
மனதில் இருந்து அகற்ற வேண்டிய குணம் ஆணவம். இது பற்றி காஞ்சி மஹாபெரியவர் சொல்வதை கேட்போமா...
'நான் இதை சாதித்தேன்; அதை சாதித்தேன்' என யாரும் ஆணவமாக சொல்வதில் நியாயமில்லை. யோசித்துப் பார்த்தால் உண்மை புரியும். ஒரு விஷயத்தை சாதிப்பதற்கான புத்தி, உடல் வலிமை எங்கிருந்து வந்தது?
இந்த உலகத்தை ஆட்சி செய்யும் பராசக்தியிடம் இருந்து தானே... அவ்வளவு ஏன்? அவளின் அருளால் தானே அனைவரும் சுவாசிக்கிறோம். யாருக்காவது கடைசி நேரத்தில் மூச்சை பிடித்து வைக்கும் சக்தி உண்டா? சுவாசம் நின்றால் எல்லாம் நொடியில் முடிந்து விடும்.
நன்றாக எழுதுகிறோம்; பாடுகிறோம்; ஆடுகிறோம்... இப்படி எத்தனையோ விஷயங்களில் ஈடுபடுகிறோம். பலர் பாராட்டும் போது நம்மையும் அறியாமல் தலைக்கனம் ஏறுகிறது. பராசக்தியின் அருளால் தான் சாதிக்க முடிகிறது என்ற உண்மையை பலர் உணர்வதில்லை.
'பிறர் நம்மை பாராட்டும் போது உண்மையில் சக்தி எப்படி வந்தது' என யோசியுங்கள். உங்களுக்கு கிடைக்கும் பெருமையை பராசக்தியின் திருவடியில் அர்ப்பணியுங்கள். அப்படி செய்யும் போது மனம் லேசாகும். இப்படி இருப்பதே ஆனந்தம்.
இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.
'ஆணவம் என்னிடம் இல்லை' என நினைப்பதும் ஒரு விதத்தில் ஆணவமே. அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. அதற்கும் அந்த பராசக்தியின் அருளை வேண்டுங்கள். அப்போது உங்கள் மீது அவள் அருள் பொழிவாள்'' என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.
நினைத்தது நடக்க...
யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய துார்ணம்
ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.
பக்தி இல்லாதவரால் அடைய முடியாதவனே. தாயின் கருவில் பிறந்தால், பக்தனை காக்க தாமதமாகும் என்பதால் துாணில் வந்தவனே. லட்சுமி நரசிம்மனே உன்னை சரணடைகிறேன்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com

