ADDED : மே 28, 2026 10:41 AM

உமையவள் கேட்ட உதவி
“மேடம் உங்களக் கூப்பிடறாங்க”
“யாருங்க உங்க மேடம்... கலெக்டரா, இல்ல மினிஸ்டரா?”
“அதுக்கெல்லாம் ஆயிரம் மடங்கு மேல”
என்னை இழுத்துக் கொண்டு போனார் அந்தப் போலீஸ்காரர். காலையில் நிம்மதியா ஒரு காபி குடிக்க விட மாட்டார்களா?
சற்றுத் தள்ளி ஒரு நாற்காலியில் கால் மீது கால் போட்டு உட்கார்ந்திருந்த காவல் துறை அதிகாரியைப் பார்த்ததுமே கண்கள் பொங்கின. அவளின் காலில் விழுந்தேன்.
“ஒரு உதவி செய்வாயா?”
“ஆணையிடுங்கள். உயிரைத் தருகிறேன்.”
“அதற்கு மேலும் தர வேண்டியிருக்கலாம்.”
நான் அவளையே பார்த்தேன். நகரின் பிரபல எலும்பு முறிவு மருத்துவரின் பெயரைச் சொன்னாள்.
“அவனுடைய ஒரு காலை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப் போகிறார்கள். அவனைப் பார்த்துப் பேசு”
“அவனா? உங்களை அவன் எப்படி திட்டினான்? ஒரு முறை நானும் அவனும் ஒரே மேடையில பேசினோம். நான் உங்கள் அன்பைச் சிலாகித்துச் சொன்னேன். அவன் என்னைக் கண்டித்துப் பேசினான். உங்களை அரக்கி என்றான்.”
“நான் சொன்ன வேலையை நீ செய்யாவிட்டால் அப்புறம் என்ன கொத்தடிமை வேண்டிக் கிடக்கிறது?”
“என்ன செய்ய வேண்டும்?”
“அவன் கையைப் பற்றியவுடன் அவனுடைய கடந்த காலம் உனக்குத் தெரியும். உன் மனதில் தோன்றுவதைச் சொல். அவன் இப்படியே இருந்தால் அடுத்த பிறப்பு இன்னும் மோசமாக இருக்கும்”
அங்கிருந்து மறைந்தாள்.
நகருக்கு வெளியே இருந்த கார்ப்பரேட் மருத்துவமனையில் மருத்துவர் நாகராஜன் இருந்த அறையைக் கண்டுபிடித்து தயங்கியபடி கதவைத் தட்டினேன். நர்ஸ் வந்தாள்.
நாகராஜனுக்கு அறுபது வயது இருக்கும். மிகுந்த வலியில் இருக்கிறார் என்பதை அவர் முகம் சொன்னது. “வாய்யா வா! அன்னிக்கு மேடையில பச்சைப்புடவைக்காரி அன்பே வடிவானவன்னு அள்ளி விட்டியே! எனக்கு என்ன நடந்திருக்கு பார்த்தியா? இருபதாயிரம் பேரோட காலச் சரி செஞ்சி வாழ வச்சவன்யா நான். ஒரு தரம் ஒருத்தனோட காலு மெஷின்ல அடிபட்டுத் துண்டா விழுந்திருச்சி. அதை ஒட்ட வச்சி நடக்க வச்சேன். இன்னிக்கு என் வலது கால் போயிருச்சி. இடது கால் போகுமா போகாதான்னு அடுத்த மாசம்தான் தெரியும். இதுதான் அவ ஆட்சி செய்யற லட்சணமா?”
நர்ஸை சிறிது நேரம் வெளியில் இருக்கச் சொன்னேன். மருத்துவரின் கையைப் பற்றினேன்.
“இனிமே அவளப் பச்சைப் புடவைக்காரின்னு சொல்லாத. கல் மனசுக்காரி, ராட்சசின்னு சொல்லு. பொருத்தமா இருக்கும்.”
அந்தக் கணத்தில் நாகராஜனின் கடந்த காலம் தெரிந்தது. “நீங்க சரி செஞ்ச இருபதாயிரம் கால்களப் பத்திச் சொன்னீங்க. நீங்கமுறிச்ச ஒரு காலப் பத்திச் சொல்லட்டுமா?”
மருத்துவரின் முகம் வெளிறியது.
“25 வருஷத்துக்கு முன்னால நடந்தது. உங்களுக்குப் பேரும் புகழும் வர ஆரம்பிச்ச நேரம். 20 வயசுப் பையனுக்கு ஒரு விபத்துல கால்ல அடிபட்டிருந்தது. எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து எலும்பு முறிஞ்சிருக்குன்னு கண்டுபிடிச்சீங்க. உடனே ப்ளேட் வச்சி ஆப்பரேஷன் பண்ணனும் சொன்னீங்க. உங்க பீஸ், ஆஸ்பத்திரி செலவை முன்னாலயே கட்டச் சொல்லிட்டீங்க.
