sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சரணம் ஐயப்பா - 3

/

சரணம் ஐயப்பா - 3

சரணம் ஐயப்பா - 3

சரணம் ஐயப்பா - 3


ADDED : டிச 17, 2021 12:04 PM

Google News

ADDED : டிச 17, 2021 12:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகிஷன் பெற்ற வரம்

அந்த மகான் வேறு யாருமல்ல...அசுரர்களின் குரு சுக்ராச்சாரியார். அவரைச் சந்தித்த மகிஷாசுரன், “குருவே! அசுரர்களான நமக்கும், தேவர்களுக்கும் எந்நாளும் போர் நடக்கிறது. தேவர்கள் நம்மிடம் பலமுறை தோற்றுள்ளனர். ஆனால் அவர்கள் சாவதில்லை. நமது தரப்பில் பல அசுரர்களை இழந்து விடுகிறோம். இதற்கான காரணம் என்ன” என்றான்.

“மகிஷா! அது மிகப்பெரிய கதை. ஒருசமயம் பாற்கடலைக் கடைந்து, அதிலிருந்து வெளிப்படும் அமிர்தத்தை குடித்தால், அவர்களுக்கு மரணமில்லை என்ற மிகப்பெரிய வரத்தை சிவபெருமான் அருளினார். இந்த கடைசலுக்கு பொறுப்பு வகித்தவர் மகாவிஷ்ணு. ஆனால் மாயங்கள் செய்வதில் வல்லவரான விஷ்ணு, எங்களை ஏமாற்றி தேவர்களுக்கு மட்டும் அமிர்தத்தைக் கொடுத்து விட்டார். அன்றுமுதல் தேவர்கள் தோற்றாலும் அழிவதில்லை. அசுரர்களோ கொல்லப்படுகிறார்கள், என்ன செய்வது...அது நமது தலையில் எழுதப்பட்ட விதி” என நொந்தபடியே பேசினார்.

“அப்படியானால், நானும் சாகாவரம் பெறப்போகிறேன். எந்த சிவன் தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்க காரணமானாரோ, அவரை எண்ணி தவம் செய்வேன். எவ்வளவு கொடிய சோதனைகள் வந்தாலும் தாங்கி சாகாவரம் பெற்றே தீருவேன்,” என்றான்.

சுக்ராச்சாரியரும் அவனது உறுதியைப் பாராட்டினார். தவம் செய்ய காட்டில் இடைஞ்சல் இல்லாத இடத்தை தேர்ந்தெடுக்க அறிவுரை வழங்கினார். மகிஷனும், தன் சகாக்களின் உதவியுடன் அருமையான இடத்தைக் கண்டுபிடித்தான். அங்கு செல்ல ஒருவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அரசுப்பணிகளை சுக்ராச்சாரியாரிடம் ஒப்படைத்து விட்டு தவத்தை தொடங்கினான்.

பல ஆண்டுகள் கடந்தன. ஆனால் மகிஷாசுரன் தனது உறுதியை விடவில்லை. கடுமையான தவத்தில் மூழ்கினான். அவனைச் சுற்றி புற்று எழுந்தது. பாம்புகள் குடிபுகுந்தன. அவை அவனைக் கொத்தின. விஷம் ஏறியதே தவிர அதுவரை பெற்ற தவசக்தி, அவனைப் பாதுகாத்தது. எதற்கும் சிவன் மசியவில்லை என தெரிந்ததும், ஒரு உடைவாளை எடுத்து தன் நெஞ்சை தானே கிழித்து, இறந்து போவது என அவன் முடிவெடுத்தான். வாளை அவனது மார்பில் பாய்ச்ச ஓங்கிய போது சிவன் அவன் முன் காட்சி தந்து தடுத்தார்.

“மகிஷா! உன் தவத்திற்கு எத்தனையோ இடையூறுகள் ஏற்பட்ட போதும், அவற்றையெல்லாம் தகர்த்தாய். என்னை முழுமையாக நம்பினாய். நம்பியவர்களை நான் கைவிடுவதில்லை. உன் தவத்தின் நோக்கம் என்ன” என்று கேட்டார்.

“ஐயனே! எனக்கு மரணமே வரக்கூடாது. உலகம் உள்ளளவும் நான் இருக்க வேண்டும். அதுவே இந்த கடும் தவத்தின் நோக்கம். எனக்கு இந்த வரத்தை அருளுவீர்களா” என்ற மகிஷனிடம்,“அசுரனே! ஒவ்வொரு உயிருக்கும் மரணம் என்பது தவிர்க்க முடியாதது. உனக்கு மிக நீண்ட ஆயுள் தருகிறேன். ஆனால் ஏதாவது ஒன்றால் உன் அழிவை நீயே தேர்ந்தெடுத்துக் கொள்” என்றார் சிவன்.

'ஆண்களாலும், மிருகங்களாலும், பூச்சி, புழுக்களாலும், நோயாலும், கிரகதோஷத்தாலும், இன்னும் பல சக்திகளாலும் அழிவு ஏற்படுவது நிச்சயம். பெண்கள் மிகவும் பலம் குறைந்தவர்கள். அவர்களால் நம்மை என்ன செய்து விட முடியும். எனவே பெண்களைத் தவிர மற்ற எந்த சக்தியாலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்று வரம் பெறலாமே” என யோசித்தான் மகிஷன்.

அதையே சிவனிடம் வரமாகக் கேட்டான். சிவனும் அதை தந்தருளினார்.

