sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பச்சைப்புடவைக்காரி - 26

/

பச்சைப்புடவைக்காரி - 26

பச்சைப்புடவைக்காரி - 26

பச்சைப்புடவைக்காரி - 26


ADDED : ஆக 09, 2024 07:46 AM

Google News

ADDED : ஆக 09, 2024 07:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

  நடிகரின் துரோகம்

சுவாமி சன்னதியை வலம் வந்துகொண்டிருந்த போது எதிரில் நண்பர் வந்தார்.

“ஒரு பெரிய ஆளு உங்ககிட்டப் பேசணுமாம்”

நண்பர் சொன்ன பெயரைக் கேட்டு அதிர்ந்தேன். திரைப்பட உலகின் முன்னணி நடிகன் ரிஷி.ஒரு துாணுக்குப் பின்னால் தன் முகத்தைத் துணியால் மறைத்தபடி அமர்ந்திருந்த நடிகனின் முகத்தில் உலகத்தில் இருந்த சோகம் மொத்தமும் இருந்தது.

“ஒரு படம் தயாரிச்சிக்கிட்டிருக்கேன். எடுத்த வரைக்கும் பாத்தேன். நல்லா இல்ல. கோடிக்கணக்குல கடன் வாங்கிப் படத்துல போட்டிருக்கேன். பொண்டாட்டி டைவர்ஸ் கேஸ் போட்டிருக்கா. எனக்கு ரெண்டு பொண்ணுங்க. ரெண்டும் அம்மா பக்கம்தான் இருக்கு. இன்னும் சில மாசங்கள்ல தனியாளா, கையில காசு இல்லாம தெருவுல நிக்கப் போறேன்''

நான் பதில் சொல்வதற்குள் யாரோ என்னை அழைத்தார்கள்.

“சாமி, உன் பொருள அனாமத்தா வச்சிட்டு வந்திருக்கியே! எவனாச்சும் எடுத்துக்கிட்டுப் போயிட்டா?” கையில் துடைப்பத்துடன் ஊழியை நின்றிருந்தாள்.

அவள் சுட்டிக்காட்டிய இடத்தில் பொருள் எதுவும் இல்லை.

“பொருளைத் தேடுகிறாயோ?” ஊழியை யாரென்று புரிந்தது.

“நானே உங்கள் பொருள்தானே, தாயே! எனக்கென்று ஏது பொருள்?”

“அந்த நடிகனுக்கு உன் மூலம் வாய்ப்பு தர இருக்கிறேன். நடிகனை எடைபோடாதே. இப்போது அவனுக்குத் தேவை நீதி இல்லை. அன்பு. அதை உன் மூலம் தரப் போகிறேன்”

தாயை வணங்கி விட்டு நடிகனிடம் ஓடினேன்.

“உங்களுக்கு நடந்ததை மட்டும் சொன்னீங்க! நீங்க செஞ்சத சொல்லலையே”

“நான் என்ன செஞ்சேன்?”

“ஆமா, நீங்க சொல்லாட்டி பச்சைப்புடவைக்காரிக்குத் தெரியாது பாருங்க”

குரலை உயர்த்தியவுடன் கையைக் கூப்பினான் நடிகன்.

“தஞ்சாவூர் பக்கத்துல ஒரு கிராமத்திலருந்து சினிமா ஆசையால சென்னைப் பக்கம் ஒதுங்கினீங்க. ஒரு வருஷம் வாய்ப்பே கிடைக்கல. அந்தச் சமயத்துல கடவுள் மாதிரி உங்க வாழ்க்கையில நுழைஞ்சாரு டைரக்டர் சிவராமன். அவர்தான் உங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து தன் படத்துல கதாநாயகனா நடிக்க வச்சாரு. அந்தப் படம் நல்லா ஓடிச்சி. நீங்க கோடிக்கணக்குல சம்பாதிச்சீங்க. ஒரு கோடீஸ்வரனோட பொண்ணக் கல்யாணம் செய்தீங்க.“சிவராமனோட மனைவியோட உங்களுக்கு எப்படியோ தொடர்பு ஏற்பட்டுச்சு. சிவராமன் உங்க உறவ முறிச்சிக்கிட்டாரு. தன்னுடைய மனைவியை விவாகரத்து பண்ணிட்டாரு.

“இதை தெரிஞ்ச உங்க மனைவி உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கா. நீங்க பல பேருக்கு ஒரே சமயத்துல நம்பிக்கை துரோகம் செஞ்சீங்க. வினையை விதைச்சா வெண்டைக்காயா அறுவடையாகும்? வினையைத் தான் அறுவடை செய்யணும். செய்யறதயும் செஞ்சிட்டு கோயிலச் சுத்தினா சரியாயிருமா? உங்களத் தன்னோடக் கூடப் பிறந்தவனா மதிச்சி வீட்டுக்குள்ள அனுமதிச்ச சிவராமன்கிட்டயே புத்தியக் காட்டிட்டீங்களே!”

“இப்ப என்ன செய்யட்டும்? தங்கத்தேர் இழுக்கட்டுமா? மீனாட்சிக்குக் கல்யாண உற்ஸவம் பண்ணட்டுமா? விரதம் இருக்கட்டுமா? இல்ல, ஏதாவது புண்ணிய தலத்துக்கு யாத்திரை போகட்டுமா''

“முதலில் தப்புக்குப் பரிகாரம் செய்யுங்க. அதுக்கப்பறம்தான் மற்றதெல்லாம்”

“அதுதான் என்ன பரிகாரம் செய்யணும்னு கேக்கறேன்.”

