ADDED : ஜூன் 23, 2023 11:43 AM

சிவசக்தியாகிய பரம்பொருளை யார் மனதார நினைக்கிறார் களோ அவர்களுக்கு தோன்றாத் துணையாக இருந்து அருள் செய்வார். பெரும்பாலும் சிவபெருமான் கோயில்களில் உள்ள அம்பாள் சன்னதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏன் தெரியுமா.. பக்தர்களாகிய பிள்ளை களுக்கு எது தேவை என்பதை குறிப்பறிந்து அவளின் சன்னதிக்கு அவர்கள் செல்லும் முன்பே தரக்கூடியவள். உலக அன்னையாகிய அவளின் அற்புதங்கள் ஒன்றா இரண்டா. எண்ணிக்கையில் அடங்காது. பரமபக்தன் ஒருவனை இக்கட்டான சூழலில் இருந்து எப்படி காப்பாற்றினாள் என்பதை தெரிந்து கொள்வோம்.
தமிழக பஞ்ச பூத தலங்களில் காற்றுக்குரிய கோயிலாக திகழ்வது திருக்காளத்தி. இங்கு சுவாமியின் திருநாமம் காளத்தீஸ்வரர், அம்பாளின் திருநாமம் ஞானப்பூங்கோதை. நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்பரின் பக்தியை இவ்வுலகிற்கு வெளிக்காட்டிய தலம் இது. இக்காளத்திமலை அருகே இருக்கும் ஒரு சிறிய நகரத்தில் நல்லாட்சி செய்து வந்த மன்னன் அம்பாளின் பரமபக்தன். இவன் நாள்தோறும் சுவாமி அம்பாளை தரிசனம் செய்த பிறகே தான் அன்றாட பணிகளை தொடங்குவான். இவனது ஆட்சியை பார்த்த பக்கத்து நாட்டினர் பொறாமை கொண்டனர். ஒரு நாள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பொறாமை கொண்ட அனைவரும் இவனது நகரத்தை முற்றுகையிட்டனர். 'தேவையில்லாமல் வீண் சண்டைக்கு வந்திருக்கும் இவர்களிடம் இருந்து என்நாட்டையும் மக்களையும் காத்துக் கொள்ள என்னிடம் இருக்கும் வீரர்களை கொண்டு போருக்கு செல்கிறேன்.
தாயே நீயே துணை' என வேண்டி கொண்டு போரிட சென்றான். போர்களத்தில் எதிரியின் ஆயுதங்களால் இவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வில்லை. போரில் இவனது படைகள் எய்த அம்பு மட்டுமே எதிரிகளை தாக்கியது. போரில் வெற்றி பெற்ற மன்னன் அன்னை ஞானப்பூங்கோதையை தரிசிக்க வந்தான். அப்போது அவள் அணிந்திருந்த சேலை துளையிடப்பட்டு கந்தல் கந்தலாக தெரிந்தது.
அதை கண்டு அதிர்ச்சியானான் மன்னன். அப்போது சன்னதியில் இருந்து அசரீரியாக 'சேலையால் மறைத்து எதிர் படையிடம் இருந்து காத்தோம். நீங்கள் விட்ட அம்பு மட்டுமே சேலையை துளைத்து அவர்களை தாக்கியது' என சொன்னது.
தாயின் கருணையை நினைத்து நெகிழ்ந்த மன்னன் அதற்கு ஈடாக தங்கச்சேலை செய்து சாற்றினான்.
இன்றும் ஒவ்வொரு வெள்ளிதோறும் அம்பாளுக்கு தங்கச்சேலை சாற்றும் வழக்கம் உள்ளது.
கானப்பூங்குழல் போற்றி கருணை விழி போற்றி
தானப்பூங் களபமுலை தாங்கி நடங்கிடை போற்றி
வானப்பூந்தருமகவான் வணங்கு திருக்காளத்தி
ஞானப்பூங் கோதையுமை நற்கமல பதம் போற்றி