ADDED : பிப் 19, 2026 01:41 PM

பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
“என்ன அமிர்தம்மா வழக்கமா நீங்க தான் முன்னாடி வருவீங்க, இன்னைக்கு ரொம்ப நேரம் கழிச்சி வர்றீங்க?” எனக் கேட்டார் கிருஷ்ணவேணி.
“என் கண்ணாடிய மறந்து எங்கேயோ வச்சுட்டேன். அதான் நேரம் ஆயிடுச்சு”
''என்ன... மன்னர் தொண்டைமானுக்கு வந்த மறதி போலவா?”
“சரிதான்! ஐந்தாம் வாக்கியத்தை சொல்றீங்க போல இருக்கே”
“ஆமா, திருக்கோளூர் பெண் பிள்ளை ஐந்தாம் வாக்கியமான 'பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே' என்ற வாக்கியத்தைச் சொல்லி ராமானுஜரிடம் கேள்வி எழுப்புறா. இதற்கு முந்திய வாக்கியத்தில் பாகவதம், ராமாயணத்தில் நடந்த கதையைச் சொன்னா... இந்த அஞ்சாவது வாக்கியம் கலியுகத்தில் நடந்தது தான். தொண்டைமான் என்ற மன்னரின் கதை. ரொம்ப நெகிழ்ச்சியான கதை. இந்த மன்னர் தொண்டைமான் திருப்பதி ஏழுமலையானின் பக்தர். திருப்பதி கோயிலுக்கு நிறைய கைங்கரியம் செய்தார். கோபுரம், மதில்சுவர், மண்டபம் எல்லாம் கட்டினார். சுவாமிக்கு ரத்தின ஆபரணங்களை செய்தார். பெருமாளும் மன்னரின் நண்பன் ஆகி விட்டார்.
தினமும் பெருமாளை தரிசிக்க அரண்மனையில் இருந்து சுரங்கப்பாதை அமைத்தார். அந்த வழியே சென்று பெருமாளை தரிசித்து சற்று நேரம் பேசி விட்டு வருவார். ஒருமுறை தொண்டைமான் நாட்டின் மீது எதிரி நாடு படை எடுத்து வந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் சுரங்க பாதை வழியே சென்று உதவி கேட்டார். பெருமாளும் தன் சங்கு, சக்கரம் கொடுத்து உதவினார். அவை எதிரி நாட்டு படையை விரட்டின.
இப்படி இருந்த நேரத்தில் 'கூர்மன்' என்ற முதியவர் ஒருவர் இருந்தார். கடைசி காலத்தை காசியில் கழிக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் அதற்கு முன்பாக இறந்து போனார். அவருக்கு கிருஷ்ண சர்மா என்ற மகன் இருந்தான். தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியாததால் அவருடைய அஸ்தியை காசியில் கரைக்க வேண்டும் என மன்னரின் உதவியை நாடினான்.
மன்னா... என் தந்தையின் ஆசையை நிறைவேற்ற காசிக்குச் செல்கிறேன். அதுவரை தன் மனைவி, குழந்தையை பாதுகாக்கும்படி வேண்டினான். மன்னரும் அதற்கு சம்மதம் சொன்னார். சர்மாவும் நிம்மதியாக புறப்பட்டான்.
சர்மாவின் குடும்பத்தினர் அரண்மனையில் ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு உணவிட வேண்டும் என அரண்மனை காவலர்கள் மறந்தனார். இதனால் சர்மாவின் மனைவி, குழந்தைகள் பட்டினியால் பிணமாயினர்.
சில மாதங்கள் கழித்து காசிக்குப் போன கிருஷ்ண சர்மா திரும்பினார். ''மன்னா.. என் மனைவி, குழந்தைகளை அழைத்துச் செல்கிறேன்'' எனக் கேட்டான். அப்போதுதான் அவர்கள் பற்றிய ஞாபகமே மன்னருக்கு வந்தது. உடனே அரண்மனையில் அவர்கள் தங்கிய இடத்திற்குச் சென்ற போது, அவர்கள் இறந்து கிடந்தனர். அநியாயமாக பட்டினியால் இவர்களை கொன்று விட்டேனே என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது. ஆனால் கிருஷ்ண சர்மாவிடம் உண்மையை மறைத்தார் மன்னர்.
