ADDED : ஜூன் 12, 2016 03:15 PM

அடுத்து,
“சென்னியது உன் பொற்றிருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன்திரு மந்திரம் சிந்தூர வண்ணப் பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே
பன்னியது என்றும் எந்தன் பரமாகம பத்ததியே”
என்று பாடிய அபிராமி பட்டர் அதற்கான விளக்கத்தை வழங்கினார்.
“செந்நிறம் பொருந்திய அபிராமியே! பொன் நிறத்தில் ஜொலிக்கும் உன் திருவடித்தாமரை என் சிரத்தில் எப்போதும் அழுந்தியிருக்கிறது. என் மனதிலோ உன் திருமந்திரம் நிலைத்திருக்கிறது. நான் என்றும் விரும்பி செய்யும் செயல் என்னவெனில், உன்னை மட்டுமே போற்றும் பக்தர்களுடன் சேர்ந்து முறையாக உனது பூஜைகளை ஆகமவிதிப்படி செய்வதுதான். நமது சிரசில் (தலையில்) தேவையற்ற எண்ணங்கள், பூர்வ கர்ம வாசனைகள், துர்குணம், காமம், குரோதம், மதம், மோகம், லோபம் உள்ளிட்ட எதிர்மறை இயல்புகள் சேறு போல குழம்பி உள்ளன. இதனால் பிரம்மன் நம் தலையில் ஒரு லிபியை எழுதி மீண்டும் பிறப்பெடுக்க அனுப்புகிறான். அந்த எழுத்துக்கு ஏற்றவாறு நாம் மீண்டும் உலக வாழ்வில் சிக்கித் துயரடைகிறோம். சேற்றில் பூத்த செந்தாமரை போல் அம்பிகையை வழிபடத் தொடங்கியதும், அவளது இருபாதங்கள் என் தலைக்கு வந்தன. உடனே பிரம்மன் எழுதிய தலை எழுத்து மாறி ஆனந்த வாழ்வு மலர்ந்தது,” என்ற பட்டர், கதை ஒன்றைச் சொன்னார்.
பிரம்மா படைப்புத் தொழிலைச் செய்து கொண்டிருந்தார். அப்போது உதயன் என்பவனின் முற்பிறப்பு பாவ புண்ணியக் கணக்கைப் பார்க்க நேரிட்டது. புண்ணியம் என்று சொல்லிக்கொள்ள ஏதுமின்றி நிறைய பாவக் குவியல்களே காணப்பட்டன. பிறர் பொருளை ஏராளமாக கவர்ந்திருந்தான் உதயன். அதற்கு பதிலாக இப்பிறவியில் அவன் தான் பெறும் தனத்தையெல்லாம் இழக்க வேண்டும் என்றே விதியிருந்தது. வேறுவழியின்றி பிரம்மாவும் அவனது தலையில் 'ஸ்ரீ:க்ஷய' என்று எழுதி உலகில் பிறப்பெடுக்கும்படி அனுப்பி வைத்தார். 'ஸ்ரீ:க்ஷய' என்றால் 'பொருள் நாசம்' என்று பொருள். வசதிமிக்க குடும்பத்தில் பிறந்தான் உதயன். பிறந்ததுமே தாயை இழந்தான். உலகில் நாம் பெறும் முதல் செல்வம் தாய் தான். பெற்ற அன்னையைப் பிறந்ததுமே இழப்பது மிக்க கொடுமையானது. தொடர்ந்து அவனது தந்தையை பெரும் தரித்திரம் பீடிக்க அவரும் இறந்தார். கல்வி அறிவு இல்லாத பாமரனாய் பல துயரங்களை அனுபவித்தான். யாரிடம் வேலைக்குச் சென்றாலும் அவர்களின் தொழிலும் நசித்தது. காரணம் அவன் தலையில் பிரம்மன் எழுதிய 'ஸ்ரீ:க்ஷய' என்ற
எழுத்துக்கள் தான்.
தினமும் இரவில் அவன் ஒரு அம்மன் கோவில் வாசலில் படுப்பான். வாசல் கூட்டுவது, நீர் தெளிப்பது, மலர்கொய்து வந்து பூஜைக்குத் தருவது போன்ற சின்னச் சின்ன வேலைகளைச் செய்து வரலானான். கோவிலில் தரப்படும் பிரசாதம், அன்னதானம் போன்றவை அவனது உயிரை வளர்த்தன. ஆலயப் பணிகள் அவனது புண்ணியக் கணக்கைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தின. கோவிலில் மணியடிக்கும் வேலையும் கிடைத்தது.
ஒருநாள் இரவு...
'ஓம் சக்தி! பராசக்தி!' என்று முணுமுணுத்துக் கொண்டே உறக்கத்தில் ஆழ்ந்தான் உதயன். அப்போது கரும்புகை அவனைச் சூழ்ந்தது. ஏதோ உணர்வில் கண் விழிக்க, எதிரில் ஒரு கரிய பெண் உருவம் நின்றதைக் கண்டு பயத்தில், 'அம்மா!' என்று அலறினான். பெருத்த வயிறு. தெற்றுப்பல், அச்சம் தரும் தோற்றம் கொண்ட அந்த உருவத்தின் கால்கள் தரையில் படவே இல்லை.
உதயன் அந்த உருவத்தைப் பார்த்துக் கேட்டான்;
“நீ யார்? ஏன் இப்படி தரையில் கால்பரவாமல் மிதந்து கொண்டிருக்கிறாய்?”
“நான் ஒரு யட்சி. என்னால் தரையில் கால் ஊன்ற முடியாது. ஆனால் யாராவது மனிதர்கள் தங்கள் தலையைக் கொடுத்தால், அதன் மீது நின்றுகொள்வேன். எனது அச்சுறுத்தும் தோற்றம் காரணமாக எவரும் தங்கள் தலையைத் தர முன்வரவில்லை. நீ எனக்கு சிரம் தாழ்த்தினால் உன் தலையில் கால்வைத்து சற்றே இளைப்பாறுவேன்!” என்றாள்.
உதயனுக்கு யட்சியின் மீது இரக்கம் பிறந்தது.
“அம்மா! உன்னைப் பார்த்ததும் முதலில் பயமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது என்னவோ பரிதாபமும், அன்பும் தோன்றி விட்டது. நானோ படுபாவி. நான் தொட்டதெல்லாம் அழியும் தலை எழுத்தை உடையவன். என் தலை மீது நீ நிற்க வேண்டும் என்று கேட்டதால், சிரம் தாழ்த்துகிறேன் ஏறி நின்று இளைப்பாறு” என்று கூறி தன் சிரத்தைத் தாழ்த்தி நின்ற உதயனின் தலை மீது ஏறி யட்சி தன் இரு கால்களையும் பதித்து நின்றாள்.
என்னே அதிசயம்! மறுகணம் அங்கே பேரொளி தோன்றியது. யட்சியின் உருவம் மறைய.. அங்கே சாட்சாத் அபிராமி காட்சி கொடுத்தாள். உதயனின் தலையெழுத்து மாறியது. 'ஸ்ரீ:க்ஷய' என்றிருந்த பிரம்ம லிபி 'யக்ஷ ஸ்ரீ:' என்று மாறியது. 'யக்ஷ ஸ்ரீ:' என்றால் 'குபேர
சம்பத்து' என்று அர்த்தம். எனவே அடுத்த நொடியில் செல்வவளம் உதயனை நாடி வரலாயின. உதயன் பெரும் செல்வந்தனாகி சகல சம்பத்துக்களுடன் வாழலானான்.
- இன்னும் வருவாள்
முனைவர் ஜெகநாத சுவாமி

