தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பார்வை பலவிதம்

பார்வை பலவிதம்

பார்வை பலவிதம்


ADDED : பிப் 19, 2026 01:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 01:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒவ்வொருவரும் தன்னை பற்றி என்ன நினைப்பார்களோ என நினைத்து நினைத்து சலித்துப்போன ஒருவன், கடவுளை நோக்கி தவமிருந்தான். அவன் முன் தோன்றிய கடவுள், ''என்ன வரம் வேண்டும் பக்தா?'' எனக் கேட்டார்.

''பிறருடைய மனதை அறியும் வரம் வேண்டும்'' என்றான். கடவுளும் கேட்ட வரத்தை தந்து விட்டு மறைந்தார். சில நாட்கள் கழிந்தன. அழுது புலம்பியபடி மீண்டும் தவமிருந்தான். கடவுள் தோன்றி, ''இப்போது என்னப்பா வேண்டும்?'' எனக் கேட்டார்.

''எனக்கு இந்த வரம் வேண்டாம் சுவாமி''

''ஏன்? என்னாயிற்று?''

''ஒவ்வொருவரும் என்னைப் பற்றி நினைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை''

''அப்படி என்ன நினைக்கிறார்கள்?''

''ஒருவன் என்னை, 'பொய் சொல்கிறவன்' என்கிறான்,

இன்னொருவன், 'பொறாமை பிடித்தவன்' என்கிறான்.

இன்னொருவன், 'அடுத்தவன் குடியை கெடுப்பவன்' என்கிறான். இப்படி பலரும் பலவிதமாக நினைப்பது எல்லாம் தெரிந்து கொள்வதால் நிம்மதியை இழந்து விட்டேன்'' என்றான்.

கடவுள் பலமாக சிரித்து விட்டு, ''சரி. இந்த மரத்தடியில் கண்ணை மூடிப் படு. என்ன நடக்கிறது என்று மட்டும் கவனி'' என்றார். அவனும் படுத்துக் கொண்டான். கொஞ்ச நேரத்தில் ஒரு குடிகாரன் வந்தான், ''குடிகாரப்பய... எப்படி படுத்துக் கெடக்கான் பாரு...'' என சொல்லிக் கொண்டே கடந்து சென்றான். சற்று நேரத்தில் திருடன் ஒருவன் வந்தான்.

''திருட்டுப்பய நல்லா கொள்ளையடிச்சுட்டு வந்து இளைப்பாறுகிறான் பாரு...'' என்றான். பின் ஒரு நோயாளி, ''வயித்துவலி போல சுருண்டு படுத்திருக்கான் பாவம்...'' என்றான். கடவுளின் திருநாமத்தை ஜபித்தபடி வந்தார் துறவி ஒருவர்.

அவர் படுத்திருப்பதைக் கண்டு, ''இவர் நம்மைப் போல் சாது போல. அவர் முகத்தை பார்த்தாலே தெரிகிறது'' என எண்ணியபடிச் சென்றார்.

சற்று நேரத்தில் கடவுள் தோன்றி, ''பார்த்தாயா, உன்னைக் காணும் ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் எதை எதையோ நினைத்தபடி செல்கின்றனர். அதை பொருட்படுத்த வேண்டாம். பார்வை பலவிதம்; பாதை உன் வசம் என்பதை உணர்ந்து கொள். மனதிற்கு சரி என தோன்றுவதை செய்'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us