
விவசாயி ஒருவர் தன் மகனுக்கு தினமும் கதையின் மூலம் உபதேசம் செய்வார். அவனும் ஆர்வமாக கேட்பான். ஒருநாள், ''நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கடவுள் பார்த்தபடி இருக்கிறார். அவர் கண்ணில் இருந்து யாரும் தப்ப முடியாது'' என்றார்.
''அப்பா...கடவுள் எல்லா இடத்துலயும் இருக்கார்னு சொல்ற... ஆனா என்னால பார்க்க முடியலையே'' என்றான்.
''அது அப்படித்தானப்பா... உன்னால் பார்க்க முடியாது. ஆனால் அவர் நம்மை பார்த்துட்டிருக்கார்''
இந்த பதில் சிறுவனை யோசிக்க வைத்தது.
சில ஆண்டுக்குப் பிறகு அந்த ஊரில் பஞ்சம் நிலவியதால், பலரும் வெளியூருக்குச் சென்றனர். ஆனால் விவசாயியோ போக விரும்பாமல் இருக்கும் தானியத்தைச் சிக்கனமாகச் செலவழித்து குடும்பத்தை நடத்தினார். ஒரு கட்டத்தில் உணவுக்கு வழி இல்லை.
என்ன செய்வதென முழித்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து ஊர் விவசாயியின்
வயலில் அறுவடைக்கு சோளம் தயாராக இருப்பதைக் கேள்விப்பட்டார். அன்றிரவு அரிவாள், சாக்குப்பையுடன் புறப்படத் தயாரானார். கண் விழித்திருந்த மகன், ''இந்த நேரத்தில் எங்கேப்பா கிளம்புறீங்க?'' எனக் கேட்டான். விவசாயியோ மவுனமாக நின்றார். ஆனால் மகன் விடுவதாக இல்லை. தந்தையுடன் அவனும் கிளம்பினான். பக்கத்து கிராமத்தில் உள்ள சோள வயலை அடைந்தனர். அங்கிருந்த மரம் ஒன்றில் இருவரும் ஏறினர்.
''என்னப்பா செய்யப் போறீங்க?''
''உஷ்'' என சிறுவனை அடக்கினார். ஆள் நடமாட்டம் இல்லை என தெரிந்த பின் மெல்லிய குரலில், ''நான் சோளத்தை அறுக்கிறேன்.. நீ இங்கே இருந்து யாராவது வந்தா என்னை உஷார்படுத்து'' என சொன்னார். சோளத்தை அறுக்க விவசாயி அரிவாளை ஓங்கிய போது, ''உஷாரையா உஷாரு'' என மெல்லிய குரலில் பாடினான்
பதறிய விவசாயி ''என்னாச்சு?'' என்றார்.
''ஒருத்தர் பாக்குறாருப்பா...''
இதைக் கேட்ட உடனே மரத்தில் ஏறிய விவசாயி நாலாபுறமும் பார்த்த போது யாருமில்லை.
''யாருப்பா பார்த்தா...''
''அன்னிக்கு நீங்க சொன்னீங்கல்ல? கடவுள் நம்மை பாத்துக்கிட்டு இருக்கார்ன்னு. அப்படின்னா... இப்ப திருடறதையும் பாத்துக்கிட்டுதானே இருப்பார்'' என்றான் மகன்.
இதைக் கேட்ட விவசாயி தலைகுனிந்தபடி வீட்டுக்கு அவனுடன் புறப்பட்டார்.