ADDED : பிப் 09, 2018 11:34 AM

மகா சுவாமிகளின் பக்தர் ஒருவர் அடிக்கடி காஞ்சிபுரம் மடத்திற்கு வருவார்.
ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு சந்தேகம் அவர் கேட்க, சுவாமியும் விளக்கம் அளிப்பார்.
அன்றும் அவர் வந்தார். சுவாமிகள் இன்றைக்கு என்ன கேள்வி?' என விசாரித்தார். அவர் சுவாமியிடம், ''நம் இந்து மதத்தில் எத்தனையோ உட்பிரிவுகள் இருக்கின்றன. எத்தனையோ ஜாதியினர் உள்ளனர். அவரவரும் அவரவரின் இஷ்ட தெய்வத்தை வழிபடுகிறார்கள். ஆனால் நம் மதத்தில் உள்ள எல்லோரும் சொல்லக் கூடிய பொது மந்திரம் என்று ஏதாவது இருக்கிறதா?'
சுவாமிகள் பதில் சொன்னார்;
'அப்படியொரு மந்திரம் இருக்கிறது. அதை இந்து மதத்தின் எந்த உட்பிரிவினரும் சொல்லலாம். ஒரு பெண் ஞானி, அந்த மந்திரத்தின் மகத்துவத்தை பற்றி பாடலே எழுதியிருக்கிறார். அவ்வைப் பாட்டி தான் அந்த ஞானி. அவ்வையை மிஞ்சிய ஞானி உலகத்தில் யார் உண்டு? எளிய தமிழில் எல்லோருக்கும் புரிகிறாற்போல் நிறைய விஷயங்களை எடுத்து சொல்லி இருக்கிறார்.
அவர் எழுதிய நல்வழி என்று ஒரு நுால்... அது பக்தி நுால் அல்ல... வாழ்வின் தத்துவங்களை விவரிக்கிற வாழ்வியல் நுால். நிலையாமை, செல்வ செருக்கு, பசிக்கொடுமை உள்ளிட்ட, எத்தனையோ அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை அழகழகான நாலடி வெண்பாக்களில் சொல்லியிருக்கிறார்.
அதில் ஒரு வெண்பா 'சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு, அபாயம் ஒரு நாளும் இல்லை' என்கிறது. ஒரு பொதுவான வாழ்வியல் நுாலில் சிவ நாமத்தின் சிறப்பை அவர் சொல்லியிருப்பதால், இந்து மதத்தின் எல்லா பிரிவினரும் 'சிவாய நம' என்ற மந்திரத்தை பயன்படுத்தலாம் என்றாகிறது. இது பொது மந்திரம். தவிர ஓம் நமோ நாராயணாய, சரவணபவ, காயத்ரி மந்திரம், ராம நாமம் என்று பல மந்திரங்கள் இருக்கின்றன. அவரவர் ஈடுபாட்டுக்கு தகுந்த மாதிரி எதையும் ஜபிக்கலாம். எதை சொன்னாலும் மன ஒருமைப்பாட்டோடு பக்தி பூர்வமாகச் சொல்ல வேண்டும். அது தான் முக்கியம்!'' என்ற சுவாமிகள் வலக்கரம் உயர்த்தி ஆசிர்வதித்தார். கேள்வி கேட்டவர் மன நிறைவோடு விடைபெற்றார்.