sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 8

/

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 8

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 8

சொல்லச் சொல்ல இனிக்குதடா - 8


ADDED : ஆக 09, 2024 07:48 AM

Google News

ADDED : ஆக 09, 2024 07:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விராலிமலை



புத்தகத்தை புரட்டிய கொள்ளுப் பேரன் அமுதன் அதில் இருந்த மயிலிறகை பார்த்ததும், 'ஐ... மயில் குட்டி போட்டிருக்கு' எனத் துள்ளினான். அதை கையில் எடுத்ததும் ஞாபகம் வர, “பாட்டி... மயில் கதை சொல்றேன்னு சொன்னீங்களே'' எனக் கேட்டான்.

“வீட்டுப்பாடத்தை முடிச்சுட்டு வா. உனக்கு சொல்றேன்” என்றார் பாட்டி. வீட்டுப் பாடத்தை முடித்ததும் பாட்டியின் எதிரில் மயிலிறகுடன் வந்து அமர்ந்தான் அமுதன்.

கொஞ்சியபடி பாட்டி, “அமுதா... உன்ன மாதிரியே சிரிச்ச முகத்தோட மலை மீது முருகன் இருக்கிற இடம் தான் விராலிமலை. மயில் நடமாட்டம் அதிகம் உள்ள இடம் இது. மயில் சரணாலயமாவும் முன்பு இருந்துச்சு. இந்த கோயில்ல தெற்கு பார்த்து இருக்கும் மயிலை அசுர மயில்னு சொல்வாங்க. மலையின் உச்சியில் மரங்களுக்கு நடுவுல இந்த கோயில் அழகா அமைஞ்சிருக்கு.”

“என்ன மரம் பாட்டி?”

“ஒரு காலத்துல குராவனமாக மலை இருந்துச்சு. வேடன் ஒருவன் புலியை விரட்டி வந்த போது ஒரு மரத்தடியில் புலி காணாமல் போச்சு. அந்த இடத்துல தெய்வ சக்தி இருப்பதை வேடன் உணர்ந்தான். அவனுக்கு காட்சியளித்த முருகன் அவனுக்கு ஆசி வழங்கினார். சண்முகநாதன் என்ற பெயரில் இங்கு கோயில் கொண்டார். யோகிகள், சித்தர்கள் வாழ்ந்த குகைகள் இப்பவும் இருக்கு. இங்குள்ள முருகனை வழிபட்டால் பாவம் தீரும். திருச்சி வயலுாருக்கு வந்த அருணகிரிநாதரிடம் 'விராலி மலைக்கு வா' என முருகன் அழைத்தார். அருணகிரிநாதர் அஷ்டமாசித்தி(எட்டு வகை மந்திர வித்தைகள்) பெற்றது இங்குதான். கூடு விட்டு கூடு பாயும் வித்தை கற்றதும், 18 திருப்புகழ் பாடல்களை பாடியுள்ளார்.

மாயா சொரூப முழுச்ச மத்திகள்ஓயா வுபாய மணப்ப சப்பிகள்

வாணா ளையீரும் விழிக்க டைச்சிகள் முநிவோரும்

மாலா கிவாட நகைத்து ருக்கிகள்

எப்படி தமிழில விளையாடி இருக்கார் அருணகிரி” என்றாள் பாட்டி.

“ஆமாம் பாட்டி நீ சொல்லும்போதே தெரியுது” என்றான் யுகன்.

“இந்த கோயிலில் எங்கும் இல்லாத விசித்திர படையல் உண்டு”

“அது என்ன பாட்டி?”

“சுருட்டு”

“சுருட்டா?”

“ஆமா சுருட்டே தான். இதன் பின்னணியைச் சொல்றேன் கேளு. குமாரவாடி ஜமீனைச் சேர்ந்தவர் கருப்பமுத்து. வெள்ளிக்கிழமையன்று முருகனை தரிசிக்காம இருக்க மாட்டார். ஒருமுறை விராலிமலை வந்த போது கனமழை பெய்தது. மேட்டுப்பாங்கான இடத்தில ஒதுங்கினார். மழை விட்டபாடில்லை. குளிரில் நடுங்க ஆரம்பிச்சார். புகைக்க ஒரு சுருட்டு கூட இல்லையே என அவர் வருந்திய போது முருகனே நேரில் தோன்றி சுருட்டு கொடுத்தார். இதன்பின் பூஜைப்பொருளில் சுருட்டு இடம் பெற்றது.

“புகைப்பது கூடாதே...என்ன பாட்டி?”

“உன்ன மாதிரி தான். புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் கோயிலில் சுருட்டு படைக்கக் கூடாதுன்னு உத்தரவு இட்டார். அன்றே மன்னருக்கு வயிற்று வலி வந்தது. அவரின் கனவில் தோன்றிய முருகன் சுருட்டு கூடாது என நீ சொன்னதே வயிற்றுவலிக்கு காரணம் என்றார். இதன்பின் தடையை நீக்கினார் மன்னர்.”

''அட ஆச்சரியமா இருக்கே”

“இன்னொரு ஆச்சரியம் இங்கிருக்கு. அந்த காலத்து குழந்தைகளிடம் 'உன்ன தவிட்டுக்கு வாங்கினேன்' என சொல்வதுண்டு. இந்த வழக்கம் விராலிமலையில் இருந்து வந்தது தான்”

“அப்படியா?”

“முருகன் அருளால் குழந்தை வரம் பெற்றவர்கள் கோயிலுக்கு வருவாங்க. குழந்தையை அர்ச்சகரிடம் ஒப்படைத்து விட்டு குழந்தையின் தாய்மாமன் மூலம் காணிக்கையாக தவிடு கொடுப்பாங்க. பின்னர் முருகனின் முன் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் சடங்கு இங்கு மிக பிரபலம்.”

