ADDED : மே 28, 2026 11:35 AM

ஒரு ஊரில் அருகருகே இரண்டு பால்காரிகள் வசித்தனர். ஒருத்தி பணக்காரி. ஐந்து பசுக்கள் வைத்திருந்தாள். ஆடம்பரமாக செலவழிப்பாள். நேர்மை இல்லாத அவளிடம் பக்தி சிறிதும் இல்லை. இன்னொருத்தியிடம் ஒரே ஒரு பசு தான் இருந்தது.
கிருஷ்ண பக்தையான அவள் கிடைத்த சொற்ப வருமானத்தில் சிக்கனமாக குடும்பம் நடத்தினாள். பணக்காரிக்கு அடுத்தவர் பொருளைக் கவர்வதில் அலாதி பிரியம். ஏழை பால்காரியிடம்,“என் வீட்டு மாடுகள் தரும் பால் போதவில்லை. தினமும் கொஞ்சம் பால் கொடு. நீ கேட்கும் போது மொத்தமாக திருப்பித் தருகிறேன்” என்றாள்.
அப்பாவியான ஏழை பால்காரியும் சம்மதித்தாள். ஒருநாள் ஏழை பால்காரியின் மாடு நோய்வாய்ப்பட்டு படுத்தது. அதனால் பால் கறக்க முடியவில்லை. அதனால் பணக்காரியிடம் போய், ''அக்கா! இதுவரை முப்பது படி பால் தந்துள்ளேன். அதை தினமும் ஒருபடி வீதமாக திருப்பித் தந்தால், என் குடும்பத் தேவையை சமாளித்து விடுவேன். அதற்குள் பசுவும் குணமாகி விடும்” என்றாள். பணக்காரி ஏமாற்று வித்தையைக் காட்ட முடிவெடுத்தாள்.
''பஞ்சப்பராரியான உன்னிடம் பால் வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. பொய் சொல்கிறாயா... உன்னை என்ன செய்கிறேன் பார்'' எனச் சொல்லி பஞ்சாயத்தாரிடம் புகார் செய்தாள். ஏழை பால்காரியோ கோயிலுக்குச் சென்று கிருஷ்ணரிடம் முறையிட்டாள்.
ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பார்களே... பணக்காரியான என்னை உன்னால் என்ன செய்ய முடியும் என ஏளனம் செய்பவளுக்கு கிருஷ்ணா... நீயே பாடம் புகட்ட வேண்டும். கோவிந்தா என அழைத்த திரவுபதிக்காக ஓடிவந்தாயே... இந்த அபலைக்காக வர மாட்டாயா என அழுதாள்.
கண்ணீருடன் அவள் பிரகாரத்தை வலம் வந்த போது,'கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா... கிருஷ்ணா' என்ற பாடல் ஒலித்தது. 'எனக்கு நீதி வேண்டும் என கேட்கிறேன்... கொடுப்பாயா' என மனதிற்குள் எண்ணியபடி வீட்டுக்கு புறப்பட்டாள். நீதிபதி இருவரையும் விசாரித்தார். அவர்களுக்கு சோதனை ஒன்றை வைக்க முடிவு செய்தார்.
“இதோ இங்குள்ள கிணற்றடிக்கு செல்லுங்கள். அங்கு பத்து செம்பு தண்ணீர் வைத்திருக்கிறேன். ஆளுக்கு ஐந்து செம்பு நீர் எடுத்து கால்களை சுத்தம் செய்து கொள்ளுங்கள்” என்றார். பணக்காரி ஐந்து செம்பு தண்ணீரையும் கடனே எனக் காலில் ஊற்றி விட்டு திரும்பினாள். ஏழையோ ஒரு செம்பு தண்ணீரில் கால், கைகளை கழுவி விட்டு, நான்கு செம்பு தண்ணீரை அப்படியே விட்டு விட்டாள்.
''ஏழைப்பெண் சிக்கனமானவள் என்பதை நிரூபித்து விட்டாள். பணக்காரியோ ஐந்து செம்பு தண்ணீரைக் காலி செய்ததன் மூலம் ஆடம்பரமாக செலவழிப்பவள் என்பது தெரிகிறது. பணக்காரியே தண்டனைக்குரியவள். ஐந்து மாடுகள் இருந்தாலும் ஆடம்பரமாக செலவழித்தால் கடன் வாங்க நேரிடும்'' எனத் தீர்ப்பளித்தார் நீதிபதி. நேர்மை தோற்பதில்லை என்பது நிஜம் தானே...
