sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெய்வத் திருமணம் - 15

/

தெய்வத் திருமணம் - 15

தெய்வத் திருமணம் - 15

தெய்வத் திருமணம் - 15


ADDED : பிப் 19, 2026 01:42 PM

Google News

ADDED : பிப் 19, 2026 01:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டாள் - ஸ்ரீரங்கநாதர் திருமணம்

-ஸ்ரீவில்லிபுத்துாரில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்பவர் வாழ்ந்தார். தினமும் மலர்களைப் பறித்து, அதனை அழகிய மாலையாகத் தொடுத்து, வடபத்திரசாயிப் பெருமாளுக்கு சாத்தி வழிபட்டார். அன்று ஆடிப்பூர நாள் வழக்கம் போல், பூந்தோட்டத்தில் இருந்து வீட்டிற்குத் திரும்ப நினைத்தார்.

அப்போது அங்கு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அருகில் சென்று பார்த்தார். பெண் குழந்தை இருந்தது. அது அவரைப் பார்த்துச் சிரித்தது. அதைக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பிய அவர், அந்தக் குழந்தைக்கு, 'கோதை' என்று பெயரிட்டுத் தனது மகளாக வளர்த்தார். விஷ்ணுசித்தர் அந்தக் குழந்தைக்கு சிறுவயதிலிருந்தே கண்ணன் கதைகளை விளக்கிச் சென்னார்.

தந்தையைப் போன்றே திருமால் மேல் பக்தி கொண்டு வளர்ந்த அந்தக் குழந்தை, சமய சாஸ்திரம் மற்றும் ஞானத்துடன் கூடிய கல்வியையும் கற்றுத் தேர்ந்தது. இளம் வயதிலேயே பரந்தாமனைப் போற்றிப் பல பாசுரங்களையும், திருமொழி நூல்களையும் அவள் இயற்றத் தொடங்கினாள்.

விஷ்ணுசித்தர் பூப்பறித்துக் கொண்டு வந்து கொடுக்க, அதை மாலையாகத் தொடுக்கும் பணியைச் செய்து வந்தாள். மகள் தொடுத்துத் தரும் பூமாலையை தந்தை எடுத்துக் கொண்டு போய், வடபத்திரசாயிப் பெருமாளுக்கு அணிவித்து வழிபடுவார். சிறு வயதில் இருந்தே தந்தையிடம் கண்ணன் கதைகளைக் கேட்டு வளர்ந்த அவள், கண்ணனைத் தன் காதலனாக நினைத்து அன்பு கொண்டாள் ஆண்டாள். ஒரு கட்டத்தில் ஸ்ரீரங்கநாதரை திருமணம் செய்வது என உறுதி கொண்டாள்.

ஒருமுறை பெரியாழ்வார் பறித்துக் கொண்டு வந்த பூக்களை தொடுத்து மாலையாக்கி கொண்டிருந்தாள். அப்போது அவளுக்குள் திடீரென்று அந்த எண்ணம் தோன்றியது. எதிர்காலத்தில் தன் கணவராக வரப் போகும் கண்ணனுக்கு சாற்றும் மாலையைத் அணிவதில் தவறில்லை என முடிவு செய்தாள். இருப்பினும், இச்செயலை தந்தை அறிந்தால் தண்டிப்பாரே என பயந்தாள்.

வீட்டுக்கு வெளியில் வந்து பார்த்தாள். வெளியில் சென்ற அவளுடைய தந்தை வருவது போல் தெரியவில்லை. மீண்டும் வீட்டிற்குள் வந்த அவள், தொடுத்து வைத்த மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு கண்ணாடி முன் சென்றாள். அந்தப் பூமாலை அணிந்த போது மிக அழகாக இருந்தாள். அதைக் கண்டு மகிழ்ந்த அவள், அதை தந்தை பார்த்தால் கண்டிப்பார் என பயந்து மாலையை கழற்றி பூக்கூடையில் வைத்தாள்.

வெளியில் போன விஷ்ணுசித்தர் வீட்டுக்கு வந்தார். பூக்கூடையை எடுத்துக் கொண்டு, கோயிலுக்குச் சென்றார். அதில் இருந்த பூமாலை, கோதை அணிந்தது எனத் தெரியாமல், சுவாமிக்கு அணிவித்து வழிபட்டார்.

அதன் பின் தினமும் அவள் பூமாலையைத் தந்தைக்குத் தெரியாமல் அணிவதும், அதன் பின் தந்தை கொண்டு செல்லும் பூக்கூடையில் வைத்து விடுவதுமாக இருந்தாள். ஒரு நாள் அந்தப் பூமாலையில், நீண்ட தலைமுடி இருப்பதைக் கண்ட விஷ்ணுசித்தருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அந்த தலைமுடி மகள் கோதையுடையதுதான் என முடிவு செய்தார்.

மறுநாள் கோதையைப் பூமாலை தொடுக்கச் சொல்லி விட்டு மகளின் செயலை மறைந்திருந்து கவனித்தார். கோதையும் பூக்களைத் தொடுத்து மாலையாக்கி, அதை அணிந்து கொண்டு, கண்ணாடி முன் நின்று அழகு பார்த்தாள்.

அதைக் கண்டு அதிர்ந்து போனார். 'சுவாமிக்காக தொடுத்த மாலையை நீ அணிந்து கொண்டாயே' எனக் கண்டித்தார். அவள் அணிந்த மாலையைக் கழற்றி எறிந்தார். கோதை வருந்தினாள். ஆனால் தந்தையை எதிர்த்துப் பேச முடியாமல் அமைதியாக இருந்தாள்.