இந்த வரத்தை பயன்படுத்தி மகிஷாசுரன் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. தேவலோகத்துக்கு சென்று தேவர்களை சிறை பிடித்தான். பூலோகம் அவன் கைக்குள் வந்தது. பாதாளத்துக்குள்ளும் புகுந்து வெற்றிக்கொடி நாட்டினான். எல்லா உலகமும் தனது கைக்குள் வந்ததால் இறுமாப்பு அடைந்தான். அவனிடம் இருந்து தப்பிய சில தேவர்கள் சிவபெருமானைச் சரணடைந்தனர்.

“தெய்வமே! நீங்கள் தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். மகிஷாசுரனிடம் பிடிபட்டவர்கள் படும் துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. அடிக்கிறான், மிதிக்கிறான், கத்தியால் கீறுகிறான், தேவர்களுக்கு மரணமும் ஏற்படாது. உயிருடன் சித்ரவதை அனுபவிக்கிறார்கள். நீங்கள் கொடுத்த வரமே இதற்கு காரணம். தயவுசெய்து, கொடுத்த வரத்தை திரும்பப் பெறுங்கள்” என்றனர்.

சிவன் சிரித்தார்.

“தேவர்களே! கொடுத்த வாக்கை திரும்பப் பெறும் வழக்கம் எனக்கில்லை. அவரவர் செய்த பாவங்களே அவரவரை விரட்டுகிறது. நீங்கள் தேவர்களாக இருந்தாலும், அவ்வப்போது நீதி தவறி நடக்கிறீர்கள். தேவர் தலைவன் இந்திரன் தன் சுயநலத்துக்காகவும், பதவியைத் தக்க வைக்கவும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறான். தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள். பூலோகத்தில் பிறக்கும் மனிதர்களுக்கு மட்டுமல்ல, தேவலோகத்தினர் தவறு செய்தாலும் தண்டனை உண்டு. அந்த தண்டனையையே இப்போது நீங்கள் அனுபவிக்கிறீர்கள். இருப்பினும் வரம் பெற்றவன் அதை நல்வழிக்கு பயன்படுத்த வேண்டுமே தவிர, அகங்காரம் கொண்டு தீயவழியில் சென்றால், அதை அடக்குவதும் என் கடமையே! நீங்கள் கவலையின்றி செல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்”என்றவர் தன் அருகில் நின்ற பார்வதிதேவியை நோக்கினார்.

கணவன் தனக்கு பார்வையாலேயே கட்டளையிடுகிறார் என்பது பார்வதிதேவிக்கு புரிந்து விட்டது. மகிஷாசுரன் தனது மரணத்துக்கு விதிவிலக்கு பெற்ற ஒரே இனம் பெண் இனம். யாரிடம் எதைக் கேட்டாலும் யோசித்துக் கேட்க வேண்டும். தேவலோகப் பெண்களாலும், பூலோகப் பெண்களாலும், கடலுக்குள் வசிக்கும் கடல் கன்னிகளாலும் தன்னை என்ன செய்து விட முடியும் என்பது அவனது கணிப்பு. ஆனால் சிவனின் துணைவி பார்வதிதேவி, விஷ்ணுவின் துணைவியரில் ஆங்கார சக்தியான வீரலட்சுமி ஆகியோரால் தனக்கு அழிவு வரும் என்பதை அவன் உணரவில்லை.

கருணைக்கடலான பார்வதிதேவி தேவர்களை அன்புடன் நோக்கினாள்.

“யாரும் கலங்காதீர்கள். மகிஷனை அழித்து உங்களைக் காப்பது என் கடன்” என்றாள். தேவர்கள் நிம்மதியுடன் திரும்பினர்.

பின் மகிஷன் இருக்குமிடத்திற்கு பார்வதி சென்றாள். சாதாரணமாக இல்லை...மூன்று கண்கள், பதினெட்டு கைகள், அத்தனை கைகளிலும் மும்மூர்த்திகளும், தேவர்களும் தந்த ஆயுதங்கள்... தனக்கு வாகனமாக ஒரு சிங்கம். கரிய நிறம்... நாக்கை வெளியே நீட்டிய ஆங்கார கோலம்... ஆம்..மகாகாளியாக மகிஷன் முன் நின்றாள்.

அவளைக் கண்டு சற்றும் கலங்காத மகிஷாசுரன், “பெண்ணே! நீ யார். எதற்காக இங்கு வந்தாய், ஏன் இந்த கோபக்கனல். உனக்கு யாரேனும் தீங்கு இழைத்தனரா. எல்லா பெண்களையும் போல் அல்லாமல், பதினெட்டு கைகள், மூன்று கண்களுடன் திகழ்கிறாயே! இதென்ன புதுப்பிறவி...” என கேட்டான்.

“மகிஷனே! நான் சிவபத்தினி பார்வதி. நீ என் கணவரிடம் பெற்ற வரத்தை தவறாகப் பயன்படுத்தி, தேவர்களைத் துன்புறுத்துகிறாய். பூலோகத்தினரை இம்சிக்கிறாய். பெண்களை நாசம் செய்கிறாய். மும்மூர்த்திகளும் ஆண்களே என்பதால், அவர்களாலும் உன்னை அழிக்க முடியாது என மமதை கொண்டுள்ளாய். இதையெல்லாம் நிறுத்தி விடுகிறேன் என என் பாதங்களில் சரணடைந்து விடு. உனக்கு உயிர்ப்பிச்சை தருகிறேன்,” என்று சிம்மக்குரலில் கர்ஜித்தாள் அந்த சிம்ம வாகினி.

அந்த எருமைத்தலையன் அவளை நோக்கி எக்காள சிரிப்பு சிரித்தான்.

- தொடரும்

தி. செல்லப்பா

thichellappa@yahoo.com






      Dinamalar
      Follow us