sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஆண்டாளும் அற்புதங்களும் - 30

/

ஆண்டாளும் அற்புதங்களும் - 30

ஆண்டாளும் அற்புதங்களும் - 30

ஆண்டாளும் அற்புதங்களும் - 30


ADDED : ஜூன் 23, 2023 11:42 AM

Google News

ADDED : ஜூன் 23, 2023 11:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துாரின் சிறப்புகள்

கோதை பிறந்த ஊர், நம் கோவிந்தன் வாழும் ஊர் என எல்லோராலும் போற்றப்படும் ஊர் ஸ்ரீவில்லிபுத்துார். பெரியாழ்வார், பெரிய கோயில் பெரிய குளம், பெரிய பெருமாள் பெரிய கோபுரம், பெரிய விமானம் என பல சிறப்புகள் கொண்டது இந்த ஊர். இங்குள்ள மாரியம்மன் கோயில் கூட பெரிய மாரியம்மன் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

திருப்பதி என்றதும் பெருமாளும் லட்டும் நினைவுக்கு வருவது போல ஸ்ரீவில்லிபுத்துார் என்றதும் ஆண்டாளுடன் பால்கோவாவும் நினைவுக்கு வரும். வாணலியில் பாலும் சர்க்கரையும் இணைந்து சரியான பதம் வரும் வரை சுண்டக் காய்ச்சி நொடி கூட இடைவெளியின்றி பால்கோவா கிளறி இறக்கப்படும். இதன் சுவைக்காக 2019ம் ஆண்டில் புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. தான் பிறந்த இந்த ஊரை ஆயர் பாடியாகவும் தன்னை கோபிகையாகவும் எண்ணி ஆண்டாள் பாடியதால் தான் இங்கு பால்வளம் நிறைந்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

196 அடி உயரம் கொண்ட ஆண்டாள் கோயிலின் கோபுரம் 11 நிலைகள்.

11 கலசங்கள் கொண்டது. சுதை சிற்பம் எதுவும் இதில் கிடையாது. தமிழக அரசின் சின்னமாகத் திகழ்கிறது. பாண்டியர்களின் சின்னமான மீன் நுழைவு வாயிலின் மேல் துாணில் பொறிக்கப்பட்டுள்ளது. திருமலை நாயக்கர், ராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில் இந்த நகரம் பிரசித்தி பெற்றதாக இருந்தது. திருமலை நாயக்க மன்னர் ஆண்டாள் கோயிலில் பூஜை முடிந்த பிறகே சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்தார். அதற்காக ஆண்டாள் கோயில் மீதுள்ள மாமணி ஒலித்த பிறகே சாப்பிடுவார். மன்னரின் அரண்மனை இருந்த இடமான மதுரையில் எப்படி கேட்பது என யோசித்த நிலையில் மணியோசை எவ்வளவு அடி துாரம் கேட்குமோ அந்த துாரத்தில் மணியுடன் சிப்பாயை நிறுத்தினர். இப்படி வழியெங்கும் சிப்பாய்களை நிறுத்தி கோயிலில் மணி ஒலித்ததும் அதைக் கேட்டு முதல் சிப்பாய் மணியடிப்பார். அடுத்த சிப்பாய் அதை கேட்டு அதே போல மணியடிப்பார். இப்படி தொடர் மணியோசை ஏற்படுத்தி திருமலை நாயக்கருக்கு ஆண்டாள் கோயிலின் பூஜை நிறைவேறியதை அறிய வைத்திருக் கின்றனர்.

தொழில்நுட்ப வசதி இல்லாத அந்த காலத்தில் செய்திகளை உடனுக்குடன் அறிய பலவகையான யுக்திகளை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

திருமலை நாயக்கர் மட்டுமல்ல தமிழக மன்னர்களில் பலர் இந்த யுக்தியை மேற்கொண்டுள்ளனர். காளையார் கோவிலில் இருந்த மருதுபாண்டியர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பூஜையின் போது ஒலிக்கப்படும் மணியை இது போல தொடர் மணியோசை மூலம் கேட்டு, காலை உணவு உண்டனர் என்றும் திருச்செந்துார் கோயில் பூஜையில் ஒலிக்கப்படும் மணியை வீரபாண்டிய கட்டபொம்மன் இதன்படி கேட்டபின்பே உண்டதாக குறிப்புகள் உள்ளன. ராணி மங்கம்மாளும் ஆண்டாள் கோயிலில் காலை பூஜை முடிந்ததை காண்டாமணி மூலமாக அறிந்து உணவு உட்கொண்டிருக்கிறார். வாழ்நாள் முழுவதும் இதை அவர் பின்பற்றினார். மன்னர்களின் பக்தி ஈடுபாடு நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

