
சோம்பேறி இளைஞன் ஒருவன் ஊர் சுற்றித் திரிந்தான். ஒருநாள் ஊரிலுள்ள கிருஷ்ணர் கோயிலில் பக்தர்கள் பஜனை பாடுவதைக் கேட்டான். அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம், “கிருஷ்ணா! கிருஷ்ணா!”என கூச்சல் போடுகிறீர்களே! அதனால் பசியால் வாடும் எனக்கு ஒரு வேளை சோறு கிடைக்குமா?” எனக் கத்தினான்.
பெரியவர் அவனிடம், “சோறு மட்டுமல்ல, நினைத்தது எல்லாம் நடக்கும்” என்றார்.
அந்தப் பெரியவர் சொல்கிறாரே என அரைமனதுடன் கிருஷ்ண நாமத்தை சொல்ல முடிவெடுத்தான். ஊருக்கு அடுத்த காட்டுக்குள் சென்று கண்மூடி அமர்ந்தான். 'கிருஷ்ணா' என்பதைத் தவிர வேறு சிந்தனை அவனுக்கு இல்லை. திடீரென யாரோ வருவது போல சப்தம் கேட்கவே மரத்தின் மீதேறி ஒளிந்தான் இளைஞன். கட்டுச்சோற்றுடன் வந்த ஒரு வழிப்போக்கன் ஒருவன் அந்த மரத்தின் கீழ் அமர்ந்து உணவை உண்டான். இளைஞனோ கண்ணை மூடியபடி கிருஷ்ண நாமம் ஜபித்துக் கொண்டிருந்தான். கண் விழித்த போது ஆச்சரியம் காத்திருந்தது. ஒரு கட்டுச்சோறு பொட்டலத்தை விட்டுச் சென்றிருந்தான் வழிப்போக்கன். கிருஷ்ணர் அருளால் தான் சோறு கிடைத்தது எனக் கருதி இறங்கினான். ஆனால் வந்த வேகத்தில் நின்றான்.
எவனோ...வழிப்போக்கன் விட்டுப் போன சோற்றைச் சாப்பிடுவதா என யோசித்தான்.
கிருஷ்ணருக்கு கருணை இருந்தால் இந்த சோற்றை சாப்பிடும் சூழ்நிலை உண்டாகட்டும் என எண்ணினான்.
மீண்டும் மரத்தின் மீதேறி அமர்ந்தான். மாலை நேரம் வந்தது. காட்டில் சில திருடர்கள் வந்தனர். மரத்தடியில் அமர்ந்து திருடிய பணத்தை பங்கிடத் தொடங்கினர். திருடர்களில் ஒருவன் இளைஞனைக் கண்டதும், தங்களை வேவு பார்க்க வந்த ஒற்றன் எனக் கருதி இளைஞனை மரத்தில் கட்டி வைத்தான்.
அதற்குள் மற்றொரு திருடன் பசியாக இருந்ததால் அங்கிருந்த உணவு பொட்டலத்தை எடுத்து பிரித்தான். “இதைச் சாப்பிடாதே. நம்மைக் கொல்லும் நோக்கத்தில் விஷம் கலந்து இவன்தான் வைத்திருப்பான். அதனால் இவனுக்கே கொடு” என்றான் மற்றொருவன். இளைஞனும் உணவை மறுக்காமல் சாப்பிட்டான்.
இளைஞனுக்கு பிரச்னை ஏதும் ஆகாததைக் கண்ட திருடர்கள், 'உணவில் விஷம் இல்லை' என்பதை உணர்ந்தனர். அவனுக்கு அன்பளிப்பாக கொஞ்சம் பணத்தை கொடுத்து விட்டு புறப்பட்டனர். ''நம்பிக்கை இல்லாமல் சொன்னதற்கே நன்மை கிடைத்ததே' என எண்ணிய இளைஞன் மேலான செல்வம் கிருஷ்ண நாமமே என்ற முடிவுக்கு வந்தான்.
பஜனை மடத்தில் உள்ள பெரியவரிடம் பணத்தை ஒப்படைத்தான். இனி உழைத்து வாழ்வேன் என கிருஷ்ணரின் முன் சபதம் செய்தான்.