தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தங்க மழை

தங்க மழை

தங்க மழை


ADDED : ஜூலை 26, 2024 11:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2024 11:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வரதந்து மகரிஷியிடம் கவுத்சன் என்ற சீடன் பாடம் கற்க வந்தான். ஆண்டுகள் உருண்டோடின. சிறுவனாக வந்த கவுத்சன் இளைஞனாக வளர்ந்தான். குருவுக்குத் தெரிந்த அனைத்தும் கற்று முடித்தான். சீடனை சோதிக்க பரிட்சை நடத்தினார். அதிலும் வெற்றி பெற்றான்.

வீட்டுக்குப் புறப்பட்ட போது, ''குருதேவா! தட்சணை தர விரும்புகிறேன். தங்களின் விருப்பத்தை சொல்லுங்கள்''என்றான்.

''இத்தனை காலமும் பணிவுடன் நீ கற்ற விதமே மன நிறைவைத் தந்தது'' என்றார் வரதந்து.

ஆனால், கவுத்சன் விடுவதாக இல்லை.

''தங்களுக்கு தட்சணை அளித்தால் தான் மகிழ்வேன்''என்றான்.

''சரி... கவுத்சா... இதுவரை என்னிடம் பதினான்காயிரம் வித்தைகளைக் கற்றுக் கொண்டாய். வித்தைக்கு ஒன்று வீதம் பதினான்காயிரம் பொற்காசுகள் கொடு''என்றார் வரதந்து.

கவுத்சன் கலங்கவில்லை.

''நிச்சயம் தட்சணையுடன் வருகிறேன்''என்று சொல்லிப் புறப்பட்டான்.

அயோத்தி மன்னரான ரகுவின் வள்ளல் தன்மை பற்றி கவுத்சன் கேள்விப்பட்டிருந்தான். அவரிடம் தானம் பெறலாம் என அயோத்திக்குச் சென்றான்.

அந்தணரான கவுத்சனை கண்ட மன்னர் ரகு மகிழ்ந்தார். அரண்மனையில் விருந்துணவு சாப்பிட்ட கவுத்சன், '' தங்களின் உபசரிப்புக்கு நன்றி'' என்று சொல்லி புறப்படத் தயாரானான்.

''விருந்தினராக வந்த தாங்கள், தானம் பெறாமல் செல்லலாமா?''என்றார் ரகு.

''பொருள் பெறும் நோக்கத்துடன் வந்தேன். ஆனால் வந்த பிறகு தான் தாங்கள் பொன், பொருள் அனைத்தையும் தானம் செய்து விட்டதை அறிந்தேன். என்னுடைய தேவையோ பதினான்காயிரம் பொற்காசுகள். அதைக் கேட்டு தங்களை சிரமப்படுத்த விரும்பவில்லை'' என்றான் கவுத்சன்.

''உங்கள் விருப்பத்தை நிச்சயம் நிறைவேற்றுவேன். அதுவரை இங்கேயே தங்கியிருங்கள்'' என்றார் ரகு.

செல்வத்திற்கு அதிபதியான குபேரன் மீது போர் தொடுத்து, செல்வத்தை பெறலாம் என ரகு திட்டமிட்ட போது அமைச்சர் ஓடி வந்து, ''மன்னா... நம் பொக்கிஷ அறையில் குபேரன் தங்கமழை பொழிந்து கொண்டிருக்கிறான்''என்றார்.

''அப்படியா... மகிழ்ச்சி'' என்றார் ரகு. உடனே கவுத்சனை அழைத்து, ''குபேரன் தானாகவே வந்து தங்கமழை கொட்டிக் கொண்டிருக்கிறான். தாங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்றார்.

'' குருதட்சணையாக நான் தர வேண்டிய பதினான்காயிரம் பொன் மட்டும் போதும். அதற்கு மேல் வேண்டாம்'' என்றான்.

''அப்படியானால் மீதிப் பொன்னை என்னிடம் தானம் பெற வருவோருக்கு கொடுப்பேன்'' என்றார் ரகு. அள்ளித் தரும் வள்ளல் ரகுவின் சிவந்த கைகளைப் பிடித்து நெகிழ்ந்தான் கவுத்சன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us