திருப்பதிக்கு புனித யாத்திரை சென்று இருப்பதாகவும், இரண்டொரு நாளில் வருவார்கள் என சர்மாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். 'அப்படியா நல்ல விஷயம் தான்' என சர்மாவும் தன் வீட்டுக்கு புறப்பட்டார். கனத்த இதயத்துடன் திருப்பதிக்குச் சென்று பெருமாளிடம் சரணடைந்தார் மன்னர்.
''அப்புறம் அவர்கள் பிழைத்தார்களா” என அக்கறையுடன் கேட்டார் அமிர்தம்.
''மன்னரைக் காப்பாற்ற வேண்டும் என பெருமாள் நினைத்தார். தன்னிடமிருந்த தீர்த்தத்தைக் கொடுத்து அதை பிணங்கள் மீது தெளித்தால் உயிர் பெற்று எழுந்திருப்பர் என்றார் பெருமாள். அப்படியே மன்னரும் செய்ய உயிர் பெற்றனர். சர்மாவிடம் மனைவி, குழந்தைகளை ஒப்படைத்தார் மன்னர். பிரச்னை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் ராமானுஜரிடம், 'பக்தியால் பிணங்களை எழுப்பிய மன்னன் எங்கே? நான் எங்கே! எனவே திருக்கோளூரில் வசிக்க முடியவில்லை. ஊரை விட்டு கிளம்புகிறேன் சுவாமி” என்றாள் பெண்பிள்ளை.
“இதைக் கேட்டதும் திருநாவுக்கரசர் தேவாரம் பாடி அப்பூதியடிகளின் மகன் பெரிய திருநாவுக்கரசுவை எழுப்பியது நினைவுக்கு வருது” என உணர்ச்சிவசப்பட்டார் அமிர்தம்.
“அப்படியா அது பற்றி சொல்லுங்களேன்”
“சொல்றேன். சிவன் மீது பதிகம் பாடி நாவுக்கரசர் அற்புதங்கள் பல செய்திருக்கிறார். அதில் ஒன்று தான் அப்பூதியடிகள் வரலாறு. 81 வயசு வரை புகழுடன் வாழ்ந்தவர் நாவுக்கரசர். கோயில்களில் உழவாரப் பணியைத் தொடங்கியவர் இவரே. பல கோயில்களுக்குச் சென்று சிவனை பாடி வழிபட, அவருடைய புகழ் எங்கும் பரவியது. பேரும் புகழும் எட்டுத்திக்கும் பரவி இருந்தது. இவருடைய பணிகளை கேள்விப்பட்ட அப்பூதியடிகள் என்ற சிவனடியார் இவருடைய பெரிய ரசிகராகி விட்டார்”
''அந்த காலத்திலேயே இப்ப இருக்கிற ரசிகர் போல பாலபிஷேகம் செஞ்சாரா?”
''பாலபிஷேகம் எல்லாம் அந்த காலத்துல கடவுளுக்குத் தான். இது அதுக்கும் மேல. தன் மகன்களை பெரிய திருநாவுக்கரசு சின்ன திருநாவுக்கரசு என்றே கூப்பிடுவார். மனைவியைக் கூட 'அம்மா திருநாவுக்கரசு' என அழைப்பார். அது மட்டுமில்ல மோர் பந்தல், தண்ணீர் பந்தல் அமைத்து, 'திருநாவுக்கரசர் மோர் பந்தல், திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல்' என பெயரிட்டார். திருநாவுக்கரசரை மனதிற்குள் வைத்து பூஜித்த அடியார் தான் அப்பூதியடிகள்.
