ADDED : ஜூன் 20, 2016 11:05 AM

இதை அடுத்த பாடல்களை அபிராமி பட்டர் பாடி விளக்கமளித்தார்.
“ததியுறுமத்திற் சுழலும் என் ஆவி, தளர்விலதோர்
கதியுறுவண்ணம் கருதுகண்டாய் கமலாலயனும்
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி என்று
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே!
'பிரம்மாவும், சிவபெருமானும், திருமாலும் என்றும் வணங்கித் தொழும் சிறந்த திருவடிகளை உடையவளும், சிந்தூரவண்ணம் பொருந்தியவளும், மூவுலகிலும் பேரழகு படைத்தவளுமான திரிபுர சுந்தரியே! தயிர் கடையும் மத்தில் சிக்கிக்கொண்டது போல என் உயிர், பிறவி, மரணம் என்னும் சூழலில் சிக்கி உழல்கின்றது. எனக்கு ஒருநாளும் துன்பம் இல்லா, வீடுபேற்றினை அருள்வாயாக!' என்பதே இப்பாடலின் பொருள்.
அன்னை ஆதிபராசக்தியே படைத்தல், காத்தல் ஆகிய தொழில்களைச் செய்யும் பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும், அழித்தலைச் செய்யும் ருத்திரனையும் படைத்தவள். எனவேதான் மும்மூர்த்திகளும் அன்னையை வணங்கும் வைபவம் நாள்தோறும் ஸ்ரீபுரத்தில் நிகழ்கிறது. ஒருமுறை தேவியைத் துதிக்க முன்னதாகவே பிரம்மாவும், விஷ்ணுவும் வந்துவிட்டனர். அவர்கள் வந்தவுடன் தம் கிரீடங்களைக் கழற்றி அருகில் வைத்துக்கொண்டு தங்கள் சிரசினை அன்னையின் திருவடிகளில் பதித்தனர். அப்போது பரமசிவன் ஸ்ரீபுரவாசலில் வந்துகொண்டிருந்தார். சிவனைக் கண்டதும் அவரை வரவேற்க அன்னை எழுந்து பரபரப்புடன் சென்றாள். என்னே அற்புதமான காட்சி! அவள் வேகமாக எழுந்து நடக்கும்போது உடன் இருக்கும் யோகினி சக்திகள், 'தேவி! பிரம்மாவின் கிரீடம் காலில் பட்டுவிடப் போகிறது. விலகி வாருங்கள். கைடபாசுரனைக் கொன்ற விஷ்ணுவின் பெரிய கிரீடத்தில் இடறிக்கொள்ளப் போகிறீர்கள்.' என்று எச்சரித்தார்களாம். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த திருவடிகளை உடையவள் தேவி.
எல்லாரும் பாலின் கதையைக் கேளுங்கள். பசு தன் மடியில் கன்றுக்காக பால் சுரக்கிறது. மனிதர்களாகிய நாம் அதனைக் கறந்து விடுகிறோம். பாலானது நடப்பது என்னவென்றே புரியாமல் மலையுச்சியில் இருந்து வீழும் அருவியாய் கறப்பவனின் பாத்திரத்தில் வந்து விழுகிறது. உடனே அது புலம்புமாம், 'ஐயகோ! கன்றுக்கென்றே பிறந்த என்னை இப்படி பாத்திரத்தில் அடைத்து விட்டார்களே!' என்று. சிறிது நேரத்தில் அடுத்த சோதனை தொடங்குகிறது. பாத்திரம் அடுப்பில் ஏற்றி பால் காய்ச்சப்படும்போது அந்த உஷ்ணத்தில், 'குய்யோ முறையோ' என்று அலறி பாத்திரத்தில் பொங்கி வெளிப்பாய எத்தனிக்குமாம், 'அப்பாடா! ஒருவழியாய் நம் சோதனைகள் தீர்ந்தது. இனி நிம்மதியாய் வாழலாம்' என்று. ஆனால், அத்தோடுவிட்டு விடுவார்களா மனிதர்கள்? பாதிப் பாலைக் குடித்துத் தீர்த்து விட்டு மீதிப் பாலில் புளிப்பான தயிரைக் கலந்ததும் பாலின் முகம் அஷ்ட கோணலானதை என்ன சொல்ல? சேருவார் சகவாசம் என்பார்களே அதுபோல துளி தயிரின் சேர்க்கையால் மொத்தப் பாலும் திரிந்து தயிரானது. ஏதோ சரி! நல்லதோ, கெட்டதோ, புளிப்போ, இனிப்போ நாம் இப்போது முதிர்ச்சி அடைந்துவிட்டோம். இனியாவது நிம்மதியாக இருப்போம்! என்று எண்ணிப் பெருமூச்சு விட்ட தயிருக்கு வந்தது இன்னொரு பெருஞ்சோதனை. பெரிய மத்து ஒன்று உள்ளே பாய்ந்து இடவலமாகச் சுழன்று, சுழன்று அதனைக் கடைய ஆரம்பித்தது. 'என்ன கொடுமை இது? இதற்கோர் முடிவே இல்லையா?' என்று கதறிய வண்ணம் சுழன்ற தயிர் சிறிது நேரத்தில் வெண்ணெயாகத் திரண்டு விட்டது.