“ஆப்பரேஷன ஆரம்பிச்ச போதுதான் ஒரு அதிர்ச்சியான உண்மை தெரிஞ்சது. அவனுக்கு எலும்பு முறியவேயில்ல. எல்லாம் வெளிக்காயம் தான். எக்ஸ்ரேல ஏதோ சொதப்பிருந்தாங்க. உடனே தையல் போட்டு முடிச்சிருக்கலாம். அவனும் நல்லா இருந்திருப்பான். ஆனா அப்படி செஞ்சா நீங்க வாங்கின பணத்தை திரும்பிக் கொடுக்கணுமே. அப்போ உங்களுக்கு பேங்க் லோனக் கட்ட வேண்டிய நிர்பந்தம். உங்க கையில இருந்த ஆயுதத்தால எலும்ப அடிச்சி முறிச்சீங்க. அப்புறம் ப்ளேட் வச்சி ஆப்பரேஷன் செஞ்சீங்க.
“அதீத குற்ற உணர்வோடயும் பதட்டத்தோடயும் செஞ்ச அந்த ஆப்பரேஷன்ல உங்க திறமைய முழுசாக் காட்ட முடியல. எலும்பு சரியா சேரல. வாழ்க்கை முழுசும் விந்தி விந்தி நடக்க வேண்டிய நிலை. அப்பக்கூட இன்னொரு ஆப்பரேஷன் பண்ணி சரி பண்ணியிருக்கலாம். நீங்க அதச் செய்யல. ராணுவத்துல சேரணும்க்கறதுதான் அவனுடைய கனவு. அது நடக்கல. சரியான வேலையும் கெடைக்கல. அவனுடைய வாழ்க்கையவே நாசம் பண்ணிட்டீங்க”
“இதெல்லாம் உங்களுக்கு எப்படி...''
“நாளைக்கு உங்க மனசுல என்ன நினைப்பு இருக்கும்னு இன்னிக்கே என் பச்சைப்புடவைக்காரிக்குத் தெரியும்யா. உங்களுக்குக் கெடைச்ச தண்டனை குறைவு. உங்க வயசான காலத்துல ஒரு கால் இல்லாம வாழப் போறீங்க. உங்ககிட்ட கோடிக்கணக்குல பணம் இருக்கு. உங்களுக்காக வேலை செய்ய, உங்க மேல அன்பைக் கொட்ட நெறையப் பேரு இருக்காங்க”
அழுது கொண்டிருந்தார் மருத்துவர். அவரை மேலும் அழவைத்தேன்.
“உன்னைப் பாக்கவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சேன்யா... என்ன வற்புறுத்தி அனுப்பி வச்சாய்யா. அடுத்த பொறப்பாவது நல்லா இருக்கணுமேன்னு உன்னைப் பெத்தவ மாதிரி கவலைப்படறாய்யா. அவளைப் போய் கல்மனசுக்காரின்னு சொல்லிட்டியே. நல்லா இரு.” எழுந்தேன். கையைப் பற்றி அமர வைத்தார் மருத்துவர்.
“பச்சைப்புடவைக்காரிக்கு நான் கோயில் கட்டட்டுமா? தங்கத் தேர் இழுக்கட்டுமா? வேற என்ன செய்யட்டும்?”
“அது உங்க இஷ்டம். இன்னிக்கு டூ வீலர்ல போற ஒரு தொழிலாளி கீழ விழுந்து எலும்பு முறிஞ்சிதுன்னா ரெண்டு மூணு லட்சம் செலவாயிருது. ரெண்டு மாசம் அவன் பிழைப்பு போயிருது. உங்க கையில இருக்கற கோடிகள வச்சிக்கிட்டு, உங்க மருத்துவ திறமைகள வச்சிக்கிட்டு அவங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமான்னு யோசிங்க”
மருத்துவமனை வாசலில் நின்றிருந்த போலீஸ் வாகனத்தின் முன் இருக்கையில் அமர்ந்தவளை விழுந்து வணங்கினேன்.
“இந்த கொடியவன் மீது அன்பு காட்ட வேண்டுமா என்ன?''
“மனிதர்களாகிய நீங்கள்தான் கொலைகாரர்களுக்குத் துாக்குத் தண்டனை கொடுத்து வெளியில் துாக்கி எறிவீர்கள். எனக்கு வெளியில் என்று எதுவும் கிடையாதே. ஒரு தாய் என்ற முறையில் எல்லாப் பிள்ளைகளையும் கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது”
“இந்த மருத்துவரால் பாதிக்கப்பட்ட அந்த இளைஞன்...''
“ராணுவத்திற்கு தேவையான ஒரு தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்கும் பேறு அவனுக்குக் கிடைத்தது. இப்போது வடக்கே ஒரு பெரிய நகரில் செல்வந்தனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். உனக்கு என்ன வேண்டும்? உன்னை இப்போதே கரை சேர்த்து விடட்டுமா?”
“வேண்டாம், தாயே. கரை சேர வேண்டியவர்கள் வரிசையில் நான் கடைசியாளாக இருந்து விட்டுப் போகிறேன். அந்த வரிசையில் என் முன் நிற்பவர்களுக்கு உதவி செய்யும் பாக்கியத்தைக் கொடுங்கள் போதும்.”
அவளுடைய சிரிப்பின் அழகில் மயங்கி நின்ற போது அவள் மறைந்து விட்டாள்.
-தாயின் அன்பு தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com
