ADDED : மே 28, 2026 10:46 AM

கண்டா கர்ணனைப் போலே...
உட்கார்ந்திருந்த கிருஷ்ணவேணியை பார்த்த அமிர்தம், ''கொஞ்ச நேரம் உட்காரப் போறீங்களா... இல்ல நடப்போமா?” எனக் கேட்டார்.
“வாங்க... கண்டாகர்ணன் கதை பேசிக்கிட்டே நடக்க ஆரம்பிக்கலாம்'' என்றார் கிருஷ்ணவேணி.
'' ராமானுஜரை பார்த்து திருக்கோளூர் பெண் பிள்ளை, 'பிணவிருந்து இட்டேனோ கண்டா கர்ணணை போலே'ன்னு சொல்றா. அவள் ஆரம்பித்ததும் ராமானுஜர் அமைதியாக கேட்க தொடங்கிட்டார். நீங்களும் கேளுங்க. முன்னொரு காலத்துல கண்டா கர்ணன் என்ற பிசாசு இருந்தது. அது சிவபெருமான் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தது.
சிவபக்தியை வளர்த்துக் கொண்டு வந்த அது நாராயணன் மீது தேவையற்ற வெறுப்பையும் வளர்த்து வந்தது. தன் முன்பாக யாரும் நாராயண நாமங்களை சொன்னால் தன் காதை பொத்திக் கொள்ளும். அப்படி பொத்துவதில் அதற்கு தாமதம் ஏற்பட்டதால் என்ன செய்தது தெரியுமா? அது காதுகளில் துளையிட்டு மணிகளை காதில் அணிந்து கொண்டது. யாரேனும் நாராயண நாமங்களைச் சொன்னால் அது கேட்காத படி காதுகளை அசைத்து சத்தம் எழுப்பியது.
இதனால் நாராயண மந்திரம் தன் காதில் விழாமல் பார்த்துக் கொண்டது. சிவனைப் பற்றிய சிந்தனையில் இருந்தது. காதுகளில் மணிகளை கட்டிக் கொண்டு திரிந்ததால் அந்த பிசாசை 'கண்டாகர்ணன்' என அழைத்தனர்.
'ஓம் நமசிவாய' என்ற ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதி பல்லாண்டு தவம் செய்தது. அதனுடைய பூஜை, சிவபக்தியை சிவபெருமான் கவனித்துக் கொண்டே வந்தார். போகப் போக தவம் மூர்க்கத்தனமாகத் தொடங்கியது. கண்டாகர்ணனின் மூர்க்கத்தனத்தை குறைத்து அதற்கு பாடம் புகட்ட எண்ணினார் சிவன். சில காலம் கழித்து பிசாசின் முன் சிவன் தோன்றி, 'பக்தா... உன் பக்தியை மெச்சினேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள்'' என்றார்.
சிவனே நேரில் வந்ததை பார்த்த பிசாசுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. உண்ண புலால் உணவு, உடுக்க உடை எல்லாம் பெற்று குறைவின்றி வாழ்கிறேன். என்னுடைய இந்தப் பிறவி முடிந்ததும் எனக்கு முக்தி அருள வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டியது அந்தப் பிசாசு.
இந்த கண்டா கர்ணன் பிசாசை திருத்த இதுவே சரியான நேரம் என்பதை உணர்ந்த சிவபெருமான் முக்தியைத் தவிர உனக்கு வேறு ஏது வேண்டுமானாலும் கேள் தருகிறேன் ஆனால் உனக்கு முக்தி தர அந்த நாராயணன் ஒருவன் தான் உகந்தவன், அவனை சரணடைந்தால் முக்தி தருவான் எனச் சொல்லி விடைபெற்றார். கண்டாகர்ணனின் உலகமே தலைகீழானது. யாருடைய பெயர் தன் காதிலே விழக் கூடாது என இருந்ததோ அந்த நாராயணனை சரணடைந்தால் மட்டுமே முக்தி என்பதை உணர்ந்த கண்டா கர்ணன் வெறுப்பை விட்டொழித்தது.