அதன் பின்பு, அவசர அவசரமாகப் பூக்களைப் பறித்து வந்து, புதிய மாலை ஒன்றை தொடுத்து விட்டு கோயிலுக்கு புறப்பட்டார். கோபத்தால் அவளிடம் ஏதும் பேசவில்லை.

அன்றிரவு நீண்ட நேரத்துக்குப் பின்னரே துாங்கினார். கனவில் தோன்றிய அரங்கன், ''கோதை என் மீது அன்பும், பக்தியும் கொண்டிருக்கிறாள். என் மீதுள்ள அன்பால் தினமும் மாலையை அணிந்து மகிழ்வாள். இதை அறியாமல் நீயும் எனக்கு அணிவித்தாய். ஆனால் இன்று, அவள் அணிந்த மாலையை வீசி விட்டுப் புதிய மாலையை அணிவித்தாய். எனக்கு அதில் விருப்பமில்லை. நாளை முதல் அவள் சூடிய மாலையை எனக்கு அணிவிக்க வேண்டும்” என்றார்.

திடுக்கிட்டு எழுந்த அவர், மகளை எண்ணி மகிழ்ச்சியடைந்தார். பக்தியால் கண்ணனின் மனதைக் கவர்ந்த அவளை 'ஆண்டாள்' என்றும், 'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' என்றும் போற்றினார். மறுநாள் முதல் ஆண்டாள் சூடிய மாலையை அணிவித்து வழிபட்டார்.

ஆண்டாள் திருமணப் பருவம் அடைந்தாள். தான் ஸ்ரீரங்கநாதரையே மணம் செய்து கொள்ள இருப்பதாகச் சொன்னாள். அதனைக் கேட்ட தந்தை, “மகளே, நீ பக்தியுடன் இருப்பது சரிதான். அதற்காக கடவுளைத் திருமணம் செய்வேன் என்பது ஏற்புடையதல்ல' என அறிவுறுத்தினார்.

ஆனால் அவள் தன் நிலையில் உறுதியுடன் இருப்பதாகச் சொன்னாள். மகளின் எதிர்காலம் என்னாகுமோ என நினைத்துக் கவலை கொள்ளத் தொடங்கினார். இந்நிலையில் ஆண்டாள் மார்கழி நோன்பிருந்து திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாடல்களை பாடினார்.

நோன்பு இருந்த ஆண்டாள், மதுரை கள்ளழகரிடம் தனக்கும் ஸ்ரீரங்கநாதருக்கும் திருமணம் நடந்தால் 100 தடா அக்கார வடிசிலும், 100 தடா வெண்ணெய்யும் நைவேத்யம் செய்வதாக வேண்டினள். அவளது வேண்டுதலை நிறைவேற்ற சுவாமி முன் வந்தார்.

ஒருநாள் விஷ்ணுசித்தரின் கனவில் தோன்றி, 'ஆண்டாளை மணமகளாக அலங்கரித்து ஸ்ரீரங்கத்திற்கு வாருங்கள்' என்றார். அதன்படி ஆண்டாளை மணமகளாக அலங்கரித்து, ஒரு பல்லக்கில் அமர வைத்துத் தன்னுடன் சிலரை அழைத்துக் கொண்டு புறப்பட்டார். பங்குனி உத்திர நன்னாளில் அங்கு சென்றனர். ஸ்ரீரங்கத்தின் எல்லையில் காத்திருந்த

கோயில் நிர்வாகிகளும், பக்தர்களும் வரவேற்றனர். அவர்கள், கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். விஷ்ணுசித்தர் நன்றியுடன் வணங்கினார். அனைவரும் ஆண்டாள், ஸ்ரீரங்கநாதர் திருமண வைபவத்தைக் காணக் காத்திருந்தனர். ஆண்டாள் வணங்கியபடி, 'ரங்கநாதா... உன்னை வந்தடைகிறேன்' என்றபடி கருவறைக்குள் சென்று பெருமாளோடு சேர்ந்தார். அதனைக் கண்ட விஷ்ணுசித்தர் மகிழ்ந்தார்.

ஆண்டாளின் நேர்த்திக்கடன்

ஸ்ரீரங்கத்தில் ஆண்டாள் ரங்கநாதருடன் ஒன்று சேர்ந்த பிறகு, அவளால் கள்ளழகருக்கு அக்கார வடிசிலும், வெண்ணெய்யும் சமர்ப்பிக்க முடியாமல் போனது. இந்நிலையில் ராமானுஜர் பின்னாளில் ஆண்டாளின் வேண்டுதலை நிறைவேற்ற விரும்பினார். ஒரு கூடாரை வல்லித் திருநாளில், கள்ளழகருக்கு 100 தடா அக்காரவடிசிலும், 100 தடா வெண்ணெய்யும் சமர்ப்பித்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்.

அதன் பின் அவர் ஸ்ரீவில்லிபுத்துாருக்குச் சென்று ஆண்டாளை வணங்கிய போது, மகிழ்ந்த ஆண்டாள் அசரீரியாக, 'வாரும் என் அண்ணலே' என அழைத்தாள். ஆண்டாளின் சார்பில் அவருடைய அண்ணனாக அக்கார வடிசில் சமர்ப்பிக்கும் நடைமுறை அழகர்கோவில், ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீபெரும்புதுார் கோயில்களில் உள்ளது.



-திருமணம் தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925






      Dinamalar
      Follow us