
அன்பர் ஒருவர் பேருந்துக்கு அடியில் சிக்கி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். தனக்கு ஏன் இப்படி நடந்தது என காஞ்சி மஹாபெரியவரிடம் கேட்க விரும்பினார். ஆனால் அவரோ சுவாமிகளை இதுவரை தரிசித்ததே இல்லை.
அவரது மனைவியின் உறவினரான மூர்த்தி அடிக்கடி காஞ்சி மடத்திற்கு செல்வார். அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி காஞ்சி மஹாபெரியவரிடம் கீழ்க்கண்ட தகவல்களை கேட்குமாறு வேண்டினார்.
* விபத்து நிகழ்ந்தது ஏன்?
* பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?
ஒரு வாரத்திற்குள் கேட்டு சொல்வதாக கடிதம் அனுப்பினார் மூர்த்தி. பின்னர் காஞ்சிபுரத்திற்கு மூர்த்தி செல்லும் போது அன்பர் எழுதிய கடிதத்தை கொண்டு செல்ல மறந்தார்.
மஹாபெரியவரை தரிசித்த பின்னரே கடிதம் பற்றி ஞாபகம் வந்தது.
மஹாபெரியவர் குழப்பத்துடன் நின்ற மூர்த்தியை உட்காருமாறு ஜாடை காட்டி விட்டு, 'உன் உறவினரின் குடும்பத்தில் அசம்பாவிதம் நடந்திருக்கே... அதை பத்தி நீ சொல்லலையே?' என கேட்டாரே பார்க்கணும்! மூர்த்திக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
அத்துடன் கடிதத்தில் என்ன கேள்வி கேட்டாரோ அதற்கான பதிலையும் சொன்னார்.
'முற்பிறவியில் செய்த கர்மத்தின் பலனால் விபத்து நேர்ந்தது. பத்திரமாக உயிருடன் திரும்பியதே நல்ல பரிகாரம்தான்... தினமும் மதுரை மீனாட்சி அம்மனை பிரார்த்தனை செய்தால் நல்லதே நடக்கும்' என்றார்.
எப்பேர்ப்பட்ட கருணை தெய்வம் காஞ்சி மகான் என எண்ணிய மூர்த்திக்கு உடம்பு சிலிர்த்தது. அந்த பதில்களை அன்பரிடம் சொன்ன போது 'சர்வேஸ்வரா...' என வாய் விட்டு அழுதார்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* ஏகாதசி விரதம் இருந்தால் பாவம் தீரும்.
* குழந்தைப்பேறுக்கு வியாழன் அன்று விரதம் இரு.
* நினைத்தது நிறைவேற 'ஸ்ரீராமஜெயம்' எழுதுங்கள்.
* மனவலிமைக்கு பவுர்ணமி அன்று கிரிவலம் செல்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
--நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப்
போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com

