தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெய்வத் திருமணம் - 25

தெய்வத் திருமணம் - 25

தெய்வத் திருமணம் - 25


ADDED : மே 28, 2026 11:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 11:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பத்மாவதி - ஸ்ரீநிவாசன் திருமணம்

தேவ உலகத்தில் முனிவர்கள் அனைவரும் சேர்ந்து பெரிய வேள்வி ஒன்றை நடத்தினர். அங்கு வந்த நாரதர், வேள்வியின் பலனை முப்பெரும் கடவுள்களில் எவருக்கு வழங்கப் போகிறீர்கள்? எனக் கேட்டார். மூவரில் அமைதியும் பொறுமையுமான கடவுள் எவரோ, அவருக்கே வேள்விப் பலன் அனைத்தையும் வழங்கப் போகிறோம் என்றார் பிருகு முனிவர்.

வேள்வியின் முடிவில், பிருகு முனிவர் அவிர்பாகம் அடங்கிய கலசத்தை எடுத்துக் கொண்டு சத்யலோகம் சென்றார். அங்கு பிரம்மனும், சரஸ்வதியும் முனிவருக்குத் தகுந்த வரவேற்பைத் தரவில்லை. அங்கிருந்து கோபத்துடன் கிளம்பிய முனிவர் கைலாயம் சென்றார். சிவபெருமானும், பார்வதிதேவியும் முனிவரை உள்ளேயே அனுமதிக்கவில்லை. அவருடைய கோபம் மேலும் அதிகரித்தது. அடுத்து அவர் வைகுண்டம் சென்றார். அங்கு திருமால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அவரது கால் அருகே மகாலட்சுமி அமர்ந்திருந்தார்.

திருமால் உறக்கம் கலைந்து எழுந்தவுடன், அவிர்பாகக் கலசத்தைக் கொடுக்கலாம் என அங்கேயே காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் திருமால் எழுந்திருக்காததால், கோபத்துடன் சென்ற பிருகு முனிவர் திருமாலின் மார்பில் எட்டி உதைத்தார். கண் விழித்த திருமால், கோபமாக நின்றிருந்த முனிவரின் கால்களைப் பிடித்துக் கொண்டு, என்னை உதைத்த இந்தக் காலுக்கு வலித்திருக்குமே எனச் சொல்லியபடி, அந்தக் காலைத் தன் கைகளால் மெதுவாகப் பிடித்து விட்டார். பொறுமையை விட சிறந்த குணம் வேறு இல்லை.

தான் கோபத்தில் எட்டி உதைத்த போதும், அதனைப் பொருட்படுத்தாமல் கால் வலிக்குமே என பிடித்துவிட்ட திருமாலின் அன்பில் மகிழ்ந்தார். அதே வேளையில், தான் செய்த தவறை நினைத்து வருந்தினார். கலசத்தை அவரிடம் தந்துவிட்டுத் திரும்பினார்.

முனிவரின் செயலை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மகாலட்சுமி கோபம் அடைந்தார். உங்கள் மார்பில் உதைத்த முனிவரின் காலைப் பிடிக்கிறீர்களே, இது சரியா? எனக் கேட்டார். திருமால் அதற்குப் புன்னகைத்தார். தங்களின் மார்பில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எனத் தெரிந்திருந்தும், கால்களால் உதைத்த முனிவரைக் கண்டிக்காமல் விட்டீர்களே... இனியும் நான் இங்கிருப்பது சரியல்ல, எனச் சொல்லி விட்டு பூவுலகம் வந்து சேர்ந்தார் மகாலட்சுமி.

பூவுலகில் நாராயணவனத்தை ஆட்சி செய்த ஆகாசராசனுக்கு நீண்ட காலமாகக் குழந்தை இல்லாமல் இருந்தது. குழந்தைப்பேறு வேண்டி வேள்வி செய்ய நினைத்த அவன், தாமரை மலர் ஒன்றில் அழகான பெண் குழந்தை இருந்ததைக் கண்டு மகிழ்ச்சியடைந்தான்.

அந்த குழந்தையை எடுத்து வந்த அரசன், குழந்தையை மனைவி தரணி தேவியிடம் கொடுத்தான். அந்தக் குழந்தை தாமரையில் (பத்மம்) தோன்றியதால் பத்மாவதி எனப் பெயர் சூட்டி அன்புடன் வளர்த்தனர்.

பத்மாவதி வளர்ந்து திருமணப் பருவம் அடைந்து தோழியர்களுடன் நந்தவனத்தில் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த நாரத முனிவரிடம் தன் கையைக் காட்டிப் பலன் சொல்லும்படிக் கேட்டாள். அவளது கையைப் பார்த்த நாரதர், “உன்னைத் திருமாலே திருமணம் செய்து கொள்வார்” என்றார். அதனைக் கேட்டுப் பத்மாவதி மகிழ்ந்தார்.

வைகுண்டத்தில் மகாலட்சுமி இல்லாததால் கவலையடைந்த திருமால், மகாலட்சுமியைத் தேடி பூவுலகிற்கு வந்தார். பூவுலகிற்கு வந்த அவர், தன் உருவத்தை இளைஞராக மாற்றிக் கொண்டார். பூமியில் பல இடங்களில் தேடியும் அவருக்கு மகாலட்சுமி இருக்குமிடம் தெரியவில்லை. தேடிக் களைத்துப் போன அவர், மலைப்பகுதியில் அமைந்திருந்த வராக முனிவரின் ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார்.

