தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 29

சித்தர்களின் விளையாட்டு - 29

சித்தர்களின் விளையாட்டு - 29


ADDED : மே 28, 2026 11:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 11:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாபாஜி சித்தர்

“சித்தர்கள் இறவாவரம் பெற்ற போதிலும் இறப்பை விரும்பி ஏற்கிறார்களே! அவர்களின் ஆன்மாவுக்கு அழிவில்லை என்றாலும், சித்தர்கள் தங்களை எப்படி முக்தி நிலைக்குக் கொண்டு செல்கிறார்கள்?” எனப் புரியாமல் கேட்டார் நாரதர்.

மகேஸ்வரர் புன்னகைத்தபடி, “நாரதரே! உடலுக்குத்தான் அழிவே தவிர, உயிருக்கு அல்ல. உயிரை சூக்கும ஆற்றலாக வைத்துக் கொண்டவர்கள் சித்தர்கள். எண் வகை சித்திகளைப் பெற்று ஐம்பூதங்களையும் நட்பாக்கிக் கொண்டனர். சூக்கும உயிரை எந்த துால உடலும் ஏற்றுக் கொள்ளும் சித்த வித்தையை கற்றுத் தேர்ந்தனர். ஆகையால்தான் தங்கள் உடலை வருத்தி முக்தி அடைகின்றனர். பின்னர் தங்களுக்கு ஏற்ற உடலுக்குள் புகுந்து மறுபிறவி எடுக்கின்றனர்” என விளக்கினார்.

மகேஸ்வரி தொடர்ந்தார். “சித்தர்கள் சமாதி நிலையில் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளனர். ஒளி ரூபமாக அனைவருக்கும் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றனர். சித்தர்களை தேடுபவர்களுக்கு ஒளி ரூபமாக காட்சியளிப்பது அவர்களின் உள்ளுணர்வில் தெரிய வரும். இதன் மூலம் சித்தர்களின் யோக மார்க்கத்தை அல்லது ஞான மார்க்கத்தைப் பின்பற்றித் தங்களின் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணிக்கிறார்கள். அப்படி ஒளி ரூபமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்தான் கிரியாயோகம் என்ற யோகக்கலையைப் படைத்த பாபாஜி'' எனச் சொல்ல நாரதர் ஆர்வமானார்.

சிதம்பரத்தை அடுத்த பறங்கிப்பேட்டையில் சுவேதநாதர், ஞானாம்பிகை தம்பதிக்கு பிறந்த குழந்தை நாகராஜ். சிறுவயது முதலே சுட்டிப் பையனாக விளங்கினார். தாயார் ஒரு நொடிப்பொழுதும் பிரிய முடியாத அளவுக்கு நாகராஜின் குறும்புத்தனம் அதிகமாகியது.

ஒருமுறை நாகராஜுக்கு தாய் உணவு ஊட்டினாள். அப்போது ஏதோ வேலையாக அவசரமாக வாசலுக்குச் சென்றுவிட்டு வந்தவர் அதிர்ந்தாள். முழு பலாப்பழத்தைப் பிய்த்து சுளைகளை நாகராஜ் தின்று கொண்டிருந்தார். இப்படி சாப்பிட்டால் வயிறு என்னவாகும் எனப் பயந்து போன தாய் நன்கு அடிக்க, நாகராஜ் பேச்சு மூச்சின்றி மயங்கி கீழே சாய்ந்தார்.

தாய் பதறிப் போய் “ஐயோ! அடித்து விட்டேனே! குழந்தைக்கு என்னாச்சோ!” எனக் கண்ணீர் விட்டாள். அடுத்த நொடியே புன்சிரிப்புடன் கண் சிமிட்டியபடி எழுந்த நாகராஜன், “தாயே! இந்த உலகம், குடும்பம், பாசம், பற்று அனைத்தும் மாயை. எப்போது பாசம் என்ற மாயையை விட்டு விலகுகிறோமோ அப்போது தான் கடவுளை அறியலாம்” என உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.

