
எந்த நேரமும் ஆட்டம், பாட்டம், பஜனை என்று வாழ்ந்த உத்தமர் அக்ராஜி. அவருடைய பக்திக்கு கட்டுப்பட்டு கிருஷ்ணரே நேரில் தினமும் காட்சியளித்து வந்தார்.
நாபாஜி என்ற அனாதை சிறுவனுக்கு அக்ராஜி அடைக்கலம் தந்தார். அவனும் மடத்தில் நடக்கும் பஜனையில் பங்கேற்று பக்தனாக விளங்கினான்.
ஒருநாள்... அக்ராஜி பூஜை முடிந்ததும் தியானத்தில் அமர்ந்தார்.
வழக்கமாக தரிசனம் தரும் கிருஷ்ணர் நீண்ட நேரமாகியும் வரவில்லை.
அக்ராஜியின் மனதில் கவலை... “என் பக்தியில் ஏதும் குறை வந்து விட்டதா கிருஷ்ணா? ஏதேனும் தவறு செய்து விட்டேனோ?' என கலங்கினார்.
அருகில் இருந்த நாபாஜி, “குருதேவா! உங்கள் பக்தியில் குறை இல்லை. வியாபாரி ஒருவரின் கப்பல் கடலில் மூழ்கும் நிலையில் உள்ளது. அந்த வியாபாரி உங்கள் மீதும், கிருஷ்ண பக்தியின் மீதும் அபிமானம் கொண்டவர். ஆபத்து நீங்கினால் தன் சொத்தில் கால் பங்கை நம் மடத்திற்கு அளிப்பதாக பகவானிடம் வேண்டிக் கொண்டுள்ளார். அவரைக் காப்பாற்றவே கிருஷ்ணர் சென்றிருக்கிறார். அதனால் தான் இன்று தரிசனம் தரவில்லை” என்றார். சற்று நேரத்தில் தரிசனம் அளித்த கிருஷ்ணரும் தாமதத்திற்கான காரணமாக அதே விஷயத்தைச் சொன்னார். அக்ராஜி வியப்புடன், 'குருவான என்னையும் பக்தியில் மிஞ்சி விட்டாயே' என பாராட்டினார்.
“உங்களுக்கு அடியேன் செய்த பணிவிடைகளாலும், தாங்கள் அளித்த ஆசியாலும் தான் கிருஷ்ணரின் அருள் கிடைத்தது,” என பணிவுடன் பதில் அளித்தார்.
அக்ராஜியின் உத்தரவுப்படி பாண்டு ரங்கனின் புகழ்பாடும் 'பக்த விஜயக் கதைகள்'
என்னும் நுாலை நாபாஜி எழுதினார். அந்த நுால் உருவாகக் காரணம்... துாய்மையான பக்தி, கருணை, குருபக்தி, குருசேவை ஆகியவையே. நாபாஜி போல நாமும் கிருஷ்ணர் மீது பக்தி செலுத்துவோம்.