அந்த ஆசிரமத்தில் இருந்த வராக முனிவரின் மனைவி வகுளாதேவி, வந்திருப்பவர் திருமால் என அடையாளம் கண்டு கொண்டார். ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல், அவரை மகனாக ஏற்றுக் கொண்டார். முனிவரும் அவரது மனைவியும் அவரை 'ஸ்ரீநிவாசன்' என்ற பெயர் சொல்லி அழைத்தனர்.

ஸ்ரீநிவாசன் ஒருநாள் வெள்ளை குதிரையொன்றில் அமர்ந்து வேட்டையாடச் சென்றார். அப்போது யானை ஒன்றைக் கண்ட அவர், அந்த யானையைத் துரத்திக் கொண்டு சென்றார். அங்கு பத்மாவதியும் அவளுடைய தோழியர்களும் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்களருகில் சென்ற ஸ்ரீநிவாசன், பத்மாவதியின் அழகில் மயங்கி நின்றார். பத்மாவதியும் ஸ்ரீநிவாசனின் அழகில் மயங்கி நின்றார்.

இதற்கிடையே வேட்டையாட வந்தவன் பத்மாவதியைத் துாக்கிச் சென்று விடுவானோ என்று கவலையடைந்த பத்மாவதியின் தோழியர்கள், கல்லால் அடித்து விரட்டத் தொடங்கினர். அதனால் காயமடைந்த ஸ்ரீநிவாசன், பெண்களைத் தாக்குவது சரியல்ல என நினைத்தபடி ஆசிரமத்திற்குத் திரும்பினார்.

வேட்டைக்குச் சென்ற ஸ்ரீநிவாசன் வருத்தமுடன் இருப்பதைக் கண்டு கவலையடைந்த வகுளாதேவி, என்ன நடந்தது எனக் கேட்டார். வேட்டைக்குச் சென்ற போது கண்ட அழகிய பெண்ணைப் பற்றிச் சொல்லி, அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.

அரண்மனைக்குத் திரும்பிய பத்மாவதியும் கவலையுடன் இருந்தாள். அவளின் கவலைக்கு என்ன காரணம்? என தோழியர்களிடம் அவளது தந்தை விசாரித்து அறிந்தார். அவர்கள் மூலம் அந்த வேட்டைக்காரன் மீது பத்மாவதி காதல் கொண்டது பற்றி கூறினர்.

வகுளாதேவி சில சீடர்களை அனுப்பி ஸ்ரீநிவாசன் விரும்பிய பெண் யாரென்று அறிந்து வரச் சொன்னாள். வேட்டைக்குச் சென்ற போது, மன்னர் ஆகாசராஜனின் மகள் பத்மாவதியைத்தான் பார்த்திருக்கிறார் என தகவல் அளித்தனர்.

வராக முனிவரிடம் அந்த தகவலைச் சொல்லி, ஸ்ரீநிவாசன் விரும்பும் பத்மாவதியை திருமணம் செய்து வைக்க வேண்டினார் வகுளாதேவி. ஆசிரமத்தில் வசிக்கும் ஸ்ரீநிவாசனுக்கு ராஜகுமாரியான பத்மாவதியைத் திருமணம் செய்து தருவார்களா? என்ற சந்தேகமிருந்த போதும், முனிவர் மனைவியுடன் அரண்மனைக்குச் சென்று பெண் கேட்டார்.

திருமணம் செய்து தர விரும்பாத ஆகாசராஜன், தன் மகளைத் திருமணம் செய்து கொடுப்பதாக இருந்தால், ஒரு கோடி பொற்காசுகள் தர வேண்டுமென நிபந்தனை விதித்தான். ஆசிரமத்தில் இருக்கும் முனிவர் ஒரு கோடி பொற்காசுகளை எப்படி கொண்டு வந்து தர முடியும்? முனிவரும், அவரது மனைவியும் ஆசிரமத்திற்குத் திரும்பினர். இருவரும் ஸ்ரீநிவாசனிடம், ஆகாசராஜன் கேட்கும் கோடி பொற்காசுகளை எப்படி தர முடியும்? எனக் கேட்டனர்.

ஸ்ரீநிவாசன், குபேரனிடம் கோடி பொற்காசுகளைக் கடனாகப் பெற்று முனிவரிடம் கொடுத்தார். முனிவர் அதை ஆகாசராஜனிடம் கொடுத்து திருமணத்தை நடத்தச் சொன்னார். அதனை தொடர்ந்து, பத்மாவதி தோன்றிய நாராயண வனத்தில் ஒரு நன்னாளில் ஸ்ரீநிவாசன் - பத்மாவதி திருமணம் நடந்தது. இத்திருமணத்தில் தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் இருவரையும் வாழ்த்தினர்.

திருமால், மகாலட்சுமி பிரிவுக்குக் காரணமான பிருகு முனிவரும் இந்த திருமணத்திற்கு வந்து கலந்து கொண்டு, மணமக்களிடம் மன்னிப்பு கோரினார். திருமாலும் மகாலட்சுமியும் அவரை மன்னித்தனர்.

-திருமணம் தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us