ADDED : ஆக 09, 2024 09:13 AM

மனசே... மனசே
ராமசாமி தாத்தாவிடம், ''தியானத்தால் கிடைக்கும் நன்மை பற்றி சொன்னீங்க. தியானம் செய்யாதவன் எப்படி செயல்படுவான்? அவனது மனநிலை என்ன என்பது பற்றி பகவத் கீதை, திருக்குறள் என்ன சொல்கிறது'' எனக் கேட்டான் கந்தன்.
பகவத்கீதையின் இரண்டாம் அத்தியாயம் 67வது ஸ்லோகம், திருக்குறளில் 838வது குறள் இது பற்றி சொல்கிறது.
இந்த்³ரியாணாம் ஹி சரதாம் யந்மநோ5நுவிதீ4யதே|
தத³ஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்ப 4ஸி ||2-67||
நீரில் மிதக்கும் ஓடமானது, காற்று அடிக்கும் திசை நோக்கி செல்வது போல பேராசை கொண்ட மனிதன் கவர்ச்சியால் ஈர்க்கப்படுவான். அவனது புத்தி செயலற்று போகும்.
புலன்களை அடக்கப் பழக வேண்டும். இல்லாவிட்டால் காற்று அடிக்கும் திசை நோக்கி செல்லும் படகு போல மனம் போன வழியில் புத்தி போகும். புலன்கள் அதனதன் போக்கில் மனிதனை இழுத்தால் வாழ்வு என்னாகும்?
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.
அறிவு இல்லாதவன் (முட்டாளின்) கையில் பொருள் கிடைத்தால் அவன் நிலைமை என்னாகும் தெரியுமா... பைத்தியம் பிடித்த ஒருவன் கள்ளைக் குடித்தது போல மயக்கத்திற்கு ஆளாவான் என்கிறார் திருவள்ளுவர்.
புலன்களை கட்டுப்படுத்தா விட்டால் பார்க்க கூடாததை பார்க்க விரும்பும். கேட்க கூடாததை கேட்க விரும்பும். மனம் போன போக்கில் செல்பவனின் வாழ்வு விழலுக்கு இறைத்த நீராகும். மனம் என்னும் யானையைக் கட்டுப்படுத்தும் அங்குசமே தியானம்.
-தொடரும்
எல்.ராதிகா
97894 50554