sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தமிழகத்தின் தனிச்சிறப்பு

/

தமிழகத்தின் தனிச்சிறப்பு

தமிழகத்தின் தனிச்சிறப்பு

தமிழகத்தின் தனிச்சிறப்பு


ADDED : டிச 17, 2021 12:03 PM

Google News

ADDED : டிச 17, 2021 12:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகிலேயே சிறந்த ஆன்மிக பூமியாக தமிழகம் விளங்குவதற்கான காரணம் பாகவத மகாபுராணத்தில் உள்ளது. தமிழகத்தை தன் பிறந்த வீடு என பக்திதேவி பெருமையுடன் சொல்லி மகிழ்கிறாள். தமிழக அரசின் முத்திரையில் கூட கோபுரம் தானே விளங்குகிறது. அந்த தமிழ் நாட்டின் சிறப்புகளில் தனித்துவம் வாய்ந்ததாக நடமாடும் தெய்வம் என உலகம் கொண்டாடும் காஞ்சி மஹாபெரியவர் சொல்வது விநாயகர் வழிபாடும் அதிலுள்ள சிறப்பு அம்சங்களையுமே.

1941ம் ஆண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை நாகப்பட்டினத்தில் மஹாபெரியவர் கடைபிடித்தார். சிவராஜதானி என்று சிவபெருமானின் தலைநகரமாக நாகப்பட்டினம் கொண்டாடப்படுகிறது. அங்கு நீலாயதாட்சி அம்மனை தரிசித்து வந்தார். அவர் செல்லும் போதெல்லாம் கோயில் வாசலில் உள்ள விநாயகருக்கு சூரைக்காய் உடைப்பது வழக்கம். பொதுவாக எங்கு விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்தாலும் உடனே அங்குள்ள சிறுவர்கள் ஓடி வந்து அதை எடுத்து உண்பது வழக்கம். அதுபோல ஒருநாள் காஞ்சி மஹாபெரியவர் வந்ததும் சிதறுதேங்காய் உடைத்தனர். அதை சிறுவர்கள் முண்டியடித்துக் கொண்டு எடுக்க வரவே தொண்டர்கள் தடுக்க முயன்றனர்.

அப்போது சிறுவன் ஒருவன், ''விநாயகருக்கு தேங்காய் உடைத்து விட்டு அதை சிறுவர்களாகிய நாங்கள் எடுக்கத் தடுக்கப்படுவது என்ன நியாயம்? குழந்தைக் கடவுளான விநாயகரிடம் சிறுவர்களாகிய எங்களுக்குத் தான் உரிமை. அதை தடுக்க பெரியவர்களாகிய உங்களுக்கு உரிமை இல்லை'' என்று சொல்ல அனைவரும் செயலற்று நின்றனர். இதைக் கண்டு மஹாபெரியவர் ''அந்த சிறுவன் சொல்வது சரியே. குழந்தைகளின் சுவாமியான விநாயகரே இந்த சிறுவன் வடிவில் நமக்கு பாடம் புகட்டியிருக்கிறார்'' என்றார். நாம் அனைவரும் 'ஜகத்குரு' என மஹாபெரியவரை கொண்டாடி உபதேசம் கேட்கிறோம். அவரோ எளிமையிலும் எளிமையாக ஒரு சிறுவன் கூறியதை உபதேசமாக ஏற்றுக் கொள்கிறார்.

தான் என்னும் அகங்காரம் சிறிதும் இல்லாத மகான் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. இப்படி சூரைத்தேங்காய் உடைக்கும் வழக்கம் தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. உலகிலேயே கோயில்கள் நிறைந்த நாடு இந்தியா. பலவித தெய்வங்களுக்கு பலவிதமான கோயில்கள். இந்த கோயில்களிலும் பெருவாரியானவை தமிழகத்தில் தான் உள்ளது. அதுவும் கட்டிடக்கலை, சிற்பக்கலைகளின் களஞ்சியமாக கணக்கற்ற கோயில்கள். அதிலும் விநாயகருக்கே அதிக கோயில்கள் என்பதில் இருந்து விநாயகருக்கும், தமிழகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு தெளிவாகும்.

விநாயகரின் தம்பி முருகப்பெருமான் தமிழ்க்கடவுள் என்றால் அண்ணன் விநாயகர் வேறு மொழி, ஊர்க்காரராகவா இருக்க முடியும்? ''முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே'' என்றல்லவா அருணகிரிநாதர் தமிழ் இலக்கண அடைவினை விநாயகர் எழுதியதாக புகழ்கிறாரே. இப்படியாக பலப்பல சிறப்புகள் கொண்ட விநாயகரை தொன்மையான தமிழகம் கண்டு கொண்டு அவரை நன்றியுடன் வழிபட்டதால் தான் இங்கு திரும்பிய இடமெல்லாம் விநாயகர் கோயில்கள். கோயில் என்றால் ஏதோ பெரிய அளவில் தான் வேண்டும் என்றில்லாமல் ஆற்றங்கரை, அரச மரத்தடி, முச்சந்தி என்று எங்கும் எப்படியும் அமர்ந்து அருள்பாலிக்கும் எளிமையான தெய்வம் விநாயகரே.

ஆனால் அவரோ ரொம்ப பெரிய இடத்துப் பிள்ளை. அனைத்து உலகிற்கும் தாய் தந்தையான பார்வதி, பரமேஸ்வரரின் மூத்தபிள்ளை. அதனால் தான் அவரை மிக மரியாதையாக 'பிள்ளையார்' என அழைக்கிறார்கள். சிறுபிள்ளையாக இருந்தாலும் அருள்புரிவதில் முதல்வராக இருப்பவரும் இவரே. அதற்கு உதாரணம் தமிழ்ப்பாட்டி அவ்வையாரை நொடிப்பொழுதில் ஒரே துாக்காக தும்பிக்கையால் துாக்கி சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனாருக்கும் முன்பாக கைலாயத்தில் விநாயகர் சேர்த்தார். அவ்வையார் பாடிய விநாயகர் அகவலை தினமும் பாடி நல்வாழ்வு நாம் பெற வேண்டும் என்பதே காஞ்சி மஹாபெரியவரின் விருப்பம்.

உபதேசமும் கூட. அதைப் பின்பற்றி வாழ்வில் நலம் பெறுவோம்.

எஸ்.கணேச சர்மா






      Dinamalar
      Follow us