காதில் இருந்த மணிகளை அகற்றி விட்டு நாராயணனை நோக்கி தவம் இருக்க விரும்பியது. வழி காட்டுவார் என நம்பி குபேரனிடம் சென்றது. 'ஓம் நமோ நாராயணா' என்ற திருமந்திரத்தை கண்டாகர்ணனுக்கு உபதேசித்தார் குபேரன்.
கண்டா கர்ணனும் தொடர்ந்து மந்திரத்தை உச்சரித்து வந்தது. அதனுடைய பக்தியை மெச்சியதோடு, நாராயணனே துவாரகையில் கண்ணனாக அவதரித்துள்ளார்.
துவாரகை சென்று அவரை சந்தித்து வேண்டியதை பெற்றுக் கொள் என்றார். கடைசியாக இடி போன்ற செய்தி ஒன்றையும் குபேரன் சொன்னார். என்ன தெரியுமா? மந்திரத்தை உச்சரிக்கும் போது மாமிசம் சாப்பிடக் கூடாது என்பது தான். ஐயோ புலால் உண்ண ஏதேனும் வழி இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் என அந்த பிசாசு மன்றாடி கேட்டது. குபேரன் மனமிரங்கி, 'நீ கொன்று தின்னக் கூடாது, தானாக வயது மூத்து இறந்த விலங்கு, பறவைகளை தவிர்க்க முடியாத நிலையில் உண்ணலாம் என்றார்.
எப்படியாவது முக்தி பெற வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்த கண்டாகர்ணன் உடனே துவாரகைக்கு புறப்பட்டது. போற வழியில் தான் கொல்லாமல் இருக்க, கிடைத்த பிணத்தில் உணவு சமைத்து வைத்திருந்தது. திடீரென கண்ணனைக் கண்டதும் உலகையே மறந்தது. கண்ணனை உபசரிக்க வேண்டி தன்னிடமிருந்த பிண விருந்தை அன்பாகக் கொடுத்தது. கண்ணன் அந்த கண்டாகர்ணனின் அன்பில் மகிழ்ந்து முக்தியை வழங்கினார்.
அப்படி கண்ணனால் முத்தி பெறும் பேறு பெற்ற கண்டாகர்ணனைப்போல் கண்ணனுக்கு அன்புடன் உணவிடவில்லையே. எனக்கு இந்த ஊரில் எந்த தகுதியும் இல்லையே என ராமானுஜரிடம் பெண்பிள்ளை மனம் கசந்து தெரிவித்தாள்”
''ஓ! பிணவிருந்திட்டவன் பெயர் கண்டா கர்ணனா! அந்த பிசாசாவது பரவாயில்லை... இன்னொரு உயிரை கொன்று விருந்தளித்தது. ஆனால் சிறுத்தொண்டர் என்ன பண்ணினார் தெரியுமா? கடவுள் கேட்டார் என சொல்லி தன் மகனைக் கொன்று விருந்தளித்தார்”
''இப்படி ஒரு பக்தியா? அப்படி செய்தது யார்?” என கேட்டார் கிருஷ்ணவேணி.
''இதோ சொல்றேன். பரஞ்சோதி என்ற சிவனடியார் அடியவர்களைக் கண்டால் தன்னை மிகச் சிறியவராக கருதி பணிவார். இதனால் அவரை சிறுத்தொண்டர் என அழைத்தனர். பல்லவ மன்னன் நரசிம்மவர்மன் காலத்தில் படைத்தலைவராக இருந்தவர் இவர். அடியார்களை அழைத்து விருந்து வைப்பதை தலையாய கடமையாக செய்து வந்தார். ஒரு நாள் பைரவ சந்நியாசி வேடத்தில் சிவபெருமானே அந்த சிறுத்தொண்டர் வீட்டுக்குள் வந்தார்.
