
இமயமலைச்சாரலில் ஆகுகன், ஆகுகி என்னும் வேடுவத் தம்பதி வசித்தனர். வேடனாக இருந்தாலும் ஆகுகன் கருணை கொண்டவனாக இருந்தான். சிறு குட்டிகள், முதிய விலங்குகளைக் கொல்ல மாட்டான். மக்களைத் துன்புறுத்தும் விலங்குகளே அவனது ஒரே இலக்கு.
அவனுடைய குடிலுக்கு ஒருநாள் இரவு சிவபக்தரான முனிவர் ஒருவர் பசியுடன் வந்தார். தேனும், தினைமாவும் தந்து உபசரித்தான் ஆகுகன். வயிறார சாப்பிட்ட முனிவர், இரவு மட்டும் குடிலில் தங்கிக் கொள்ளலாமா எனக் கேட்டார். இருவர் மட்டுமே தங்கும் சிறு குடிசையானாலும், ஆகுகன் மறுக்கவில்லை. தன் மனைவி, முனிவரை குடிலுக்குள் தங்கச் சொல்லி விட்டு, மிருகங்கள் நுழையாத படி கதவை சாத்தினான். குடிலுக்கு வெளியே வில்லுடன் காவல் காத்தான். வேடனின் செயல்பாடு கண்ட முனிவர் மனம் நெகிழ்ந்தார்.
'துறவியாக இருந்தாலும் மனைவியுடன் வேறொருவர் தங்குவதை யார் தான் உலகில் ஏற்பார்கள்? இந்த வேடன் தன் மனைவி மீது கொண்டிருக்கும் நம்பிக்கை அசாத்தியமானது' என எண்ணியபடி துாங்கி விட்டார் முனிவர். கணவரின் திருவடியை மனதில் நினைத்தபடி ஆகுகியும் துாங்கி விட்டாள். வேட்டைக்குச் சென்ற களைப்பு ஆகுகனை வருத்தியது. அவனை அறியாமல் கண்கள் சுழன்றன. துாங்கி விட்டான். பசியுடன் வந்த சிங்கம் ஒன்று ஆகுகன் மீது பாய்ந்து அவனைக் கொன்றது.
காலையில் கண் விழித்த ஆகுகி கணவர் பிணமாகக் கிடப்பதைக் கண்டாள். அவன் மீது விழுந்து உயிரை நீத்தாள். தன்னால் தானே இக்கொடுமை நேர்ந்தது என வருந்திய முனிவர், காய்ந்த சுள்ளிகளை பொறுக்கி சிதை அமைத்து, இருவர் உடல்களையும் எரித்தார். துக்கம் தாளாமல் தானும் சிதையில் விழுந்து உயிர் நீத்தார். ஆகுகனும், ஆகுகியும் செய்த சேவைக்காக மறுபிறவியில் நிடத நாட்டு மன்னராக நளனும், விதர்ப்ப நாட்டு இளவரசியாக தமயந்தியும் பிறந்தனர். தமயந்தியின் அழகில் மயங்கி, அவளை திருமணம் செய்ய விரும்பினான் நளன். முனிவரும் அன்னப் பறவையாக பிறந்து, நளன், தமயந்திக்கு இடையே காதல் துாது சென்று அவர்களை ஒன்று சேர்த்தார்.
நளனின் வரலாறை 'நளவெண்பா' என்னும் பெயரில் புகழேந்திப் புலவர் பாடியுள்ளார். என்ன தான் நல்லவனாக இருந்தாலும், உயிர்களைக் கொல்வது பாவம். அதற்கு தண்டனையாக ஏழரை ஆண்டு காலம் சனீஸ்வரரால் பாதிக்கப்பட்ட நளன் சிரமங்களை அனுபவித்தான். நாட்டை இழந்து உணவு, உடையின்றி அலைந்தான்.
மிருகங்களைக் கொன்று தின்ற பாவத்தால் ஆகுகியும் துன்பத்திற்கு ஆளானாள். நளன், தமயந்தி வரலாறை படித்தால் சனியால் ஏற்படும் துன்பம் விலகும்.

