ADDED : பிப் 12, 2021 08:39 AM
* பிறந்த குழந்தைக்கு உணவு தாய்ப்பால். அதன்பின் நமக்கு பசுவின் பால் உணவில் இடம் பெறுகிறது. இறப்பதற்கு முன் உயிர் துடிக்கும் போது பால் ஊற்றுகிறோம். மறைந்த பின் சிதையிலும் பால் ஊற்றப்படுகிறது. “முருகா! பிறப்பு முதல் இறப்பு வரை சுமை தான். அந்தச்சுமையை தாங்குபவனாக என்னுடன் நீ வர வேண்டும்'' என்றழைப்பதே பால் காவடி தத்துவம்.
* வாழ்வில் குறுக்கிடும் துன்பங்களால் ஏற்பட்ட மனச்சூட்டை தணித்து வை என வேண்டுவது பன்னீர், சந்தனக்காவடி தத்துவம்.
* என் வாழ்க்கைப் பாதையில் மனைவி, குழந்தைகள், உற்றார், உறவினர் என எத்தனையோ பேர் உதிரிப்பூக்களாய் வந்திருக்கின்றனர். என்னுடன் அவர்களையும் கரை சேர்க்க வேண்டும் என வேண்டுவது புஷ்பக்காவடி தத்துவம்.
* மீன் போல பிறவிக் கடலில் தத்தளிக்கிறேன். கருடனைக் கண்டால் புற்றுக்குள் பாம்பு ஒளிவது போல, நானும் தவிக்கிறேன். இதிலிருந்து விடுவித்து உன்னோடு என்னை சேர்க்க வேண்டும் என்பது மச்ச, சர்ப்ப காவடி தத்துவம்.
* விடியற்காலையில் கூவும் சேவல் போல் வாழ்வில் எப்போது விடியல் வரும் என வேண்டுவது சேவல்காவடி தத்துவம்.