வெண்ணெயை உருட்டி குளிர்ந்த நீரில் மிதக்க விட்டனர். 'இதுதான் இறைவன் அருள்! எப்படியோ பல சோதனைகளைத் தாண்டி நான் வெண்ணெயாகி விட்டேன். இனியாவது நிம்மதியாய் வாழ்ந்தால் போதும்!' என்று நினைத்துக்கொண்டிருந்த அப்பாவி வெண்ணெய் மீண்டும், இரும்புச் சட்டியில் போட்டு சூடாக்கப்பட்டது. அதை உருக்கி நெய் ஆக்குகிறார்களாம். 'என் வாழ்வில் துன்பத்திற்கு அளவே இல்லையா?' என்று அழுது அழுதே நெய்யாய் உருமாறியது. அதுதான் தன் முடிவென்று நினைத்த நெய்க்கு அடுத்து நிகழ்ந்த நிகழ்வு பேரதிர்ச்சியை தந்தது.
ஒரு மரக்கரண்டியில் முகரப்பட்டு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த வேள்வித் தீயில் சென்று வீழ்ந்தது. 'ஸ்வாஹா' எனும் ஒலி மட்டும் கடைசியாக அதன் காதில் ஒலித்தது. ஆனால் என்ன அதிசயம்? மறுகணம் தேவியின் திருவடிகளை அல்லவா சென்று சேர்ந்து விட்டது. எனவே ததியுறு மத்திற் சுழலும் ஆவிபோல் நாம் துன்புற்றாலும், அன்னையின் சேவடியைத் துதித்தால் அடைய மாட்டாத பேறுகள்தான் என்ன?” என்று கூறிய அபிராமி பட்டர் முகம் மலர்ந்து சிரித்து விட்டு அடுத்த பாடலைத் தொடர்ந்தார்.
“சுந்தரி, எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி, சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே!
அபிராமியே, லலிதா மஹாதிரிபுர சுந்தரியாக விளங்குகிறாள். இந்திரனின் யாகத்தில் தோன்றிய பேரழகு வடிவம் கொண்டவள். எனவேதான் சுந்தரி
எனப்படுகிறாள். அம்பிகை கன்னிகையாக இருக்கும்வரை பாண்டாசுரனை வதம்செய்ய முடியாது என்பதால் தேவர்கள் யாவரும் ஒன்றாக சென்று சிவபெருமானிடம் அம்பிகையை மணம்புரிந்து அருளும்படி வேண்ட, அவரும் சுந்தரியாகிய பேரழகு மிக்க அம்பிகைக்கு இணையாக ஸ்ரீகாமேஸ்வரர் என்னும் வடிவம் எடுத்து அம்பிகையை மணம் புரிந்தார்.
எனவே அவள் என் தந்தையாகிய சிவபெருமானின் துணைவி. அவளே சங்கிலித் தொடர் போல் காலம் காலமாக பிறப்பு, இறப்பு எனும் சூழலில் தவிக்கவைக்கும் என் பாசத்தொடரை வந்து அழிப்பவள். குங்குமம் போன்ற செம்மைநிறம் பொருந்தியத் திருமேனி உடையவள். மகிஷாசுரன் தலைமேல் நின்று தீமையை அழித்து தர்மத்தை காக்கும் துர்க்கை. நீலமேனி கொண்டவள். பிரம்மனால் விதிக்கப்பட்ட பிறவிக்கட்டை அழிக்கும் அபயஹஸ்தம் கொண்டவள்.
அபிராம பட்டர் உரை கூறி முடித்ததும், மன்னர் அவரிடம், “சுவாமி! இப்பாடலில் தாங்கள் அன்னையை 'நீலி' என்றழைத்தது மட்டுமன்றி 'நீலநிற மேனியள்' என்று விளக்கமும் தந்துள்ளீர்கள். அவள் கருமை நிறமுள்ளவள் அல்லவா! நீல நிறம் தோன்றியது எவ்வாறு?” என்று பணிவுடன் வினவினார்.
புன்னகைத்த பட்டர் கூறினார்.
“மன்னா! தங்கள் சந்தேகம் நியாயமானதே. அம்பிகையை நீலியாக வழிபடும் தாத்பர்ய மிகப் பழமையானதும், அதீதமான சக்தி மிக்கதும் ஆகும். மேலும் விளக்கமாகக் கூறுகிறேன்,” கேளுங்கள்,” என்றவர் தொடர்ந்தார்.
- இன்னும் வருவாள்
முனைவர் ஜெகநாத சுவாமி