ஒரு சமயம் அவரது சொந்த ஊரான திங்களூருக்கு திருநாவுக்கரசர் வந்தார். அப்பூதியடிகளைப் பற்றி கேள்விப்பட்டு அவரது வீட்டுக்கு சென்றார். வந்திருப்பவர் திருநாவுக்கரசர் எனத் தெரியாமல் அப்பூதி அடிகளும் அவரது மனைவி குழந்தைகளும் வரவேற்றனர். அவர்களிடம், 'ஏன் இப்படி திருநாவுக்கரசரின் பெயரில் தர்ம காரியம் செய்கிறீர்கள்' எனக் கேட்டார்.
அதற்கு அப்பூதியடிகள், இதுவரை அவரைச் சந்திக்காவிட்டாலும் திருநாவுக்கரசர் மீது தனக்குள்ள பக்தியை வெளிப்படுத்தினார். 'நீங்கள் குறிப்பிடும் அந்த திருநாவுக்கரசர் நானே' எனச் சொல்ல அனைவரும் மகிழ்ந்தனர். அதன் பின் விருந்துணவுக்கு ஏற்பாடானது. சமைத்து முடிந்ததும் தன் மகன் பெரிய திருநாவுக்கரசுவிடம், வாழை இலையை அறுத்து வா என தோட்டத்திற்கு அப்பூதியடிகள் அனுப்பினார். அங்கு வாழை இலையை அறுத்த போது பாம்பு அவனைத் தீண்டியது. ஆனாலும் தாயிடம் வாழை இலையை கொடுத்து விட்டு உயிர் விட்டான் பெரிய திருநாவுக்கரசு.
அதிர்ச்சி அடைந்த அப்பூதியடிகளின் மனைவி நடந்ததை எல்லாம் கணவரிடம் கூறினாள். அவரும் அதிர்ச்சியுடன் இப்போதா இப்படி நிகழ வேண்டும் என வருந்தினார். திருநாவுக்கரசருக்கு விருந்து படைத்த பின் மகன் இறந்த துக்கத்தை பிறகு பார்க்கலாம் என நினைத்தார். பிணத்தை மறைத்து விட்டு விருந்தினரான திருநாவுக்கரசருக்கு உணவு தர தயாரானார். குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடலாம் என திருநாவுக்கரசர் சொல்ல, 'இப்போதைக்கு அவன் இங்கு உதவமாட்டான்' என்றார் அப்பூதியடிகள்.
என்ன இவரது முகம் பொலிவுடன் இல்லையே... எவ்வளவு நேரம் கடந்தாலும் உம் மகன் வரட்டும்; பிறகு சாப்பிடலாம் என காத்திருந்தார் திருநாவுக்கரசர். வேறு வழியின்றி அப்பூதியடிகள் உண்மையைச் சொல்லி, மகன் பெரிய திருநாவுக்கரசுவை அவர் முன் கிடத்தினார்.
வாழை இலையை அறுக்கச் சென்ற குழந்தைக்கா இப்படி நடக்க வேண்டும் என வருந்திய திருநாவுக்கரசர் 'ஒன்றுகொலாம்' எனத் தொடங்கும் பதிகத்தை பாடினார். பிணமாகிவிட்ட சிறுவன் சிவனருளால் உயிர் பெற்றான். திருநாவுக்கரசரின் மகிமையை அறிந்து அனைவரும் மகிழ்ந்தனர். இதுவே பிணமாக கிடந்த அப்பூதியடிகளின் மகன் உயிர் பெற்ற வரலாறு”
''அப்பாடா... இப்பதான் மன பாரம் நீங்கின மாதிரி இருக்கு. கடவுளே... கதின்னு சரணடைஞ்சா வழி கிடைக்கும் என்று புரியுது”
''இந்த புரிதலோட இன்னைக்கு வீட்டுக்கு புறப்படுவோம்” என இருவரும் நடந்தனர்.
-தொடர்வாள் பெண்பிள்ளை
முனைவர் பவித்ரா நந்தகுமார்
82204 78043

