ADDED : மே 28, 2026 10:36 AM

திருச்சி அருகிலுள்ள மண்ணச்சநல்லுாரைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாசன். பணியாற்றும் நிறுவனத்தின் சார்பில் பயிற்சிக்காக வெளிநாடு செல்ல தயாரானார். அதற்கு முன்னதாக மஹாபெரியவரிடம் ஆசி பெறுவதற்காக காஞ்சி மடத்திற்கு வந்தார். அன்று அங்கு வந்த பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்தார் சீடர் கண்ணன். பக்தரான ஸ்ரீநிவாசனின் முறை வந்ததும், 'பெரியவா... நான் வேலை பாக்குற கம்பெனியில வெளிநாட்டுக்கு அனுப்பறா. அதுக்கு பெரியவாளோட ஆசி வேணும்...' என்றார்.
இதைக் கேட்ட சீடர்,'வெளிநாட்டுக்குப் போறதைப் பெரியவா விரும்ப மாட்டா. வேலையை பத்தி சொல்ல வேண்டாம்.பேரும், ஊரும் மட்டும் சொல்லுங்க' என்றார் வேகமாக. உடனே சீடரை பார்த்து கையசைத்தார் மஹாபெரியவர்.
அவரும் 'பெரியவா...' என்றார் பணிவுடன்.
'அங்கே நிக்கறாளே... சின்ன குழந்தை... அவளை கூப்பிட்டு வா' என்றார்.
பெரியவர் காட்டிய இடத்தில் நிறைய குழந்தைகள் இருந்ததால் அவருக்கு எந்த குழந்தை என தெரியவில்லை. அடையாளம் காட்டிய குழந்தைக்கு அருகில் சென்றதும், 'அவள் தான்' என தலையசைத்தார் சுவாமிகள்.
குழந்தை தன் அருகில் வந்ததும், 'குழந்தே... உன் பேரு என்ன?' எனக் கேட்டார்.
'சுபாஷினி...' என்றாள்
'உன்னோட அப்பா எங்கே?'
'இதோ... இவர் தான்...' என ஸ்ரீநிவாசனைக் காட்டி சிரித்தாள்.
'என்னோட குழந்தை தான் பெரியவா...' என்றார் அவரும் மகிழ்ச்சியுடன்.
அருகில் இருந்த மாலையை குழந்தையிடம் கொடுத்து, அப்பாவின் கழுத்தில் போடச் சொன்னார்.
அவளும் தனக்கு பிடித்த அன்பான அப்பாவுக்கு அணிவித்தாள். மாலை தந்ததன் மூலம் வெளிநாடு செல்வதற்கு சுவாமிகளின் ஆசி கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தார் ஸ்ரீநிவாசன்.
பயணத்தை முடித்து திரும்பிய போது உறவினர், நண்பர் என பலரும் மாலை அணிவித்து வரவேற்றனர். அப்போது காஞ்சி மடத்தில் மஹாபெரியவரின் ஆசியுடன் மகள் அணிவித்த மாலை தான் ஞாபகத்திற்கு வந்தது.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* பூஜைக்கு பயன்படுத்திய பூவை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.
* பெண் தெய்வத்திற்கு கருப்பு நிற ஆடையை சாத்தக்கூடாது.
* சாப்பிடும் போது காலணி அணியாதீர்கள்.
* நோயின்றி வாழ பகலில் துாங்க வேண்டாம்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com