குழந்தைக்கு தெய்வீக ஆற்றல் இருப்பதை உணர்ந்த தாய் கண்ணும், கருத்துமாகக் கவனித்துக் கொண்டாள். குழந்தைக்கு ஐந்து வயது நெருங்கும் போது அருகிலுள்ள கிராமத்தில் நடந்த திருவிழாவிற்கு நாகராஜை அழைத்துச் சென்றாள். சுட்டிப் பையனான நாகராஜன் தாயின் கைப்பிடியை விட்டு அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருந்தார். அப்போது தான் அந்த விபரீதம் நிகழ்ந்தது.

அங்கிருந்த கயவன் ஒருவன் சுட்டித்தனமாக விளையாடும் குழந்தையைப் பிடித்து, வேறு ஊரில் விற்றால் பணம் சம்பாதிக்கலாம் என நினைத்தான். உடனே நாகராஜின் வாயைப் பொத்தி, ஒரு போர்வையில் சுற்றி, படகில் ஏற்றிக் கொண்டு வடநாட்டைச் சென்றடைந்தான். அங்கே குழந்தை இல்லாமல் தவித்த ஒரு பணக்காரரிடம் நல்ல விலைக்கு நாகராஜை விற்றுவிட்டான்.

தெய்வ ஆற்றல் பெற்ற நாகராஜன் தன்னை கடத்தியதை அறிந்திருந்தாலும் வெளியே காட்டாமல் அந்த பணக்காரரின் குழந்தையாக பிரியத்துடன் நடக்க ஆரம்பித்தார். நாட்கள் செல்லச் செல்ல அந்த பணக்காரருக்கு நாகராஜின் தெய்வீக ஆற்றல் தெரிய ஆரம்பித்தது. அங்கிருந்த ஞானிகளிடம் ஆன்மிகக் கல்வி கற்க அனுப்பினார். அந்த ஞானிகள் பாரத தேசத்துப் புனித நுால்களையும், வேதங்களையும் கற்றுக் கொடுத்தனர்.

கல்வியில் நாட்டம் இருந்தாலும் அவற்றின் மூலம் தன்னால் முழு ஞானம் பெற முடியாது என்பதை நாகராஜ் தெரிந்து கொண்டார். வளர்ப்புத் தந்தையிடம் விடைபெற்று பெற்றோரைத் தேடி வந்தார். அவர்களின் ஆசியுடன் பழநி மலைக்கு வந்தடைந்தார்.

பழநியில் போகரிடமும், சிதம்பரத்தில் திருமூலரிடமும் யோகக் கலைகளைக் கற்றுத் தேர்ந்தார். போகரின் அறிவுரையால் முருகப்பெருமான் மீதுள்ள பற்றால் நாகராஜர் கதிர்காமத்துக்குச் சென்று தீட்சை பெற்றார். அகத்தியரை குருவாக வேண்டி பொதிகைமலை வந்தடைந்தார். யோக நிலையில் 48 நாள் கடும் தவம் இருந்தார்.

நாகராஜின் முயற்சி, யோக ஆற்றல், பக்தி ஆகியவற்றைக் கண்டு நெகிழ்ந்த அகத்தியர் பிரணாயாம பயிற்சியின் உச்சகட்டமான குண்டலினி பயிற்சியை கற்றுக் கொடுத்தார். பின் நாகராஜிடம், “சீடரே! தங்களுக்கு ஒளியை கட்டுப்படுத்தும் திறமை உள்ளது. தாங்கள் இமயமலை சென்று கைலாயத்தில் இருக்கும் சிவனை நோக்கித் தவம் செய்து ஒளி உடம்பை பெறுங்கள்” என ஆசீர்வதித்தார்.

தன் குரு அகத்தியரின் ஆணைப்படி பத்ரிநாத் சென்ற நாகராஜ் அங்கு சிவனை வேண்டி தவம் இருக்க ஆரம்பித்தார். அவரைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றியதைக் கண்ட மக்கள் நாகராஜை “மகா அவதார்” என போற்றி வணங்கினர்.