அவரது மனைவியும் பணிப்பெண்ணும் வரவேற்றனர். அவர்களிடம் சிவபெருமான் எனக்கு பிள்ளைக்கறி வேண்டும் எனக் கேட்க சிறுத்தொண்டரும் மனைவியும் அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பிள்ளையும் ஒரு மகனாக இருந்து உடலில் மரு ஏதும் இல்லாமல் உறுப்பு அனைத்தும் முழுமை பெற்றவனாக இருக்க வேண்டும்.
மேலும் குழந்தையை தாய் பிடிக்க தந்தை வாளால் அரிந்து சமைத்த கறியாக இருந்தால் தான் உண்பேன். அதிலும் அவன் தாயும் தந்தையும் மகிழ்ச்சியுடன் இதைச் செய்தால் மட்டுமே என்னால் உணவை சாப்பிட இயலும். அவ்வாறு செய்ய முடிந்தால் நான் வருகிறேன். இல்லை என்றால் நான் வேறு இடம் செல்வதாக அடியார் சொன்னார்.
சிவனின் திருவிளையாடலை உணராத சிறுத்தொண்டர் பள்ளிக்குச் சென்ற குழந்தையை அழைத்து வந்தார். எந்த பெண்ணாவது குழந்தையை கொல்ல சம்மதிப்பாளா? ஆனால் அவள் பக்திக்காக சம்மதித்தார். ஒரே வாரிசான தன் மகனின் தலையைப் பிடித்தார் சிறுத்தொண்டர். பெற்றோர் புன்னகைப்பதைக் கண்டு சிறுவனும் புன்னகைத்தான். ஆயுதத்தை கையில் எடுத்த சிறுத்தொண்டர் அடுத்து செய்ய வேண்டியதை செய்து முடித்தார். இத்துடன் மற்ற உணவும் முறைப்படி சமைத்து அடியாருக்கு படைக்க ஆயத்தமாயினர்.
அந்த பைரவ சந்நியாசி நான் தனியாக உண்ண மாட்டேன். அதனால் அடியார்கள் யாராவது இருந்தால் அழைத்து வாருங்கள் என்றார். சிறுத் தொண்டரும் தேடிப் பார்த்து அடியார்கள் யாரும் கிடைக்கவில்லை என வந்து சொல்ல, 'உங்கள் மகனை அழையுங்கள், அவன் வந்தால் உண்ணலாம்' என்று சொல்ல செய்வதறியாது திகைத்த சிறுத்தொண்டர் வாசலுக்குப் போய் தான் எதைச் செய்தோம் என்ற நினைப்பே இல்லாமல் 'மகனே வா' என அழைத்தார்.
அவரது மனைவியும் 'சீராளா வா' என அழைத்தாள். திருவருளால் அப்போது தான் பள்ளியில் இருந்து வருவதைப் போல ஓடி வந்தான். எப்படி உயிரோடு வந்தான் என்ற எண்ணம் இல்லாமல் இருவரும் அவனுடன் வீட்டுக்குள் சென்ற போது அங்கு சிவனடியார் இல்லை. பாத்திரத்தில் இருந்த அனைத்து உணவுகளும் மாயமாகி விட்டிருந்தன. அவர் எங்கே சென்றார் என தேடினர். அப்போது வானில் சிவனும் உமாதேவியும் முருகப்பெருமானுடன் காட்சியளித்தனர்” என கைகூப்பினார் அமிர்தம்.
''எனக்கு உடம்பே சிலிர்த்து போச்சு. இப்படி கூட பக்தி செஞ்சிருக்காங்களே! நாம் செய்யறதெல்லாம் எம்மாத்திரம்”
''என்ன நீங்களும் திருக்கோளூர் பெண் பிள்ளை மாதிரியே பேசுறீங்களே! இன்னைக்கு கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிடுச்சோ' என சிரித்தார் அமிர்தம்.
-தொடர்வாள் பெண்பிள்ளை
முனைவர் பவித்ரா நந்தகுமார்
82204 78043
