ADDED : ஜூன் 01, 2010 12:13 PM

ஒரு பெரியவர் திருமாலின் பக்தர். சகலலோகத்துக்கும் அதிபதி அவனே!
அவனைத் தவிர இன்னொரு தெய்வம் இல்லை என்று நினைப்பவர். ராமானுஜர் உபதேசித்தது போல, "ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை எந்நேரமும் தியானித்துக் கொண்டிருப்பவர். காலையில் எழுந்ததும் "ஹரி ஹரி' என்ற திவ்யநாமத்தை 108 முறை சொன்னபிறகே அன்றாடப் பணிகளைச் செய்வார். உணவருந்தும் முன்
"கோவிந்தா' என முழங்குவார். வெளியில் கிளம்பும்போது "கேசவா' என்று ஏழுமுறை சொல்வார். இரவில் உறங்கும் முன் "மாதவா' என்ற திருநாமத்தை 108 முறை உச்சரித்த பிறகே தூங்குவார்.
அவரது வீட்டுக்கு வரும் திருமாலின் அடியவர்களை அன்புடன் உபசரிப்பார். ஒரு சமயம், அவர் வெளியூர் சென்றிருந்தார். அப்போது, சில அடியவர்கள் வந்துவிட்டனர். வந்தவர்களுக்கு சோறிட வீட்டில் அரிசி இல்லை. வந்தவர்களை அமரவைத்து விட்டு, பக்கத்து வீடுகளில் போய் கடன் கேட்க எப்படி செல்ல முடியும்? அவள் தவித்தாள். அப்போது தான், வயலில் விதைக்க விதை நெல் இருந்தது நினைவுக்கு வந்தது. அதை எடுத்தாள், குற்றினாள். கைகுத்தல் அரிசியில் ஜோராக தயாரானது வெண் பொங்கல், அடியவர்கள் மனம் குளிர சாப்பிட்டு விடை பெற்றனர்.
வெளியூர் சென்றிருந்த பக்தர் மறுநாள் தான் வந்தார். விதைப்பதற்குரிய நெல்லைத் தேடினார். காணவில்லை.
""அதை எங்கே?'' என மனைவியிடம் கேட்டார்.
""அதைத்தான் ஏற்கனவே விதைத்து விட்டேனே!'' என்றாள் அந்தப் பெண்மணி.
""எங்கே விதைத்தாய்?''
""வைகுண்டத்தில்!''
""வைகுண்டத்திலா...?''
""ஆம்! திருமாலின் அடியவர்களுக்கு இட்ட விதைநெல் வைகுண்டத்தில் விதைக்கப்பட்டதாகத்தானே அர்த்தம்''.
பக்தருக்கு இப்போது உண்மை விளங்கியது. இறைவனின் அடியவர்களுக்கு இடும் தானம், நம்மை சொர்க்கத்தில் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.