“எங்க தப்பு செய்தீங்களோ அங்கதான் பரிகாரம் செய்யணும்.. சென்னையில தப்பு செஞ்சிட்டு செங்கல்பட்டுல பரிகாரம் தேடாதீங்க”

“என்னதான் செய்யறது?”

“டைரக்டர் சிவராமன் கால்ல விழுங்க. தப்பு பண்ணிட்டேன்னு அழுங்க. அவர் திட்டுவாரு. அவரு ஆளுங்க அடிச்சாலும் அடிப்பாங்க”

“ஐயையோ!”

“நீங்க செஞ்ச துரோகத்துக்கு உங்கள வெட்டிப்போட்டாலும் அது குறைச்சலான தண்டனைதான். பாவம், அவரும் இப்போ பணமுடையில இருக்காரு. உங்க சொத்த ஏதாவது அவருக்குக் கொடுங்க. அவர் படத்துக்கு காசு வாங்காம நடிச்சித் தரேன்னு சொல்லுங்க. அதுல உங்களுக்கும் பேர் கெடைக்கும். அவரது கஷ்டமும் தீரும்”

“எனக்கு பயமா இருக்கு சார்.”

“தப்பு செய்யும் போது பயந்திருக்கணும். பரிகாரம் செய்ய பயம் எதுக்கு? பச்சைப்புடவைக்காரி இன்னும் உங்க மீது நம்பிக்கை வச்சிருக்கா. அதனாலதான் என்னப் பேச வச்சிருக்கா”

நடிகனின் தோளில் ஆதரவாக தட்டி கொடுத்து விட்டுக் கிளம்பினேன்.

சுவாமி சன்னதியைச் சுற்றும் போது பெண் ஊழியர் வடிவில் தாயைப் பார்த்தேன்.

“என்ன நடக்கும் எனக் காட்டுகிறேன் பார்”

இயக்குனர் சிவராமனின் வீட்டு வரவேற்பறையில் ரிஷி நின்றிருந்தான். சிவராமனின் ஆட்கள் ரிஷியிடம்கேலியாகப் பேசினர். ரிஷி பதிலளிக்கவில்லை. ஒருவன் முகத்தில்

குத்த ரிஷி அலறினான். அவன் வாயிலிருந்து ரத்தம் வந்தது.

உள்ளிருந்து வந்த சிவராமன் தன் அடியாட்களை விலகிப் போகச் சொன்னார். நர்ஸ் போல் இருந்த ஒரு பெண் ரிஷியின் காயத்துக்கு மருந்திட்டாள்.

“இப்போ எதுக்குடா வந்த? உன்ன நம்பி வீட்டுல விட்டதுக்கு என் பெண்டாட்டியத் திருடிட்டியே... நன்றி கெட்ட நாயே!”

சிவராமனின் காலில் விழுந்தான் ரிஷி. அவர் கால்களை அழுந்தப் பற்றிக் கொண்டான்.

“சார், நீங்க இல்லேன்னா நான் இல்ல. ஏதோ வயசுக்கோளாறு. தெரியாம செஞ்சிட்டேன். மன்னிப்பு கேட்கக்கூட எனக்கு தகுதியில்லை. இது என்னுடைய அடையாறு பிளாட்டோட பத்திரம். உங்களுக்கே எழுதிக் கொடுக்கிறேன். இது தவிர நீங்க டைரக்ட் பண்ற படத்துல பணம் வாங்காம நடிச்சிக் கொடுக்கறேன், சார். உங்களுக்கு நான் செஞ்சது பெரிய துரோகம்தான் சார். திருந்தி வாழ வாய்ப்பு கொடுங்கன்னு உங்களத் தேடி வந்திருக்கேன்”

சிவராமன் ரிஷியைத் தூக்கி நிறுத்தி இறுகத் தழுவினார்.

“இதெல்லாம் இருக்கட்டும் ரிஷி. நீ ஏதோ படம் தயாரிக்கறயாமே, அது சரியா வரலேன்னு இண்டஸ்ட்ரில பேச்சு அடிபடுது. அத நான் பாக்கறேன். படத்த பட்டி டிங்கர் வேலை பாத்து வெளியிடுவோம். அப்புறம் அடுத்த படத்தை பத்தி யோசிக்கலாம்”

“இதேபோல மனைவியிடமும் மன்னிப்பு கேட்பான். அவளும் ஏற்றுக் கொள்வாள். அவன் தயாரித்த படம் நன்றாக ஓடும். அவன் நிறைவாக வாழ்வான். அவனை நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டும் எனச் சொல்”

“தாயே எனக்கு உண்ண உணவும் சுவாசிக்கக் காற்றும் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் பெயரைச் சொல்லியபடி செத்துப் போகிறேன். ஆனால் எந்தச் சூழலிலும் என்னால் யாரும் எந்த விதத்திலும் காயப்படக் கூடாது. அதை ஒரு தவமாகச் செய்யும் வாழ்க்கையை வரமாகக் கொடுங்கள்”தாயின் சிரிப்பு எங்கும் எதிரொலித்தது.

-தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com






      Dinamalar
      Follow us