ADDED : அக் 10, 2021 11:34 AM

அகவற்பாவால் எழுதப்பட்ட ஜகத்குரு ஆதிசங்கரர் வரலாறு. இயற்றியவர் நா.நடராஜன். காஞ்சி மஹாபெரியவர் மடாதிபதியாக பொறுப்பேற்று ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி ஜாம்ெஷட்பூரில் நடந்த பொன்விழாவில் 1957 மார்ச் 13 - 16ல் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
லக்ஷ்மிகாந்தன் நாரணனை நினைத்து
'லக்ஷ்மீந்ருசிம்ம மமதேஹி. கராவலம்பம்”
எனும் எழில் ஸ்லோகங்கள் எண்பதினேழினால்
புகழ்பெற துதித்தார் புண்ணியர் சங்கரர்.
தோத்திரம் கேட்ட நாரணன் உடனே
சாத்திரமறி சங்கரர் தன்னைத் தழுவினான்.
கருணாமூர்த்தியின் கைபட்ட மாத்திரம்
அருணோதயம் போல் திகழ்ந்தார் சங்கரர்.
எரிந்த கைகள் பொலிந்து விளங்கின.
எம்பெருமான் மகிமையை எல்லோரும் உணர்ந்தனர்.
பின்னர் சங்கரர் தன்னுடைச் சீடருடன்
முன்னர் தானளித்த வாக்கை நிறைவேற்ற
மாகிஷ்மதி பட்டணம் மறுமுறை வந்தார்.
மண்டன மிச்ரர் மனைவி சரஸவாணி
கண்டனள் அவரை, உரைத்தனள் உடனே.
'உம்மையினி வெல்வதற் கெம்மாலாகாது
உண்மையிலுமக்கே உரித்தாம் ஜெயம்' என்று.
மண்டன மிச்ரரின் மனவிருப்பப்படி
கொண்டன ரவரைத்தன் பிரதான சீடராய்
சன்யாச ஆச்ரமம் சங்கரர் தந்தவர்க்கு.
சாக்தம் காபாலிகம் காணபதம் பைரவமும்
நாஸ்திகம் நிறைந்த பல்வேறு மதங்களும்
நாட்டு மக்களை ஆட்டுவித்த காலமதில்
திக்விஜயம் செய்த தீரர் சங்கரர்
கோர மதங்களை வேரோடு வீழ்த்தினார்.
சாதிமத பூசல்களை சடுதியில் விடுத்து
சமமென வாழ அவருபதேசித்தார்.
உக்கிர பைரவன் என்றோர் காபாலிகன்
உண்மையிலவரை வெல்ல முடியாதென
கபட மனதுடன் காருண்ய சங்கரரிடம்
'யார் எதைக் கேட்பினும்
இல்லையென இயம்பாத் தகையே
தருவீர் உமது தலைதனை எனக்கு
பெருமிதமுடன் இடுவேன் அதையே
அனலில் பைரவர்க்கு ஆகுதியாக'
எனவே பகர்ந்தான் இசைந்தார் சங்கரர்.
''நண்ணிய சீடர் நடுவில் நீயும்
என்தலை கொய்தால் உன்தலை போகும்
ஆதலால் நீயும் அவசரப் படாமல்
அண்மையில் யாரும் இன்றியே யானும்
நிஷ்டை யிருக்கையில் இஷ்டம்போல் செய்'' யென்றார்.
யோக நிஷ்டையில் அமர்ந்த சங்கரரை
வேகமாய் அணுகினான் வீரபைரவன்
உருவியவாளுடன் அவர் தலை கொய்ய.
அவ்விடமுடனே ஆவிர்ப்பவித்தார்
அரன் நரசிம்மர் பத்மபாதர்பால்
அரக்கனைக் கிழித்தார் அவர் தன் நகங்களால்
அபாயமதுவும் அங்ஙனே தவிர்ந்தது.
அதன் பின்னர் சங்கரர்க்கு அமர்ந்தனர் சீடராய்
ஹஸ்தாமலகர் தோடகர் என இருவர்.
துங்கா நதிக்கரையில் சிருங்ககிரி சாந்தி
சங்கரர் மனங்கவர்ந்து சந்தோஷமளித்தது.
உத்தமமான ஓரையில் அங்கு
உடனே ஸ்தாபித்தார் ஸ்ரீ சாரதா பீடத்தை.
இவ்விதமவர் ஸ்தாபித்த பீடங்கள் பலவாம்
இவற்றுள் அடங்கியவை இங்கே சொல்வேன்
துவாரகையில் நிறுவியது காளிகா பீடம்
துாயபதரியில் தோன்றியது ஜ்யோதிர்பீடம்
ஜகன்னாத்தில் அமைத்தார் கமலா பீடம்
காஞ்சியில் அமைத்தார் காமகோடி பீடம்.
சங்கரர் செய்த பாஷ்யங்கள் அனந்தம்
சமன் அவற்றிற்கு சகத்தினில் ஏது?
பகவத் கீதைக்கவர் இயற்றிய பாஷ்யம்
பாமர மக்களும் புரிந்திடக் கூடும்.
வேதாந்த சூக்தங்கள், விஷ்ணு சகஸ்ரநாமம்
உபநிஷதங்கள் உள்பட்டவைக்கு
அவர் செய்தார் பாஷ்யங்கள் அவனியோர் அறிய.
உலகத்தாருக்கிவர் உபதேசம் பலசெய்தார்.
உருக்கமிகும் தோத்திரங்கள் உவகையுடன் பகர்ந்தார்
'மனீஷா பஞ்சகம், சோபான பஞ்சகம்,
பஜகோவிந்தம்' பல பிரசித்தியானவை.
பதரீகேதாரத்தில் பாதாளகுகையொன்றில்
நிஷ்டையிலிருந்து இஷ்டகுரு இருவரை
கோவிந்தபாதர் கெளடபாதரையும்
கண்ட சங்கரர் கணப் பொழுதினிலே
தக்ஷிணாமூர்த்தியின் அஷ்டகம் பாடினார்
அக்ஷணம் விழித்தனர் அவர் குருமூர்த்திகள்
அனுக்ரகித்தனர் அவர் செய்த பாஷ்யங்களை,
அங்கிருந்தவர் கைலாஸம் சென்றார்.
அவண் வீற்றிருந்த பரமனைக் கண்டார்
துதித்தார் ஈசனை மெய்யது மறந்துமே
அகமகழ்ந்து ஈசன் அளித்தார் அவர்பால்
-தொடரும்