“ம்... விராலி மலையால பலரும் தவிட்டுப் பிள்ளையாகி இருக்காங்க போல! ஆமா இந்த ஊரு எங்க இருக்கு பாட்டி?”

“புதுக்கோட்டை மாவட்டம் தான். திருச்சியில் இருந்து 30கி.மீ., தொலைவில் இருக்கு. 1500 ஆண்டுகள் பழமையான இக்கோயில் சோழர் காலத்தைச் சேர்ந்தது. வள்ளி தெய்வானையுடன் மயில் மீது ஆறு முகத்துடன் முருகன் காட்சி தருகிறார். பால், பழம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால அபிஷேகம் செய்யப்படுகிறது”

'பலவித திரவியங்களால் அபிஷேகம் செய்வதன் நோக்கம் என்ன' எனக் கேட்டான் பேரன் யுகன்.“அபிஷேகம் செய்வதால் ஒரே கல்லில் மூணு மாங்காய் அடித்த பலன் கிடைக்கும் கண்ணு. கோயில்களில் உள்ள சுவாமி சிலைகள் கல், மரம், பஞ்சலோகத்தால் ஆனவை. பால், நெய், தேன் போன்ற பொருட்கள் ஈரப்பதத்தை தக்க வைத்து கர்ப்ப கிரகத்தில் மின்னுாட்டம் (voltage) தடையில்லாமல் இருக்கச் செய்யும். இளநீர், சந்தனம் போன்ற பொருட்கள் சிலையில் வெடிப்பு வராமல் தடுக்கும். மஞ்சள், திருநீறு, குங்குமம் பூஞ்சை வராமல் தடுக்கும்”

“இரண்டாவது மாங்கா?”

''அந்தக் காலத்தில் அபிஷேக நீர் கோயிலில் உள்ள நந்தவனம் அல்லது விவசாயத்திற்கு பயன்படுமாறு வழி இருக்கும். அபிேஷகம் செய்யப்படும் ஒவ்வொரு பொருளும் மண்ணை வளப்படுத்தி மகசூலை பெருக்கும். இயற்கை விவசாயத்தின் அடிப்படையான பசுவின் மூலம் கிடைக்கும் பஞ்சகவ்யம் அபிஷேகத்தில முக்கிய இடம் பெறும்”

''அப்ப மூணாவது மாங்கா?”

“மலை, அருவி, கடலில் நடக்கும் ரசாயன மாற்றம் தான் கருவறையிலும் நடக்குது. வான்வெளியில் பரவியுள்ள பிராணசக்தி, கோயில் விமானத்தின் மூலம் ஈர்க்கப்பட்டு கருவறைக்குள் கடத்தப்படுகிறது. அது சுவாமி சிலையின் மூலமாக பாசிட்டிவ் எனர்ஜியாக (நேர்மறை ஆற்றல்) மாறும்.

அபிஷேகத்தின் போது அது, காற்று மண்டலத்தில் பரவும். பக்தர்களின் ஆன்மா, மனம், உடலில் அது கலக்கிறது. எல்லா இடத்திலும் மலை, கடல், அருவி இருக்காது. அதன் காரணமாகவே ஒவ்வொரு ஊரிலும் கோயில் கட்டினார்கள் நம் முன்னோர்கள். இதையே 'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' எனச் சொன்னாங்க. ஆக அபிஷேகத்தால கிடைக்கிற நன்மை இதுதான். அமுதா... இப்ப உனக்கு புரிஞ்சுதா”

“ஏதோ அறிவியல் வகுப்பு மாதிரி இருக்கு. ஆன்மிகம் சார்ந்த விஷயங்கள் காரண காரியமா ஏற்படுத்தி வச்சது புரியுது. இந்த விஷயத்தை எப்படி பாட்டி தெரிஞ்சுக்கிட்ட? உண்மையிலேயே நீ பெரிய ஆள் தான்” என பாட்டிக்கு திருஷ்டி கழித்தான் பேரன் யுகன்.

“அந்த முருகன் முன் நாம் சின்னவங்க தானப்பா. டே... அமுதா உனக்கு நேரமாச்சுல... சாப்பிடு கண்ணு”

“கூண்டில் ஏறி மயில் சாட்சி சொன்னதா சொன்னீங்க? மயில் எப்படி பேசும்?” மழலை மொழியில் கேட்டான் அமுதன்.

“ ஓ... மறந்துட்டேன் பாத்தியா! பல ஆண்டுக்கு முன் காரைக்குடியைச் சேர்ந்த பழநியப்பன் செட்டியார் மணப்பாறையில் மாடு வாங்கினார். விராலிமலை அடிவாரத்தில அந்த மாடு காணாமப் போச்சு. அந்த வழக்கில் ஒரு மயில் வந்து நீதிமன்றத்தில் சாட்சி சொல்லி இருக்கு. இது முருகனின் அருள் என்பதை உணர்ந்த அவர் திருப்பணிகள் செய்து கொடுத்தாரு. அவரோட சிலை இங்கிருக்கு”

''அடுத்த வாரம் எந்த கோயில் பாட்டி?”

“சிவன் மலை”

''முருகனை விட்டு சிவனுக்கு போயிட்டியே பாட்டி?”

“அது முருகன் கோயில் தான். சுவாரஸ்யம் நிறைஞ்ச தலம் இது. அடுத்த வாரம் வரை காத்திரு”.

-இன்னும் இனிக்கும்

பவித்ரா நந்தகுமார்



94430 06882






      Dinamalar
      Follow us