ADDED : மே 28, 2026 11:42 AM

சிவபூஜையின் போது தவறு செய்யும் முனிவர்களை சிறை பிடித்தது கற்கிமுனி என்ற பூதம். ஆயிரம் முனிவர்களை சிறை பிடித்து அவர்களை விழுங்க வேண்டும் என்பது அதன் நோக்கம். ஒருவழியாக 999 முனிவர்கள் அகப்பட்டனர்.
இன்னும் ஒருவரைப் பிடிக்க பூதம் காத்திருந்தது. இந்த சமயத்தில் திருப்பரங்குன்றம் வந்தார் நக்கீரர். சரவணப் பொய்கையில் நீராடிய அவர் ஒரு ஆலமரத்தடியில் சிவபூஜை செய்தார். அந்த மரத்தின் இலைகள் காற்றில் உதிர்ந்தால் பறவையாகவும், நீரில் விழுந்தால் மீனாகவும் மாறி விடும் தன்மை கொண்டவை.
நக்கீரர் பூஜை செய்த நேரத்தில் ஆலிலை ஒன்று நீரில் பாதியும், தரையில் பாதியுமாக விழுந்தது. ஒரு பாதி மீனாகவும், மறு பாதி பறவையாகவும் மாறி ஒன்றையொன்று இழுத்தது. இந்த அதிசயம் கண்ட நக்கீரர் பூஜையை மறந்து வேடிக்கை பார்த்தார். இது தான் சமயம் என பூதம் அவரைப் பிடித்து சிறையிட்டது. அங்கிருந்த 999 முனிவர்களும், “நக்கீரரே... ஆயிரத்தில் ஒருவர் குறைவாக இருந்ததால் இதுவரை உயிருடன் இருந்தோம். இப்போது எண்ணிக்கை ஆயிரம் ஆனதால் பூதத்துக்கு இரையாகப் போகிறோம்” என வருந்தினர்.
உடனே முருகன் மீது 'திருமுருகாற்றுப்படை' பாடினார் நக்கீரர். அங்கு தோன்றி பூதத்தைக் கொன்று முனிவர்களை முருகப்பெருமான் காப்பாற்றினார். பூதம் தன்னைத் தீண்டியதால் ஏற்பட்ட பாவம் தீர நக்கீரர் கங்கையில் நீராட விரும்பினார். வேலால் இங்குள்ள பாறையைக் கீறிய முருகன் தீர்த்தத்தை வரவழைத்தார். பாவம் விலக அதில் நீராடிய நக்கீரர் முருகனை வணங்கினார். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள பஞ்சாட்சர பாறையில் இத்தீர்த்தம் உள்ளது.
