்து மணிக்கணக்கில் சுடர்விட்டு பிரகாசிக்கும். இரவு நேரத்தில் பூஜையறையில் விடிய விடிய விளக்கேற்றும் பழக்கமுள்ளவர்கள், பகல் முழுவதும் அணையாமல் பாதுகாப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதை ஏற்றி வைத்து விட்டு, தூங்கி விட்டாலோ, வெளியில் சென்று விட்டாலோ பரவாயில்லை. தொடர்ந்து இவ்விளக்கு எரிந்து கொண்டிருக்கும். அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் வழியைப் பின்பற்றும் அன்பர்கள் இதை விரும்பி
வாங்குகிறார்கள். விலை ரூ.930.
பத்தி ஸ்டாண்ட்
பித்தளையால் செய்யப்பட்ட பத்தி ஸ்டாண்ட் மிக நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டுள்ளது. விலை ரூ.100. தேங்காய் கொட்டாங்கச்சியால் செய்யப்பட்ட பத்தி ஸ்டாண்டின் விலைரூ.25. இவ்விரண்டிலும் பத்தியின் சாம்பல் கீழே விழாது
பிரசாத தட்டு
தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்பவர்கள் சுவாமிக்கு கல்கண்டு, உலர்திராட்சை, சுத்தான்னம் போன்ற ஏதாவது ஒன்றை நிவேதனம் செய்வர். இதற்காக பிரத்யேகமாக பிரசாதத்தட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. செம்பினால் செய்யப்பட்ட இந்த தட்டு, அளவைப் பொறுத்து ரூ85, ரூ.150 என்ற விலைக்கு விற்கப்படுகிறது.