பொதுவாக கோவில் ஒரு இடத்தில் இருக்கும். அது தொடர்புடைய வரலாறு ஒரு இழையாகத் தான் அங்கே பின்னப்பட்டிருக்கும். ஆனால் ஆண்டாள் கோயில் அப்படி அல்ல. ஆண்டாளின் அன்றாட வாழ்வுடன் தொடர்பு கொண்டது. அவளது பிறப்பு வளர்ப்பு எல்லாமே இக்கோயிலுடன் பின்னி பிணைந்துள்ளது. அவள் வாழ்ந்த அந்த இடத்தில் நாமும் உலவுகிறோம் என்ற உயிர்ப்பை நம்மால் உணர முடியும். பெரியாழ்வாரால் கோயிலுக்குள் உள்ள தோட்டத்தில் துளசிச் செடியின் அடியில் கண்டெடுக்கப்பட்டவள் தானே அவள்! இக்கோயிலில் இரண்டு பிரிவுகள் உள்ளன. தென்மேற்கில் ஆண்டாள் கோயில், வடகிழக்கில் உள்ள வடபத்ரசாயி கோயில் என இரு பிரிவுகள் உள்ளன. கோயிலைச் சுற்றியுள்ள கருங்கல் சுவர் அனைத்து சன்னதிகள், ஆண்டாள் பிறந்த தோட்டம், கோயிலின் நீர்நிலைகளில் இரண்டையும் சூழ்ந்துள்ளது.

ஆண்டாள் பிறந்த நந்தவனம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. குழந்தை இல்லாதவர்கள் நந்தவன மண்ணை எடுத்துக் கொண்டு வீட்டில் வழிபட குழந்தைப்பேறு உண்டாகும்.

இந்த கோயிலின் வடகிழக்கு மூலையில் துாணுக்கு கீழே விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். கம்பத்து விநாயகரான இவரை வழிபட்ட பிறகு தான் பெரிய கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. தரைக்கு சற்றே மேலே இருக்கும் இந்த விநாயகரை குனிந்து தான் வழிபட வேண்டும். இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் கருவறை மீதுள்ள விமானம். 33 அடி உயரமுள்ள இந்த தங்க விமானம் தங்கத்தால் வேயப்பட்டது. இதைச் சுற்றிலும் திருப்பாவையின் 30 பாசுரங்கள் பற்றிய விளக்கம் 'ப' வடிவில் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'பாவை கோபுரம்' என்று பெயர். பாதுகாப்பு கருதி பக்தர்கள் பார்க்க அனுமதி கிடையாது. ஆனால் இங்கிருந்து பாவை கோபுரத்தை பார்க்கலாம்.

ஆண்டாள் சன்னதியில் உற்ஸவர்கள் எழுந்தருளியிருக்கும் மண்டபத்தை 'முத்துப்பந்தல்' என்கிறார்கள். இதில் வாழைமரம், மாவிலை, பூச்செண்டுகளின் தோரணங்களை பார்க்கலாம். மேலே பெருமாளின் பாதம் இருக்கிறது. இங்கே இருக்கக் கூடிய பெருமாள் எப்படி இருக்கிறார் தெரியுமா? இன்றைய திருமணங்களில் மாப்பிள்ளை அழைப்பின்போது

பேண்ட், சட்டை அணிந்து ஆண்கள் வருவது போல இங்கு உற்ஸவர் பெருமாள் பேண்ட் சட்டை அணிந்து காட்சி தருகிறார். ஏகாதசி அமாவாசை, தமிழ்வருடப்பிறப்பு போன்ற விழாக்காலத்தில் மட்டும் வேட்டி அணிகிறார்.

ஆண்டாள், ரெங்கமன்னாரை நினைத்து தினமும் மாலையை சூடிக்கொள்வார் இல்லையா, தான் சூடிய மாலை எப்படியிருக்கிறது என பார்க்க இங்கிருந்த கிணற்று நீரை பயன்படுத்தியுள்ளார். அக்கிணறு இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. கருவறையின் முன்புறம் இக்கிணறு உள்ளது. இதைக் 'கண்ணாடிக் கிணறு' என்கின்றனர்.

கோயிலின் சுற்றுப்புற பிரகாரத்தில் உள்ளே 108 திவ்ய தேசங்கள் ஓவியங்களாக வைக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே கருவறைக்கு அருகிலுள்ள மாதவி பந்தலில் கோதை தோழிகளை எழுப்பும் சிற்பங்களாக கண்டு மகிழலாம். விஜயநகர, நாயக்க மன்னர்கள் சன்னதியின் சுவர்களில் ஓவியம் வரைந்துள்ளனர். அவற்றில் சில ஓவியங்கள் இன்னும் உள்ளன.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, கிருஷ்ணாபுரம் வெங்கடாஜலபதி கோயில், அழகர்கோவில். வேலுார் ஜலகண்டேஸ்வரர் கோயில் போன்றவற்றில் உள்ளதை போன்ற சில அரிய விஜயநகர சிற்பங்கள் இந்த கோயிலிலும் உள்ளன. வாள், கொம்பு வைத்திருக்கும் வீரபத்திரரின் கூட்டு நெடு வரிசைகள் பழமை வாய்ந்தவை.

இன்னும் பல சிறப்புகள் கொண்டது இக்கோயில். அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம். அதுவரை ஆண்டாளின் கைப்பற்றி தொடர்ந்து பயணிப்போம்... வாருங்கள்.

-தொடரும்

பவித்ரா நந்தகுமார்

82204 78043

arninpavi@gmail.com






      Dinamalar
      Follow us