தனது குண்டலினி யோகக் கலையை அனைவருக்கும் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். வடநாட்டு மக்கள் நாகராஜை “பாபாஜி” “சிவராஜ்” என பெருமையுடன் அழைத்தனர். யோகக்கலைகளின் ஐந்து நிலைகளான ஹதம், குண்டலினி, தியானம், மந்திரம், பக்தி ஆகியவற்றை முறையே செய்யும் “கிரியாயோகம்” என்ற யோகத்தை வடிவமைத்தார்.

கிரியா யோகத்தைப் பின்பற்றி கடவுளை வணங்கி, மெய்யறிவுடன் ஆன்மாவை இணைத்து ஞான முக்தி பெறலாம் என்பதை விஞ்ஞான பூர்வமாக விளக்கினார். கிரியா, பிரணாயாமம், குண்டலினி ஆற்றல் மூலமாக மனதை ஒருநிலைப்படுத்தி, முதுகுத்தண்டு வாயிலாக எந்தவித உடல் இயக்கமும் இல்லாமல் அனைத்து உறுப்புகளையும் ஆறு ஆதாரங்கள் வழியாகச் செயல்படுத்தி சகசர (சகஸ்ராரா) சக்கரத்தை இயக்க முடியும் என நிரூபித்ததால் பாபாஜியின் கிரியா யோகம் உலக நாடுகளில் பிரபலம் பெற்றது.

ஆறறிவு மனிதர்கள் நொடி, நிமிடம், மணி, நாள், மாதம், வருடம், யுகம், என காலக்கணக்கு வைத்திருக்கிறார்கள். அதே போல் ஓரறிவு முதல் ஐந்தறிவு ஜீவன்களும் தங்களுக்குள் ஒரு காலக் கணக்கை வைத்திருக்கின்றன. சாதாரண பூச்சி ஏழு நாள் உயிர் வாழ்வது மனிதர்கள் எழுபது ஆண்டு வாழ்வதற்குச் சமம்.

அடுத்த பிறவியில் வேறு வேறு உரு எடுப்பதன் மூலம் வாழ்நாட்களை பல்லாயிரம் ஆண்டுகள் அதிகரிக்கலாம் என்ற காலக்கணிதத்தைப் பாபாஜி அனைவருக்கும் கற்றுக் கொடுத்தார். இமயமலை உச்சியில் கடும் பனியில் சாதாரண மனிதர்கள் வாழ முடியாத இடத்தில் 18 மாதங்கள் தவமிருந்து யோக சாதனை செய்து தனது உடம்பைப் பொன் நிறத்தில் ஒளி உடம்பாக மாற்றினார். கடுந்தவத்தில் ஆழ்ந்திருந்த பாபாஜியின் தலைமுடி செம்பு நிறத்தில் மாறியது.

கண்கள் ஒளி வீசத் தொடங்கின. அவர் உடல் ஒளிமயமாக மாறியது. அவர் தியானம் செய்யும் இடத்தில் நிழல் விழாததைக் கண்ட அவரது பக்தர்கள் ஒளி ரூபமாக முக்தியடைந்த பாபாஜி இன்றும் ஒளிப்பிழம்பாகக் காட்சியளிப்பதை எண்ணி அவரை வணங்குகின்றனர்.

யோக சாதனையான கிரியா யோகப் பயிற்சி மூலம் தெய்வீக உணர்வை எழுப்பி, ஆயுளை நீட்டித்து நோயின்றி வாழும் அற்புதங்களை கற்றுக் கொடுத்து ஒளி உடம்பால் பத்ரிநாத்தில் இன்றும் வாழ்கிறார் என்பதை தெரியப்படுத்திய தங்களின் பாதம் பணிகிறேன்'' என்றார் நாரதர்.

-விளையாட்டு தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us